�ஒன்றரை ஆண்டுக்குப் பிறகு பழநி முருகன் கோயிலில் நாள் முழுவதும் அன்னதானம்!

public

பழநி முருகன் கோயிலில் ஒன்றரை ஆண்டுக்குப் பிறகு மீண்டும் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

தமிழ்க் கடவுளான முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழநி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் பக்தர்களுக்காக கோயிலில் மதிய வேளை அன்னதானம் வழங்கப்பட்டு வந்தது. இதை ஏராளமான பக்தர்கள் வாங்கி சாப்பிட்டு வந்தனர்.

கோயிலில் பக்தர்களின் வருகை அதிகரிப்பின் காரணமாக கடந்த 2013ஆம் ஆண்டு முதல் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. அதன்படி காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. ஒரே நேரத்தில் 250 பேர் அமர்ந்து சாப்பிடும் வகையில் மலைக்கோயில் தெற்கு வெளிப்பிராகாரத்தில் அன்னதான கூடம் உள்ளது. தரிசனம் செய்துவிட்டு வரும் பக்தர்கள் அங்கு சாப்பிட்டு செல்வது வழக்கம்.

இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கோயில்களில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. அதேவேளையில் ஆகமவிதிப்படி பூஜைகள் மட்டும் நடைபெற்று வந்தது. தரிசன தடையால் பழநி முருகன் கோயிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் திட்டம் நிறுத்தப்பட்டது. பின்னர் கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து கோயில்களில் சமூக இடைவெளி, முககவசம் அணிதல் உள்ளிட்ட கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்களுக்கு பொட்டலத்தில் உணவு வழங்கப்பட்டு வந்தது.

இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்செந்தூர், சமயபுரம், திருத்தணி உள்ளிட்ட கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. இதனால் பழநி முருகன் கோயிலில் நிறுத்தப்பட்ட நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை மீண்டும் தொடங்க வேண்டும், பக்தர்கள் அமர்ந்து சாப்பிடும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.

அதைத்தொடர்ந்து பழநி முருகன் கோயிலில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை மீண்டும் தொடங்க கோயில் நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஒன்றரை ஆண்டுக்குப் பிறகு பழநி முருகன் கோயிலில் நாள் முழுவதும் அன்னதான திட்டம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோயில் அதிகாரி கூறுகையில், வழக்கமாக ஒரு பந்தியில் 250 பேர் அமர்ந்து சாப்பிடுவது வழக்கம். ஆனால் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதற்காக தற்போது ஒரு பந்தியில் 108 பேர் மட்டுமே அமர்ந்து சாப்பிடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அன்னதான திட்டத்தில் தினமும் பக்தர்களுக்கு அரிசி சாதம், சாம்பார், காய்கறி கூட்டு, பொரியல், ரசம், மோர், பாயாசம் ஆகியவை வழங்கப்படும் என்றார்.

ஒன்றரை ஆண்டுக்குப் பிறகு பழநி முருகன் கோயிலில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் வாரத்தின் அனைத்து நாட்களிலும் கோயிலை திறந்து தரிசனம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

**-ராஜ்**

.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *