b>
சத்குரு
கருணையில் சிலர் அமிழ்ந்து திளைக்கிறார்கள்; பலருக்கு அப்படியான அனுபவம் ஏதும் நிகழ்வதில்லை! ஏன் இந்த முரண்? கருணையை உணர ஒருவருக்கு தடை எங்கே உள்ளது? பார்வையற்ற ஒரு முனிவரின் கதையுடன் உணர்த்துகிறார் சத்குரு.
1987ல் நான் கோவையில் முதன்முதலாக வகுப்பெடுக்க வந்தபோது, டாக்டர் ராஜகோபால் என்னும் அருமையான மனிதர் ஒருவரின் குடும்பத்துடன் தங்கியிருந்தேன். அவருடைய இளைய மகள் மைசூரில் எங்கள் வீட்டருகே ஒரு நிறுவனம் நடத்திக் கொண்டிருந்தார். அந்த வகையில் அறிமுகம்.
நான் அவர் வீட்டில் தங்கியிருந்தபோது இங்கிலாந்தில் வசிக்கும் அவருடைய மூத்த மகள் விடுமுறைக்காக வந்திருந்தார். அவர்களுக்கு பூர்வீகம் கேரளத்தின் கடற்கரைப் பகுதி. எனவே, அவர்களின் குடும்பமே மீன் உணவில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தது.
நீங்கள் அப்போதெல்லாம் வீதிகளில் போகும்போது, கருவாடு ஏற்றிக்கொண்டு போகிற சரக்கு வாகனங்கள் அடிக்கடி உங்களைக் கடந்துபோகும். அந்த வாகனத்தை நீங்கள் தொடர்ந்து போனால் உங்களுக்கு மூச்சு முட்டும். பலருக்கு கருவாட்டின் வாசனை பிடிக்காது. ஆனால், கருவாட்டுச் சமையல் மிகவும் பிடிக்கும்.
இன்னும் சிலர் இருக்கிறார்கள். பக்கத்து வீட்டில் கருவாடு சமைத்தால் இவர்கள் வீட்டை காலி செய்து கொண்டு போய்விடுவார்கள். அன்று டாக்டர் ராஜகோபால் வீட்டில் கருவாடு சமைக்கப்பட்டுக் கொண்டிருந்தது. அவருடைய மனைவி முழு சைவ உணவுக்கு மாறியிருந்தார். கருவாடு சமைக்கத் தொடங்கியதும் அதன் வாசனை பரவியது. அந்த வாசனையால் ஈர்க்கப்பட்ட அவருடைய மகள் முகம் மலர்ந்தது. நீண்டகாலம் வெளிநாட்டில் இருந்தவர் தன் விருப்ப உணவு சமைக்கப்படும் வாசனையில் ஈர்க்கப்பட்டு சமையலறை நோக்கி ஓடி வந்தார். அதேநேரம் அந்த வாசனை பொறுக்காமல் அவருடைய தாயார் அதே வேகத்தில் சமையலறையை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தார்.
இருவரும் ஒருவர் மேல் ஒருவர் மோதிக்கொள்ள, தாயாருக்கு மூக்கு உடைந்துவிட்டது
இங்கே நான் நறுமணம், தீயமணம் குறித்தெல்லாம் பேசவில்லை. வாசனை, ஒலி, ஒளி இவையெல்லாமே சில அதிர்வுகள்தான். நீங்களும் ஓர் அதிர்வின் வடிவம் என்பதால் உங்கள் தன்மைக்கேற்ப சில உங்களை ஈர்க்கும். சில அம்சங்கள் ஒத்துப் போகும். கருணை என்று நாம் சொல்வதே அனைத்திற்கும் அடிப்படையாய் இருப்பதைக் குறிப்பதற்குத்தான். இந்தப் பிரபஞ்சம் எப்படி உருவானதென உங்களுக்குத் தெரியாது. இந்த சூரியக்குடும்பம் எப்படி இயங்குகிறதென்று தெரியாது. இத்தனை அணுத்திரள்கள் எப்படி ஒன்று திரண்டு உங்கள் வாழ்வை இயங்கச் செய்கிறதென்று தெரியாது. இவை குறித்த விளக்கங்கள் உங்களிடம் இருக்கலாம். ஆனால், இவை இயங்குகிற தொழில்நுட்பம் உங்களுக்குத் தெரியாது. தெரிந்திருந்தால் அப்படி ஒன்றை நீங்களே உருவாக்கிவிடுவீர்கள்.
எனவே, வாழ்வில் உங்களுக்குப் பல மகத்தான அம்சங்கள் நிகழ்கின்றன. ஆனால் அவை எதேச்சையாக நிகழ்வதில்லை. இவை அனைத்தையும் நிகழச் செய்யும் சக்தியைத்தான் நாம் கருணை என்கிறோம். ஆனால், அந்தக் கருணையை ஏற்கும் தன்மையில் நீங்கள் இருக்கிறீர்களா என்பதுதான் கேள்வி. உங்களுக்கு மூக்கு உடைந்திருந்தால் மலரின் வாசனையை நுகர முடியாது. பார்வைத் திறன் அற்றிருந்தால் வெளிச்சத்தை உணர முடியாது. இப்படித்தான் பலரையும் கருணையை உணர முடியாமல் அகங்காரம் அடைத்துக் கொண்டிருக்கிறது.
உங்கள் மனதில் முன்முடிவுகள் ஏதும் இல்லாதபோது, நீங்கள் கருணையில் அமிழ்பவர் ஆகிறீர்கள். ஆனால் உரிய விழிப்புணர்வு இல்லையென்றால் அந்தக் கருணையையும் உங்களால் இனம்காண இயலாது. ஒரேவிதமான உணவை இருவருக்கு வழங்கினாலும், அவர்களின் ஏற்கும் தன்மைக்கேற்ப அவர்கள் அந்த உணவின் வழியே பெறும் ஊட்டம் வேறுபடுகிறது. எல்லோருமே கருணையின் பிடியில் இருந்தாலும், அந்தக் கருணையை உள்வாங்கி அதன் தன்மையை வெளிப்படுத்தும் தெளிவும் புரிதலும் எல்லோருக்கும் இருப்பதில்லை. ஒரு செடிக்கு உரமாக துர்நாற்றமுள்ள குப்பைகளைப் போட்டாலும், மலர் அதனை வாசனையாகத்தான் வெளிப்படுத்துகிறது. அதனால்தான் அவற்றுக்கு தனி மரியாதை. அப்படியானால் கருணையை உள்வாங்கும் நாம் கருணையைத்தானே வெளிப்படுத்த முடியும்.
பார்வையிழந்த முனிவர் ஒருவர் வனத்தில் அமர்ந்திருந்தார். அந்த வனத்துக்கு தன் படைகளுடன் வேட்டைக்கு வந்த அரசன் வழி தவறிவிட்டான். அவனை படைகள் தேடின. முதலில் வீரர்களில் ஒருவன் அந்த முனிவரிடம் வந்து அரசர் இந்த வழியாக வந்தாரா என்றான். இல்லை என்றார் முனிவர். பின்னர் அமைச்சர் தேடிக்கொண்டு வந்து அதே முனிவரிடம் கேட்டார். இல்லை என்றார் முனிவர். சற்று நேரம் கழித்து அரசன் அந்த வழியாக வந்தவன் முனிவரைக் கண்டதும் அவருடைய திருவடிகளை வணங்கினான். உடனே முனிவர் சொன்னார், “அரசே! உங்களைத் தேடிக்கொண்டு முதலில் உங்கள் படைவீரர் வந்தார். பின்னர் உங்கள் அமைச்சர் வந்தார்,” என்றார்.
அரசனுக்கு வியப்பு, “தங்களுக்குத்தான் பார்வை இல்லையே, எப்படி இப்படி துல்லியமாகச் சொல்கிறீர்கள்” என்று கேட்டான். அதற்கு முனிவர், “முதலில் வந்தவனுக்கு நான் யாரென்று தெரியவில்லை. ‘யோவ் பெரியவரே, எங்கள் அரசர் இங்கே வந்தாரா’ என்றான். அவன் படைவீரனென யூகித்தேன். அடுத்து வந்தவர் கொஞ்சம் மரியாதையாக, ‘அய்யா! எங்கள் அரசர் வந்தாரா என்று கேட்டதால் அமைச்சர் என யூகித்துக் கொண்டேன். பின்னர் நீங்கள் வந்ததும் என் கால்களைத் தொட்டு வணங்கியதால் அரசர் என அறிந்தேன்” என்றார்.
கருணை எப்போதும் இங்கேயே இருக்கிறது. அதை உணரத்தான் விழிப்புணர்வு தேவைப்படுகிறது.
**
மீண்டும் சனிக்கிழமை சந்திப்போம்….
**
[சிறப்புக் கட்டுரை: வீக் எண்ட் வீக்னெஸ் – மீள்வது எப்படி?](https://minnambalam.com/public/2022/02/19/9/week-end-weakness-sadguru-article)