தடுப்பூசி – கட்டாயப்படுத்தக் கூடாது: உச்ச நீதிமன்றம்!

public

கொரோனா தடுப்பூசி செலுத்தாவிட்டால் பொது இடங்களில் அனுமதி மறுப்பு என்ற உத்தரவை மாநில அரசாங்கங்கள் திரும்ப பெற வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கடந்தாண்டு கொரோனா தொற்று பாதிப்பு அதிகமாக இருந்தபோது கொரோனா தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அவசர கால அனுமதி அளித்தது. நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்ற நிலையில், சிலர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தயக்கம் காட்டினர். இதனால் தடுப்பூசி செலுத்தாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல சில மாநில அரசுகள் தடை விதித்தன.
இந்த நிலையில், கட்டாய தடுப்பூசி தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று (மே 2) விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எல்.என்.ராவ் மற்றும் பி.ஆர்.காவி ஆகியோர் அமர்வு, எந்த ஒரு தனி நபரையும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள கட்டாயப்படுத்தக் கூடாது என்று உத்தரவிட்டனர். அத்துடன், பாதிப்பு எண்ணிக்கை குறைவாக உள்ள சூழலில் தனிநபர்கள் பொதுவெளிக்கு வரக் கூடாது என மத்திய மாநில அரசாங்கங்கள் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்க கூடாது. அதை தளர்த்த வேண்டும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் எதிர்கொண்ட பாதகமான விளைவுகள் குறித்த தரவுகளை வெளியிடுமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
சிறார்களின் தடுப்பூசிகளைப் பொறுத்தவரை நிபுணர்களின் அறிவுரையின்படி, சர்வதேச அளவில் என்ன விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதோ அதைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் பொதுவெளியில் வரும் நபர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தன. அனைத்து நபர்களின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டே இந்த உத்தரவைப் பிறப்பித்ததாக இம்மாநிலங்கள் நீதிமன்ற வாதத்தில் தெரிவித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *