vகிணற்றுக்குள் விழுந்த கார்: தந்தை – மகள் பலி!

Published On:

| By Balaji

தர்மபுரி மாவட்டம், பொன்னேரி பகுதியில் கிணற்றுக்குள் கார் விழுந்த விபத்தில் தந்தையும், மகளும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியைச் சேர்ந்த வீரன் (40) என்பவர் பெங்களூருவில் பணியாற்றி வருகிறார். அவர் தனது மனைவி உமா மற்றும் மகள் சுஷ்மிதா (13) ஆகியோருடன் தனது சொந்த ஊரான மேட்டூருக்குச் சென்றனர். மீண்டும் அவர்கள் பெங்களூருவுக்கு நேற்று (நவம்பர் 16) மதியம் பொலிரோ காரில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகேயுள்ள பொன்னேரி பகுதியில் உள்ள உணவகத்தில் உணவு அருந்துவதற்காக காரை ஓரம் கட்டியுள்ளார். கார் நின்றதால் அவரின் மனைவி உமா மட்டும் கீழே இறங்கியுள்ளார். அப்போது வீரன், பிரேக்குக்கு பதிலாக தவறுதலாக ஆக்ஸிலேட்டரை மிதித்துள்ளார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் அதிவேகத்தில் சென்று தடுப்புகளை உடைத்துக்கொண்டு சாலையோரத்தில் இருந்த 60 அடி ஆழ கிணற்றில் விழுந்தது.

உமாவின் அலறம் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் பொக்லைன் இயந்திரத்தின் ரோப் மற்றும் கயிறுகள் மூலம் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்தில் தர்மபுரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன், தர்மபுரி வருவாய் கோட்டாட்சியர் சித்ரா விஜயன் உள்ளிட்டோர் மீட்கும் பணியைப் பார்வையிட்டனர்.

கிணற்றில் 45 அடிக்கும் மேல் தண்ணீர் உள்ளதால் காரில் விழுந்தவர்களை மீட்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது. கிட்டதட்ட ஐந்து மணி நேரப் போராட்டத்துக்குப் பின்பு காருடன் தந்தை வீரனும், மகள் சுஷ்மிதாவும் சடலமாக மீட்கப்பட்டனர்.

இருவரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்த காரிமங்கலம் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

**-வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share