jஅமித் ஷா வருகை: பாஜக மாநாடு ஒத்திவைப்பு!

public

அமித் ஷாவின் வருகையை அடுத்து, வரும் 7ஆம் தேதி நடைபெற இருந்த பாஜகவின் மந்திரமாலை தாமரை மாநாடு ஒத்திவைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை தீவுத் திடலில் வரும் 7ஆம் தேதி பாஜக சார்பில் மந்திரமாலை தாமரை மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா 9ஆம் தேதி சென்னை வரவுள்ளதால், மந்திரமாலை தாமரை மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை வரும் அமித் ஷா வரும் 9ஆம் தேதி காலை முதல் பாஜகவின் உயர்மட்டக் குழு உறுப்பினர்கள், பாராளுமன்ற, சட்டமன்றக் குழுக்களின் பொறுப்பாளர்கள், பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரைச் சந்திக்கிறார். மாலையில் சென்னை ஈஞ்சம்பாக்கம் வி.ஜி.பி கடற்கரை ரிசார்ட்டில் நிர்வாகிகள் மத்தியில் நாடாளுமன்றத் தேர்தல் குறித்துப் பேசுகிறார்.

இந்நிலையில் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் இன்று (ஜூலை 5) அமித் ஷாவின் வருகை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், “அமித் ஷாவின் பேச்சைக் கேட்டால் தமிழகம் முழுவதுமுள்ள நிர்வாகிகளும் தொண்டர்களும் உற்சாகமடைவர். இது ஒரு மிகப்பெரிய நிகழ்ச்சி, அரசியலில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும்.

தமிழக பாஜகவில் என்ன இருக்கிறது?, தாமரை மலராது என்று கூறுவதற்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்த நிகழ்ச்சி அமையும். ஏனெனில் முன்பு பல எம்.எல்.ஏ.க்களை பெற்றது போலவும், தற்போது தோல்வியடைந்துவிட்டது போலவும் பேசுகிறார்கள். பாஜக தமிழகத்தில் வளர்ச்சியடைந்துவரும் கட்சி. இன்றைய சவாலான சூழ்நிலையில் அடிமட்டத் தொண்டர்கள் வரை கட்சியை எடுத்துச் சென்று கொண்டிருக்கிறோம் என்பதை தேசியத் தலைவர் அமித் ஷா உணர்ந்திருக்கிறார்” என்று தெரிவித்தார்.

”ஏற்கனவே 40 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களைச் சந்தித்திருக்கிறேன். அவர்கள் அனைவரும் விஜிபி தங்க கடற்கரையில் அமித் ஷாவை சந்திக்க இருக்கிறார்கள். தமிழக அளவில் மட்டுமல்லாமல் இந்திய அளவில் பேசப்படும் நிகழ்ச்சியாக இருக்கும். பணம் கொடுத்து யாரையும் அழைத்து வர மாட்டோம். எங்கள் கட்சியில் ஐந்து வாக்குச்சாவடிகளில் பணி செய்து கொண்டிருப்பவர்களை மட்டும் அழைத்துள்ளோம். தமிழகத்தில் வேறு கட்சிகளால் இதனைச் செய்ய முடியாது” என்று குறிப்பிட்ட தமிழிசை, வெளித் தோற்றத்திற்காக யாரை வேண்டுமானாலும் வைத்துக் கூட்டத்தைக் கூட்டுவது எங்கள் நோக்கம் அல்ல. கட்சியில் பணியாற்றிக் கொண்டிருக்கும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்துகொள்ளும் மாபெரும் நிகழ்ச்சியாக இது இருக்கும்” என்றும் நம்பிக்கைத் தெரிவித்தார்.

தமிழகம் வரும் அமித் ஷா நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக தலைவர்கள் யாரையாவது சந்திக்க வாய்ப்புள்ளதா என்ற செய்தியாளரின் கேள்விக்கு, “இது கட்சி ரீதியான கூட்டம் மட்டும் தான். அரசியல் ரீதியான கூட்டம் கிடையாது. அதனால் கட்சி ரீதியான விவாதங்கள், கருத்துப் பரிமாற்றங்கள் மட்டுமே இருக்கும். அமைப்பு ரீதியான பலம் இருந்தால் தான் அரசியலை சந்திக்க முடியும். அதனால் அந்த அஸ்திவாரத்தைப் பலம் பொருந்தியதாக மாற்றிக்கொண்டு இருக்கிறோம்” என்று பதிலளித்தார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *