சிறப்புக் கட்டுரை: அரசு இல்லை என்கிறது, ஆய்வு ஆம் என்கிறது!


அனூ புயன்
தங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சுக துக்கங்களைப் பகிர்ந்துகொள்வோம் என மணமேடையில் உறுதிமொழி எடுக்கும் பல கணவன்மார்கள் உடலுறவின்போது தனது துணைக்கும் விருப்பம் இருக்கிறதா என்பதைக் கேட்டறிவதில்லை. ஏன், அதனால் ஏற்படும் வலியைக் குறித்து அன்பாக விசாரிப்பதும் இல்லை.
விருப்பம் இருக்கிறதோ, இல்லையோ, கணவன் விரும்பினால் அன்று உறவு நடக்க வேண்டும். இந்திய தண்டனைச் சட்டத்தின் 375ஆவது பிரிவு, குறிப்பிடும் வன்புணர்வுக் குற்றம் என்ற வகைப் பட்டியலிலிருந்து, 15 வயதுக்கு மேற்பட்ட மனைவியின் ஒப்புதலின்றி கணவன் உடலுறவு கொள்வதை உச்ச நீதிமன்றம் விலக்கிவைத்தது. அதாவது, மண உறவுக்குள் நடக்கும் கட்டாய உடலுறவை வன்புணர்வுக் குற்றமாகப் பார்க்க இயலாது என்று கூறிவிட்டது. கணவனின் வற்புறுத்தலின் பேரில் உறவு நிகழ்ந்தாலும், அதைக் குற்றமாகக் கருத முடியாது என்பது இதன் பொருள்.
அரசும் பெண்களின் பக்கத்திலுள்ள நியாயத்தைப் பார்ப்பதில்லை.இந்தியாவில் மண உறவுக்குள் வன்புணர்வு குறித்த பதிவுகளைச் செய்யும் அரசாங்கம், அது ஒரு குற்றம் என்பதைப் பதிவு செய்வதில்லை. வெளியில் நடக்கும் பாலியல் வன்முறைகள் குறித்துப் பரிதாபிக்கிற நாம், சொந்த வீட்டிற்குள் ஒரு பெண்ணுக்கு நடக்கும் வன்முறை குறித்துக் கவலைப்படுவதில்லை. இதுபோன்று எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை ஆய்வு ஒன்று சுட்டிக் காட்டியுள்ளது.
சமீபத்தில்,2015-16ஆம் ஆண்டிற்கான தேசிய சுகாதார மற்றும் குடும்பக் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 5.4 சதவிகிதப் பெண்கள் மண உறவுக்குள் வன்புணர்வை அனுபவித்துள்ளனர்.
பாலியல் வன்முறை என்ற வடிவத்தில் பெரும்பாலான பெண்களின் புகார் என்னவென்றால், தாங்கள் விரும்பாத நேரங்களில் உடலுறவு கொள்ளுமாறு
கணவர் கட்டாயபடுத்துகின்றனர் என்பதுதான்.
உண்மையில்,டெல்லியில்தான் அதிகளவில் மண உறவுக்குள் வன்புணர்வு நடக்கிறது. ஏனெனில், அங்குதான் இது குறித்து அளிக்கப்படும் புகார்கள் முறையாக விசாரிக்கப்படுகின்றன. டெல்லி யூனியன் அரசாங்கத்தின் பெண்கள் மற்றும் குழந்தை மேம்பாட்டு அமைச்சகம், இந்தக் குற்றம் மற்றும் அதனுடன் தொடர்புடைய கருத்தை "இந்தியச் சூழலில் பயன்படுத்த முடியாது" என்கிறது.
