வண்டலூர் பூங்காவில் பெண் வெள்ளை புலி உயிரிழப்பு!

public

வண்டலூர் உயிரியல் பூங்காவில் உடல்நலக் குறைவு காரணமாக அரியவகை பெண் வெள்ளை புலி உயிரிழந்துள்ளது.

சென்னைக்கு அடுத்த வண்டலூரில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, இந்தியாவின் முதல் உயிரியல் பூங்காவாகும். இங்கு 170க்கும் மேற்பட்ட விலங்கினங்கள், பறவைகள் ஊர்வன போன்றவை பராமரிக்கப்பட்டு வருகின்றன. பூங்காவில் உள்ள விலங்குகளையும் கொரோனா விட்டு வைக்கவில்லை. தொற்று காரணமாக சிங்கம் ஒன்று உயிரிழந்தது. இதையடுத்து பூங்கா மூடப்பட்டு, தீவிர தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கொரோனா தாக்கம் குறைந்ததையடுத்து, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்புதான் மீண்டும் பூங்கா திறக்கப்பட்டது. இருப்பினும், விலங்குகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், 13 வயதான ஆனா ஆகான்ஷா என்ற பெண் வெள்ளை புலி கடந்த ஒரு வாரமாக சோர்வாக இருந்து வந்துள்ளது. இதைக் கண்ட ஊழியர்கள், உடனடியாக மருத்துவர் குழுவை அழைத்து வந்து பரிசோதனை செய்தனர். அதில் புலி அடாக்சியா என்ற நரம்பு மண்டல நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இந்த நோய் ஏற்பட்டால் விலங்குகளால் நடக்க முடியாதாம், சரியாக உணவு உண்ணவும் முடியாதாம். புலிக்கு கை, கால்கள் அனைத்தும் செயல் இழந்துவிட்டது. இதனால் மிகவும் பலவீனமடைந்த புலிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்றிரவு ஆனா ஆகான்ஷா உயிரிழந்தது என்று பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து, கால்நடைத்துறை மருத்துவர்களின் தலைமையில் வெள்ளை புலியின் பிரேத பரிசோதனை நடைபெற்றது.

அதுபோன்று கடந்தாண்டு ஜூலை மாதத்தில் பீஷ்மா என்ற 16 வயதான பெண் வெள்ளை புலி கிட்னி பாதிப்பு, அல்சர் மற்றும் பக்கவாதம் போன்ற உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

**-வினிதா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *