_வீடியோ: குழப்பங்களும், கேள்விகளும்!

public

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அவரின் மரணம் குறித்து பல்வேறு சர்ச்சைகளும் வட்டமடித்துக்கொண்டிருந்த நேரத்தில், ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோ காட்சி தங்கள் வசம் உள்ளது என்று கடந்த செப்டம்பர் மாதம் கூர்க் ரிசார்ட்டில் தினகரன் கூறினார். அதனை வெளியிட வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை எழுந்த நிலையில், விசாரணை ஆணையத்தில் சமர்ப்பிப்போம் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் இன்று (டிசம்பர் 20) சிகிச்சை வீடியோவை வெளியிட்டுப் பரபரப்பைக் கிளப்பியுள்ளார் தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல். இது குறித்து அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பல்வேறு தலைவர்களும் வீடியோ குறித்து வினாக்களையும் எழுப்பியுள்ளனர்.

**திமுக செயல்தலைவர் ஸ்டாலின்**

ஜெயலலிதா சிகிச்சை குறித்த வீடியோ உண்மையோ பொய்யோ அதுகுறித்து தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்ய வேண்டும். நான் அதில் தலையிட விரும்பவில்லை. ஆனால் இந்தப் பிரச்சினையில் தலையிடத் தேர்தல் ஆணையம் எந்த அளவுக்கு அக்கறை காட்டுகிறதோ, அதே அளவுக்கு இடைத் தேர்தலில் அதிமுகவின் பணப் பட்டுவாடாவிற்கு நடவடிக்கை எடுக்க ஏன் அக்கறை காட்டவில்லை என்பது எனது கேள்வி.

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதே அந்தப் புகைப்பட மற்றும் வீடியோ காட்சிகளை ஏன் வெளியிடவில்லை? அப்படி வெளியிட்டிருந்தால் மக்களின் குழப்பம் தீர்ந்திருக்கும் என்று அப்போதே திமுக தலைவர் கருணாநிதி கூறியிருந்தார். அப்போதே வெளியிட்டிருந்தால் தற்போது இந்த பிரச்சினை வந்திருக்காது.

ஜெயலலிதாவின் மரணத்தை அரசியலுக்குப் பயன்படுத்துகிற அளவுக்கு அவ்வளவு கீழ்த்தரமாக இருப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. இந்த வீடியோ குறித்து தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுக்கிறது என்பதைப் பார்ப்போம். வீடியோ இடைத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தாது.

**அமைச்சர் ஜெயக்குமார்**

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இசட் பிளஸ் பாதுகாப்பில் இருந்தவர், அவர் சிகிச்சை பெற்ற வார்டுக்குச் சென்று பாதுகாப்பு விதியை மீறி யார் இந்த வீடியோவை எடுத்தது. ஜெயலலிதா பல்வேறு முறை மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார். எனவே அந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்ற விவரம் இல்லை. வெற்றிவேல் தன்னிச்சையாக இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

கடந்த ஒருவருட காலமாக இந்த வீடியோ வெளியிடப்படவில்லை. ஆர்.கே.நகர் தேர்தலை மனதில் கொண்டு உள்நோக்கத்தோடு இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது எனவே இது தேர்தல் விதிமுறை மீறல். எனவே வெற்றிவேல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

**பாஜக தமிழக தலைவர், தமிழிசை சவுந்தரராஜன்**

மருத்துவமனையின் அனுமதி இல்லாமல், சிகிச்சை பெற்றுவருபவரைப் புகைப்படமோ, வீடியோவோ எடுக்கக் கூடாது, அது சட்டப்படி குற்றம். கடந்த ஓராண்டாக அவர்கள் மீது (சசிகலா தரப்பு) மீது அந்தக் குற்றச்சாட்டு உள்ளது, மோசமான விமர்சனமும் உள்ளது. அப்படியிருக்க ஏன் ஓராண்டாக அதனை வெளியிடவில்லை?

விசாரணை ஆணையத்தில் ஜெயலலிதா சிகிச்சை வீடியோவைக் கொடுத்திருக்கலாம். இடைத் தேர்தல் காலகட்டத்தில் வீடியோ வெளியிடப்பட்டிருப்பதால், சம்பந்தப்பட்ட வேட்பாளரைத் தகுதிநீக்கம் செய்ய வேண்டும்.

**விசிக தலைவர் திருமாவளவன்**

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலுக்காக இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. வீடியோவில் ஜெயலலிதா சிகிச்சை பெறும் இடம் போயஸ் கார்டனா அல்லது அப்பல்லோ மருத்துவமனையா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இடைத் தேர்தலின்போது ஜெயலலிதா சிகிச்சை வீடியோ வெளியிடப்பட்டுள்ளதால் அது தாக்கத்தை ஏற்படுத்தும்.

**முத்தரசன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர்**

சிகிச்சை வீடியோவை முன்பே வெளியிட்டிருக்க வேண்டும். இடைத் தேர்தல் நடைபெறும் நேரத்தில் வீடியோவை வெளியிட்டது தவறு. தேர்தல் அரசியல் ஆதாயத்திற்காகவே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.

**முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி**

அரசியல் ஆதாயத்திற்காக அந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. ஜூஸ் குடிப்பது போன்ற வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் மருத்துவமனை அனுமதி இல்லாமல் எப்படி வீடியோ எடுக்கப்பட்டது?

இதுபோன்று பல்வேறு தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் இது குறித்த பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *