சோகத்தில் முடிந்த பொங்கல் பயணம்!

public

சென்னை திருச்சி நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை லாரி மீது கார் மோதியதில் இருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் இந்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு ஐந்து நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதனால், சென்னை போன்ற வெளியூரில் தங்கி வேலை பார்ப்பவர்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டு வருகின்றனர். கரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் இரவு நேரத்தில் தொலைதூர பேருந்துகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கார் உள்ளிட்ட தனி வாகனங்களுக்கு அனுமதி இல்லை. அதனால் இன்று காலை 5 மணிக்கு இரவு நேர ஊரடங்கு முடிவுக்கு வந்ததையடுத்து சென்னையிலிருந்து மக்கள் தங்கள் கார், இருசக்கர வாகனங்களில் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த குமார் என்பவர் தன்னுடைய மகள் தன்யஸ்ரீ மற்றும் சகோதரன் வெங்கட வரதன் ஆகியோருடன் காரில் திருச்சி மாவட்டத்திலுள்ள தனது சொந்த ஊருக்கு இன்று அதிகாலை சென்று கொண்டிருந்தனர்.

சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகே முன்னால் சென்ற டேங்கர் லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில், கார் முற்றிலும் தீப்பற்றி எரிந்துள்ளது. சம்பவ இடத்திலேயே குமார் மற்றும் வெங்கட வரதன் ஆகியோர் உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், படுகாயமடைந்த லாரி ஓட்டுநர் மற்றும் சிறுமி தன்யஸ்ரீயை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததனர். விபத்தில் உயரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் சென்றபோது ஏற்பட்ட இந்த விபத்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

**-வினிதா **

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *