hஅதிமுகவுக்கு துணிச்சல் கிடையாது!: வைகோ

public

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் முடிவை மத்திய அரசு அறிவித்தால் மட்டுமே, பாஜக அரசுக்கு ஆதரவளிக்க முடியுமென்று 37 அதிமுக எம்பிக்களும் நிபந்தனை விதிக்க வேண்டுமெனக் கூறினார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.

நாடாளுமன்ற மக்களவையில் நேற்று (மார்ச் 16) பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவை மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவர, ஆந்திராவிலுள்ள ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சிகள் கோரிக்கை விடுத்தன. ஒரே நேரத்தில் இரண்டு நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவது சாத்தியமில்லை என்று கூறி, அதற்கு அனுமதி மறுத்தார் சபாநாயகர் சுமித்ரா மகாஜன். இதனையடுத்து ஆந்திரா மற்றும் தெலங்கானா எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால், மக்களவை நேற்று முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. வரும் திங்கள் கிழமையன்று (மார்ச் 19), இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீண்டும் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிகிறது.

இந்த நிலையில் சென்னையில் இன்று (மார்ச் 17) செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரிக்கும் துணிச்சல் அதிமுகவுக்குக் கிடையாது என்று தெரிவித்தார். “நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு ஆதரவு கொடுங்கள் என்று சொன்னால், அதிமுக உடனே ஆதரவு அளிக்கப் போவதில்லை. கட்சியே உடைந்து கொண்டிருக்கிற சூழலில், அதனைப் பாதுகாக்க வேண்டிய நிலையில், அந்த ரிஸ்க்கை அவர்கள் மேற்கொள்ள மாட்டார்கள்.

ஆனால், இப்படியொரு வாய்ப்பு, இனி தமிழகத்திற்கு வாய்க்காது. 37 எம்பிக்கள் தற்போது அதிமுகவில் இருக்கின்றனர். இந்த கட்சியின் தயவில்தான், இந்த ஆண்டு முழுவதும் மோடியின் பாஜக அரசு ஆட்சி நடத்தியாக வேண்டும். எனவே, அதிமுகவின் ஆதரவு வேண்டுமானால் காவிரி மேலாண்மை அமையுங்கள் என்று, மத்திய அரசுக்கு அக்கட்சியினர் நிபந்தனை விதிக்க வேண்டும். இதைச் செய்தால், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நல்ல பெயர் கிடைக்கும்” என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய வைகோ, பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் மத்தியில் ஆட்சி அமையாது என்றும், காவிரி டெல்டாவை அழிக்க மத்திய அரசு தற்போது முயற்சிக்கிறது என்றும், அதனைத் தடுக்க அதிமுக ஏதேனும் செய்தாக வேண்டுமென்றும் தெரிவித்தார்.

”நீங்கள் (எடப்பாடி பழனிசாமி) தொடர்ந்து ஆட்சி செய்வீர்கள் என்றோ, முதலமைச்சராக இருப்பீர்கள் என்றோ உத்தரவாதம் கிடையாது. உங்களது காலத்தில், ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு நன்மை செய்தோம் என்று நினைத்துச் செய்யுங்கள். உங்களால் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரிக்க முடியாது; அதனால், நடக்காத ஒன்றைச் சொல்லிப் பயனில்லை. ஆனால், இந்த நிபந்தனைக்கு ஒத்துக்கொண்டால் மட்டுமே ஆதரிப்போம்; இல்லையென்றால் ஆதரிக்க மாட்டோம் என்று சொல்லுங்கள். மொத்த தமிழ்நாடும் உங்களை வாழ்த்தும்” என்று கூறினார் வைகோ.

மேலும், காவிரி நதிநீர்ப் பங்கீடு வழக்கில் தமிழகத்திற்கு மிகப்பெரிய பாதிப்பை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா உண்டாக்கியதாகக் குறிப்பிட்ட வைகோ, இதனைச் சொல்வதற்காக நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் எதிர்கொள்ளத் தயார் என்று பேசினார்.

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *