திமுக-அதிமுக: பணக்காரக் கட்சி எது? ஆய்வு முடிவுகள்!

Published On:

| By Balaji

அதிக சொத்துக்கள் கொண்ட மாநிலக் கட்சிகளில் திமுக, அதிமுக ஆகியவை முன்னணி இடத்தை பிடித்துள்ளன.

அரசியல் கட்சிகளின் வரவு – செலவு கணக்குகள் குறித்து ஜனநாயக சீர்திருத்தச் சங்கம் என்ற அரசு சாரா அமைப்பு, ஒவ்வொரு வருடமும் ஆய்வறிக்கையை வெளியிட்டு வருகிறது. அதன்படி, மாநிலக் கட்சிகளின் சொத்துக்கள் தொடர்பான ஆய்வறிக்கையை அண்மையில் வெளியிட்டது.

2016-17,2017-18 நிதியாண்டுகளில் மாநிலக் கட்சிகளின் சொத்துக்கள் மற்றும் தேர்தல் ஆணையம், வருமான வரித் துறை ஆகியவற்றில் கட்சிகள் தாக்கல் செய்த ஆவணங்கள் அடிப்படையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், மொத்தம் 41 அரசியல் கட்சிகளின் சொத்துக்கள் தொடர்பான விவரம் இடம்பெற்றுள்ளது. கட்சியின் அசையா சொத்துக்கள், கடன், வைப்புத் தொகைகள், முதலீடுகள் ஆகியவையும் இதில் அடங்கும்.

ஆய்வறிக்கையின்படி, 41 மாநிலக் கட்சிகளின் மொத்த சொத்துக்களின் மதிப்பு ரூ.1320.06 கோடியாக உள்ளது. ரூ. 583.29 கோடி சொத்து மதிப்புடன் நாட்டிலேயே மிகப்பெரிய பணக்கார மாநிலக் கட்சியாக சமாஜ்வாதி உள்ளது. இந்தப் பட்டியலில் தமிழகத்தின் எதிர்க்கட்சியான திமுக இரண்டாவது இடத்திலும், ஆளுங்கட்சியாக உள்ள அதிமுக மூன்றாவது இடத்திலும் உள்ளன.

திமுகவின் மொத்த சொத்துக்களின் மதிப்பு ரூ.191.64 கோடியாக உள்ளது. 2016-17ஆம் நிதியாண்டில் ரூ.183.36 கோடியாக திமுகவின் சொத்து மதிப்பு இருந்தது. தற்போது 4.5 சதவிகிதம் உயர்ந்துள்ளது. அதிமுகவின் சொத்து மதிப்பு 2016-17ஆம் நிதியாண்டில் ரூ. 187.72 கோடியாக இருந்தது. தற்போது 1 சதவிகிதம் வரை உயர்ந்து ரூ.189.54 கோடியாக மாறியுள்ளது. எனினும், கடந்த நிதியாண்டில் இரண்டாவது இடத்தில் இருந்த அதிமுக, தற்போது மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் நான்காவது இடத்தில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி உள்ளது. அதன் சொத்து மதிப்பு 15.4 சதவிகிதம் உயர்ந்து 131.59 கோடியாக உள்ளது. ரூ.52 கோடி சொத்து மதிப்புடன் சிவசேனா ஐந்தாவது இடத்தில் உள்ளது.

தமிழகத்திலிருந்து பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளும் இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளன. 2016-17ஆம் நிதியாண்டில் பாமகவின் சொத்து மதிப்பு ரூ.2.63 கோடியாக இருந்தது. தற்போது 1.5 சதவிகிதம் குறைந்து ரூ.2.59 கோடியாக உள்ளது. தேமுதிகவின் சொத்து மதிப்பு 27 சதவிகிதம் உயர்ந்து ரூ.87 லட்சமாக உள்ளது. 2016-17ஆம் நிதியாண்டில் அக்கட்சிக்கு ரூ. 67.7 லட்சம் மதிப்புள்ள சொத்துக்கள் மட்டுமே இருந்தன.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share