ஆம்பன் பாதிப்பு -மேற்கு வங்கத்துக்கு 1000 கோடி : பிரதமர்!

public

உயர் உச்ச புயலாக உருவெடுத்த ஆம்பன் புயல் கடந்த 20ஆம் தேதி பிற்பகலில் மேற்குவங்கம் மற்றும் வங்கதேச கடல் பகுதியில் கரையைக் கடந்தது. இதனால் மேற்கு வங்கத்தில் உள்ள வடக்கு பர்கானா மாவட்டம் முற்றிலும் சேதமடைந்தது. மேற்கு வங்கத்தில் மற்ற சில மாவட்டங்களும் இந்த புயலால் கடும் சேதம் அடைந்துள்ளன.

லட்சக்கணக்கான வீடுகள், பாலங்கள், தொழிற்சாலைகள் ஆகியவை புயல் காற்றால் தூக்கி வீசப்பட்டு சேதமடைந்துள்ளன. இந்நிலையில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. ஆம்பன் புயலால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை தற்போது 80ஆக அதிகரித்துள்ளது.

இன்று காலை, புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிடுவதற்காகப் பிரதமர் மோடி டெல்லியிலிருந்து விமானம் மூலம் கொல்கத்தா சென்றார். விமான நிலையத்தில் அவரை வரவேற்ற முதலமைச்சர் மம்தா பானர்ஜி மற்றும் ஆளுநர் ஜெகதீஷ் ஆகியோர் தனி ஹெலிகாப்டரில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பிரதமருடன் ஆய்வு செய்தனர்.

அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பிரதமர் மோடி, ஆம்பன் புயலால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட மேற்கு வங்க மாநிலத்துக்கு நிவாரண உதவியாக ஆயிரம் கோடி ரூபாயை அறிவித்துள்ளார். மேலும் புயலால் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு இரண்டு லட்ச ரூபாயும், புயலால் மிக மோசமாகக் காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் அளிக்கப்படும் என அறிவித்தார். ஆம்பன் புயலால் ஏற்பட்டுள்ள இழப்புகள் மற்றும் சேதங்கள் பற்றி ஆராய்வதற்கு மத்தியக் குழு மேற்கு வங்கத்துக்கு அனுப்பி வைக்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், ” மேற்கு வங்காளம் தொடர்ந்து முன்னேறுவதைத்தான் நாங்கள் அனைவரும் விரும்புகிறோம் என்று தெரிவித்துள்ளார் .நான் அனைவரிடமும் தொடர்ந்து பேசி வருகிறேன். மேற்கு வங்கத்துக்குத் தேசமே துணை நிற்கும் என்றார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது மாநிலத்தில் ஏற்பட்டுள்ள இழப்புகள் குறித்துத் தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

கடந்த வருடம் மே மாதத்தில் நாடு தேர்தலை சந்திப்பதற்காகத் தயாராகி வந்த நிலையில் ஒடிசாவில் புயல் தாக்கியதாகவும் தற்போது ஒரு வருடத்திற்குப் பிறகு மேற்கு வங்கத்தைப் புயல் தாக்கி மோசமான சூழ்நிலைக்கு தள்ளியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த 83 நாட்களாக வெளிநாடு , வெளிமாநிலம் செல்லாமல் இருந்த பிரதமர் மோடி இன்று கொல்கத்தாவுக்குச் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

** – பவித்ரா குமரேசன்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *