குவாரி வெடிவிபத்து : சேமிப்பு கிடங்கு உரிமையாளர் கைது!
ஆவியூர் குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்து தொடர்பாக குவாரி உரிமையாளர்கள் 2 பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்ட நிலையில், இன்று(மே 2) வெடிபொருள் சேமிப்பு கிடங்கின் உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஆவியூர் பகுதியில் உள்ள கடம்பன்குளத்தில் கல்குவாரி உள்ளது. அங்கு நேற்று வெடிமருந்து குடோனில் வெடிபொருட்களை வேனில் இருந்து இறக்கி வைத்துக் கொண்டிருந்த போது, வெடிபொருட்களில் உராய்வு ஏற்பட்டு பலத்த சத்தத்துடன் வெடித்தது.
இதில் சேமிப்பு கிடங்கு தரைமட்டமானது. மேலும் அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த டி.புதுப்பட்டியைச் சேர்ந்த கந்தசாமி (47), கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த துரை (25), குருசாமி (60) ஆகிய மூவரும் உடல் சிதறி உயிரிழந்தனர். சுமார் ஒரு கி.மீ வரை உயிரிழந்தவர்களின் உடல் பாகங்கள் சிதறி கிடந்த புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வெடிவிபத்தினை தொடர்ந்து நிரந்தரமாக குவாரியை மூடவேண்டும் என்றும், சம்பந்தப்பட்டவர்களை போலீசார் கைது செய்ய வேண்டும் என்றும் மக்கள் போராட்டம் நடத்தினர்.
இதனையடுத்து குவாரி உரிமையாளர்களான சேது மற்றும் ஸ்ரீ ராம் ஆகிய இருவரையும் தனிப்படை போலீசார் நேற்று கைது செய்த நிலையில், 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மேலும் தலைமறைவான சேமிப்பு கிடங்கு உரிமையாளர் மற்றும் மூன்று மேலாளர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் சேமிப்புக் கிடங்கின் உரிமையாளரான ராஜ்குமார் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் விடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு, குவாரி நிர்வாகம் சார்பில் தலா ரூ.12 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது.
அதன்படி ரொக்கமாக ரூ.50 ஆயிரம், காசோலையாக ரூ.11.50 லட்சம், உயிரிழந்தவர்களின் உறவினர்களிடம் வழங்கப்பட்டது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
கத்தரி வெயில் எப்போது தொடங்கும்? : தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை!
தக்லைப் – ராயன் படங்களால் தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவிக்கு ஆபத்து?