இப்படி நடக்குமென்று நாங்கள் நினைக்கவில்லை: உச்ச நீதிமன்றம்!

public

கொரோனா இழப்பீடு பெறுவதற்கு போலி சான்றிதழ் தரப்படுவதாக வரும் தகவல் கவலையளிக்கிறது என்று உச்ச நீதிமன்றம் வருத்தம் தெரிவித்துள்ளது.

நாட்டில் கொரோனா தொற்று பரவ ஆரம்பித்த காலத்திலிருந்தே லட்சக்கணக்கான மக்கள் தொற்றினால் பலியாகியுள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மத்திய, மாநில அரசுகள் 4 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடக் கோரி, வழக்கறிஞர்கள் ரீபக் கன்சல் மற்றும் கவுரவ் குமார் பன்சால் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.50,000 வழங்கலாம் என மத்திய அரசு பரிந்துரைத்திருந்தது.

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கான இழப்பீட்டு தொகை மாநிலங்கள் சார்பில், மாநில பேரிடர் மேலாண்மை நிறுவனத்தால் வழங்கப்பட வேண்டும் என மத்திய அரசு கூறியதன்படி, மாநில அரசுகள், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது.

இந்த வழக்கு மீண்டும் இன்று(மார்ச் 14) நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, பி.வி.நாகரத்னா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “ கொரோனா இழப்பீடு பெறுவதற்காக போலி சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்படுகின்றன என்று கடந்த வாரமே தங்கள் முன் தெரிவித்திருந்தேன். மருத்துவரின் சான்றிதழின் அடிப்படையில் இழப்பீடு வழங்கலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. அதனால் கோவிட் இறப்பு சான்றிதழ்களை பெறுவதற்கு சில வரம்புகளை விதிக்கலாம். இல்லையென்றால், இது முடிவில்லாமல் தொடர்ந்து நடைபெறும்” என்று கூறிய அவர், பல்வேறு மாநிலங்களில் இதுபோன்ற போலி சான்றிதழ் புகார் வந்துள்ளதாகவும் கூறினார்.

இதையடுத்து பேசிய நீதிபதிகள், “கொரோனா இழப்பீடு பெறுவதற்காக இந்த மாதிரி போலி சான்றிதழ் சமர்ப்பிக்கப்படும் என்று கற்பனை கூட செய்தது இல்லை. இழப்பீடு என்பது புனிதமான ஒன்று. அப்படியான திட்டம் மக்களால் தவறாகப் பயன்படுத்தப்படும் என்று நாங்கள் நினைக்கவில்லை. நமது ஒழுக்கம் இவ்வளவு தூரம் தரம் தாழ்ந்து போகும் என்று நினைக்கவில்லை” என்று வருத்தம் தெரிவித்தனர்.

போலி சான்றிதழ் விவகாரத்தில் அரசு அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருப்பது மேலும் கவலையளிக்கிறது என்று கூறிய நீதிபதிகள், இதுகுறித்து சிஏஜி விசாரணைக்கு உத்தரவிட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என்றனர்.

போலி சான்றிதழ் சமர்ப்பிக்கப்படுவதை எவ்வாறு தடுக்கலாம். இறப்பு சான்றிதழுக்கு விண்ணப்பிப்பதற்கு எவ்வளவு கால அவகாசம் கொடுக்கலாம் என்பது குறித்து மத்திய அரசு விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறிய நீதிபதிகள், வழக்கு விசாரணையை மார்ச் 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
**-வினிதா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *