பள்ளிகளில் கூடுதல் கட்டணமா? : ஆய்வு நடத்த உத்தரவு!

Published On:

| By Balaji

அரசுப் பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கழகக் கட்டணம் தவிர்த்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா எனப் பள்ளிகளில் ஆய்வு நடத்தி, அறிக்கை அளிக்க பள்ளிக் கல்வி துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் முரளிதரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கொன்று தொடர்ந்திருந்தார். அதில், அரசுப் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கும்போது விண்ணப்ப கட்டணமாக 10 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை வசூலிக்கலாம். ஆனால், செங்கல்பட்டு மாவட்டம், அனகாபுத்தூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரைக்கும் மாணவர் சேர்க்கை விண்ணப்ப கட்டணமாக 100 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. கட்டணம் வசூலித்த தலைமை ஆசிரியை ஜீவா ஹட்சனை பணிநீக்கம் செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு இன்று(ஜூலை 17) நீதிபதி கிருஷ்ணகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கழகம் நிர்ணயித்த கட்டணத்தை தவிர கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? என்ற நீதிபதியின் கேள்விக்கு,

கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தலைமை ஆசிரியர்கள்மீது நடவடிக்கை எடுக்க சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாக பள்ளிக் கல்வி ஆணையர் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, இந்த சுற்றறிக்கையை அனைத்து பள்ளிகளின் அறிவிப்பு பலகையில் ஒட்ட வேண்டும். மேலும், கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என பள்ளிகளில் ஆய்வு நடத்தி, பள்ளிக் கல்வி ஆணையருக்கு அறிக்கை அளிக்க முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும், மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டார்.

மாவட்ட வாரியாக அறிக்கைகளைப் பெற்று, அதன் அடிப்படையில் பள்ளிக் கல்வி ஆணையர், ஜூலை 27ஆம் தேதி அறிக்கையை சமர்பிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை தள்ளிவைத்தார்.

**-வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share