பருத்தி இறக்குமதிக்கு சுங்க வரி முழுமையாக ரத்து!

Published On:

| By admin

தற்போது பஞ்சு இறக்குமதிக்கு 5 சதவிகித அடிப்படை சுங்க வரியும், 5 சதவிகித வேளாண்மை உள்கட்டமைப்பு மேம்பாட்டு வரியும் விதிக்கப்படுகின்றன. இந்த நிலையில் வருகிற செப்டம்பர் 30ஆம் தேதி வரை பஞ்சு இறக்குமதிக்கான சுங்க வரி முழுமையாக ரத்து செய்யப்படுவதாக நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.
பருத்தி, நூல் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், விலை உயர்வைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசு, மத்திய அரசிடம் ஏற்கனவே கோரிக்கை வைத்திருந்தது. இந்த நிலையில், மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், பருத்தி இறக்குமதிக்கு சுங்க வரியில் இருந்து முழுமையாக விலக்கு அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
மத்திய அரசின் உத்தரவால் கரூர், திருப்பூர், சேலம், நாமக்கல், மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களில் உள்ள பின்னலாடை நிறுவனங்களின் உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், வரும் காலங்களில் பின்னலாடைத் தொடர்பான வர்த்தகம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசின் அறிவிப்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினருமான வானதி சீனிவாசன் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், ‘அதிக பஞ்சினைப் பயன்படுத்தும் தமிழகத்துக்கு தமிழ்ப் புத்தாண்டு பரிசாக பஞ்சு இறக்குமதி வரியை முற்றிலும் நீக்கிய பிரதமர் நரேந்திர மோடிக்கும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும், மத்திய ஜவுளித் துறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கும் நன்றி. தமிழகத்தின் ஏற்றுமதி வருவாய் பலமடங்காகும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
**-ராஜ்**
.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share