உக்ரைன் – ரஷ்யா போரானது 5 மாதங்களை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்தப் போரை நிறுத்த பல நாடுகள் பலவிதமான முயற்சிகள் செய்தும் அனைத்துமே தோல்வியில் முடிந்தன. நேட்டோவில் உக்ரேன் நாட்டிற்கு வேட்பாளர் அந்தஸ்து வழங்க இருப்பதாக தெரிகிறது. நேட்டோவில் இணைய உக்ரேன் நாடு ஆர்வம் தெரிவித்ததால் தொடங்கப்பட்ட இந்தப் போர், தற்போது உக்ரைன் நாடு நேட்டோவில் வேட்பாளர் அந்தஸ்து பெற இருப்பது இந்த போரை இன்னும் கடுமையாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போர் தொடங்கியதிலிருந்தே உக்ரைன் தலைநகர் கீவ்வை கைப்பற்ற ரஷ்யா கடும் முனைப்புடன் தாக்குதல் நடத்தி வந்தது ஆனால் உக்ரைன் ராணுவத்தின் கடுமையான எதிர்ப்பால், ரஷ்ய படை பின் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பின்னர் ரஷ்ய படைகள் கிழக்கு உக்ரைன் மீது கவனத்தை திருப்பியது. கடந்த சில வாரங்களாக கிழக்கு உக்ரைனில் கடுமையான தாக்குதல்களை நடத்திய ரஷ்யா, சில தினங்களுக்கு முன் செவிரோடோனெட்ஸ்க் நகரை முழுமையாக கைப்பற்றியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய படைகள் கிழக்கு உக்ரைனை தாக்குவதில் முனைப்புடன் இருப்பதால் கடந்த மூன்று வாரங்களாக உக்ரைன் தலைநகர் கீவ்வில் அமைதியான சூழல் நிலவி வந்தது. இந்நிலையில் மீண்டும் இன்று அதிகாலை தலைநகர் கீவ் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன.
இதுகுறித்து கீவ் நகர மேயர் விட்டலி கிளிட்ச்கோ கூறுகையில், “தலைநகர் கீவ்வில் 3 வாரங்களுக்கு பின்னர் இன்று அதிகாலை 2 குடியிருப்பு கட்டிடங்கள் மீது ஏவுகணைகள் வீசப்பட்டு தகர்க்கப்பட்டன. இந்த தாக்குதலில் இரண்டு பேர் படுகாயம் அடைந்து தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.” என்று தெரிவித்தார்.
.