மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 30 ஜன 2020

ரஜினி - வருமானத் துறை - வழக்கு - வாபஸ்: பின்னணி என்ன?

ரஜினி - வருமானத் துறை - வழக்கு - வாபஸ்: பின்னணி என்ன?

நடிகர் ரஜினிகாந்துக்கு எதிரான வழக்குகளை வருமான வரித்துறை திடீரென வாபஸ் வாங்கியதற்குப் பின்னால் அரசியல் இருக்குமோ என்று தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ரஜினி மீதான அவ்வழக்குகளின் பின்னணி என்ன?

வருமானம் தொடர்பான முழு விவரங்களை வழங்கவில்லை என்றும் தவறான தகவல்களை அளித்தார் என்பதற்காகவும் நடிகர் ரஜினிகாந்துக்கு 66.21 லட்சம் ரூபாயை வருமான வரித் துறை அபராதமாக விதித்தது. இதற்கு நோட்டீஸை வருமான வரிகள் மேல்முறையீட்டு வாரியம் ரத்து செய்தது. இதை எதிர்த்து வருமான வரித் துறை தரப்பிலிருந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மூன்று வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்குகள் நீதிபதிகள் வினித் கோத்தாரி, ஆர்.சுரேஷ் குமார் ஆகியோர் முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது வருமான வரித் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.சுவாமிநாதன், ‘அபராதத் தொகை ஒரு கோடி ரூபாய்க்கு குறைவாக இருந்தால், சட்ட நடவடிக்கைகள் மூலம் வழக்கை கைவிடலாம் என்று மத்திய அரசின் நேரடி வரிகள் வாரியம் உத்தரவிட்டதைக் கருத்தில்கொண்டு வழக்குகளை வாபஸ் பெறுகிறோம்’ எனத் தெரிவித்தார். அவரது கோரிக்கையை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர்.

வழக்கு விவரம்

ரஜினிக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வருமான வரித் துறை தாக்கல் செய்த மனுவில், “முன்னணி திரைப்பட நடிகரான ரஜினிகாந்த் 2002-03, 2003-04 மற்றும் 2004-05 ஆகிய நிதியாண்டுகளில் முறையே 61.12 லட்சம், 1.75 கோடி மற்றும் 33.93 லட்சத்தை வருமானமாக வெளிப்படுத்தினார். இதுதவிர 2002-03 மற்றும் 2004-05 ஆகிய ஆண்டுகளில் முறையே 1.41 லட்சம் மற்றும் 1.09 லட்சம் ஆகியவை அவரது விவசாய வருமானமாக வெளிப்படுத்தியிருந்தார்.

குறிப்பாக, தொழில்முறை வருமானத்தை அவர் வெளிப்படுத்தியிருந்தாலும், ஒரு பெரிய அளவிலான தொழில்முறை செலவினங்களைக் கோரியிருப்பதை வருமான வரித் துறை கவனித்தது. எனவே, பிப்ரவரி 7, 2005 அன்று சென்னையில் போயஸ் கார்டன் இல்லத்தில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் ஒரு கணக்கெடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதில், அவர் பத்தில் ஒரு பங்கு தொகையைக் கூட தொழில்முறை நோக்கங்களுக்குச் செலவிடவில்லை என்பது கண்டறியப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும், “தான் தாக்கல் செய்த செலவு தொடர்பான விவரங்களை உறுதிப்படுத்துமாறு ரஜினியிடம் கேட்கப்பட்டது. இதன் பிறகு, மேற்குறிப்பிட்ட மூன்று ஆண்டுகளுக்கான திருத்தப்பட்ட வருமான வரி கணக்குகளைத் தாக்கல் செய்தார். அசல் வருமானத்தில் கூறியதை விட அதிகமாகச் சம்பாதித்ததாக அதில் குறிப்பிட்டிருந்தார். மேலும் மதிப்பீட்டு அதிகாரி ரஜினிகாந்த் மற்றும் அவரது ஊழியர்களிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்தார். அதன்படி, செலவினங்களில் 50 சதவிகிதம் மட்டுமே மட்டுமே அவரது தொழில்முறை நடவடிக்கைகளுக்காகவும், மற்ற 50 சதவிகிதம் செலவுகள் அவரது தனிப்பட்ட பயன்பாட்டுக்காகவும் செய்யப்பட்டன என்ற முடிவுக்கு வந்தார்.

போதுமான நேரம் கொடுக்கப்பட்டது

ரஜினிகாந்த் தனது செலவினங்களை உறுதிப்படுத்த போதிய கால அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால், அதற்கான விவரங்களை ரஜினிகாந்த் தயாரிக்கவில்லை. ஆகவே, வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 27 (1) (சி) இன் கீழ் மூன்று நிதியாண்டுகளுக்கும் முறையே 6.20 லட்சம், 5.56 லட்சம் மற்றும் 54.45 லட்சம் ரூபாயை மதிப்பீட்டு அதிகாரி ரஜினிக்கு அபராதமாக விதித்தார்” என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை எதிர்த்து வருமான வரி ஆணையரிடம் (மேல்முறையீடுகள்) ரஜினிகாந்த் முறையிட்டார். இந்த முறையீடு 2011 நவம்பர் 29 தள்ளுபடி செய்யப்பட்டது. இருப்பினும் வருமான வரித் துறை மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்த ரஜினி அதில் ஜூலை 26, 2013 அன்று வெற்றிபெற்றார். பொருள் சான்றுகள் அல்லது விசாரணை ஏதும் நடத்தாமல் நடிகர் மற்றும் அவரது ஊழியர்களிடம் இருந்து பெறப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் அபராதம் விதிக்க முடியாது எனத் தீர்ப்பாயம் தெரிவித்தது.

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

2 நிமிட வாசிப்பு

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்!

3 நிமிட வாசிப்பு

225 பொறியியல் கல்லூரிகளுக்கு  நோட்டீஸ்!

வியாழன் 30 ஜன 2020