இந்த ஆய்வில் கூறியபடி, 5.4 சதவிகித திருமணமான பெண்கள் மண உறவுக்குள் வன்புணர்வை அனுபவித்துள்ளனர். அதில், 4.4 சதவிகித பெண்கள், இந்த ஆய்வு எடுப்பதற்கு முந்தைய 12 மாதங்களில் அவர்கள் மண உறவுக்குள் வன்புணர்வை அனுபவித்திருக்கிறார்கள். 2005-2006ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுக்கப்பில் இந்த எண்ணிக்கை 9.5 சதவிகிதமாக இருந்தது.
இந்த எண்ணிக்கை துல்லியமானது அல்ல. பாதிக்கப்படும் பலர் புகார் அளிப்பதில்லை என்பதால் பல சம்பவங்கள் பதிவாவதே இல்லை. தவிர, பாதிக்கப்படும் பெண்கள் எந்த அளவுக்கு பாதிக்கப்படுகின்றனர் என்பதை முழுமையாக இது தெரிவிப்பதில்லை. இந்த பெண்கள் திருமண பந்தம் என்ற போர்வைக்குள் பலமுறை வன்புணர்வை அனுபவித்துள்ளனர். ஏனெனில், "பாலியல் செயல்களில் விருப்பம் இல்லாத பெண்ணைக் கட்டாயப்படுத்துவது" மற்றும் "அச்சுறுத்தல்கள் அல்லது விரும்பத்தகாத பாலியல் முறைகளில் ஈடுபடப் பெண்ணை கட்டாயப்படுத்துவது" என இந்த ஆய்வு வகைப்படுத்திக் காட்டியுள்ளது.
திருமணமான பெண்களில் 2.5% மற்றும் 3.6% பெண்கள் இந்தப் பிரிவுகளுக்கு ஏற்றபடி பதிலளித்தனர். இவர்கள் தெரிவித்த பாலியல் வன்முறைகள், கணவன் அல்லாமல் மற்றொரு நபரால் நிகழ்ந்திருந்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11.5 சதவிகிதமாக உயர்ந்திருக்கும் என ஆய்வு கூறுகிறது. அதாவது, கட்டாய உறவில் ஈடுபட்டவர்கள் கணவர்களாக இருப்பதாலேயே அவை குற்றச் செயலாகப் பதிவாவதில்லை. எனவே பாதிப்பின் வீரியம் வெளியே தெரிவதில்லை.
சட்டத்தில் மண உறவுக்குள் வன்புணர்வு இல்லை
டெல்லியில் கொடூரமான முறையில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்ட நிர்பயா சம்பவத்தை அடுத்துப் பெரும் போராட்டங்கள் நடந்தன. நாடாளுமன்றம் கொந்தளித்தது. என்றாலும், இந்தியாவின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பாலியல் வன்முறைச் சம்பவங்களில் திருமணமான மற்றும் திருமணமாகாத பெண்களை சமமாகப் பார்க்கும் மனப்பான்மை இல்லை.
திருமணமான பெண்களுக்கு சட்டத்தில் ஒரு சிறப்பு பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.நிர்பயாவின் மரணத்துக்குப் பிறகு, நாடாளுமன்றம் விரைவில் குற்றவியல் திருத்தம் சட்டம் 2013-ஐ நிறைவேற்றியது. இது மண உறவுக்குள் வன்புணர்வு விஷயங்களுக்கு இந்திய குற்றவியல் சட்டத்திலிருந்து விதிவிலக்கு அளித்தது. 15 வயதுக்கு மேற்பட்ட மனைவியின் ஒப்புதலின்றி கணவன் உடலுறவு கொள்வது, பாலியல் வன்முறை கிடையாது என்கிறது அரசியல் சட்டத்தின் பிரிவு 375.
திருமண உறவுக்குள் நடக்கும் வன்முறையைக் குற்றமாகக் கருத மறுக்கும் சட்டத்தின் முன்னிலையில், இந்தியக் குற்றவியல் சட்டப் பிரிவு 498A-ஐப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு மட்டுமே திருமணமான பெண்களுக்கு இருக்கிறது. ஏனெனில், இந்தக் கொடுமையின் கீழ் தனது கணவன் மீது வழக்கு தொடுக்கலாம் என அகில இந்திய முற்போக்கு மகளிர் சங்கத்தின் செயலாளர் கவிதா கிருஷ்ணன் கூறினார்.
பிரிவு 377 "ஆண் ஓரினச் சேர்க்கையை" தடைசெய்யும் சட்டமாக அறியப்பட்டாலும்,உண்மையில் இது "இயற்கைக்கு மாறான உடலுறவுக்கு" தடை விதிக்கிறது. இது ஆண், பெண்ணுக்கு இடையே நடைபெறுவதற்கும் வாய்ப்புள்ளது. சில நேரங்களில் பெண்கள் தங்கள் கணவருக்கு எதிராகப் பாலியல் குற்றச்சாட்டுக்களை தாக்கல் செய்ய, பிரிவு 377ஐப் பயன்படுத்துகின்றனர் என கவிதா கிருஷ்ணன் கூறினார்.
மண உறவுக்குள் நடக்கும் வல்லுறவு குறித்த உண்மைகள்
கணவன் மது அருந்திருக்கும் நிலையில் பாலியல் வன்முறை மிக மோசமாக இருக்கும். 66 சதவிகித திருமணமான பெண்கள், மது அருந்திவிட்டு வரும் கணவனிடமிருந்து உடல் ரீதியான வன்முறையை அல்லது பாலியல் வன்முறையை அனுபவித்திருக்கின்றனர்.
பெண்களைப் பாலியல் வன்முறையிலும், உடல் ரீதியிலும், உணர்ச்சி ரீதியாகவும் கொடுமைப்படுத்துவதில் மற்ற மாநிலங்களை விட மணிப்பூர் மிக மோசமாக உள்ளது. 55 சதவிகித திருமணமான மணிப்பூர் பெண்கள் மேற்கூறிய முறைகளில் சித்ரவதை அனுபவித்துள்ளனர். இதில், சிக்கிம் மாநிலம் குறைவாக உள்ளது. அங்கு,3.5 சதவிகித பெண்கள் மட்டுமே தங்கள் வாழ்க்கையில் அனுபவித்து இருக்கிறார்கள்.
இவ்வாறு பாதிக்கப்பட்ட பெண்களில் குறைந்த சதவிகித பெண்களே அதற்கான உதவியைத் தேடியுள்ளனர். பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலனோர் உதவியை நாடுவதற்குத் தயக்கம் காட்டுகின்றனர். 10 சதவிகித திருமணமான பெண்கள் மட்டுமே உதவியை நாடுகின்றனர்.
மண உறவுக்குள் வல்லுறவு பிரிவில், பாலியல் மற்றும் பாலியல் அல்லாத வன்முறை இரண்டையும் தேசிய சுகாதார மற்றும் குடும்ப கணக்கெடுப்பு பதிவு செய்கிறது. இந்த ஆய்வு 15 வயது முதல் 49 வயது வரையுள்ள திருமணமான பெண்களைச் சுட்டிக் காட்டுகின்றது.
பாலியல் அல்லாத வன்முறைகளில் மிகப் பெரியது ஆண் பெண்ணைக் கன்னத்தில் அறைவது. 25 சதவிகிதப் பெண்கள் தங்கள் கணவர்கள் அறைவதாகக் கூறியுள்ளனர்.
தள்ளுவது, உலுக்குவது, பொருட்களைக் கொண்டு எறிவது போன்ற வன்முறைகளை 12 சதவிகிதப் பெண்கள் அனுபவித்துள்ளனர். கணவன்மார்கள் தங்களின் முடியை அல்லது கையை
பிடித்து இழுத்துள்ளனர் என 10 சதவிகிதப் பெண்கள் கூறினர். பொருட்களைக் கொண்டு குத்தியதாக 7.5 சதவிகித பெண்களும், உதைத்ததாகவும், இழுத்துப் போட்டு அடித்ததாகவும் 7 சதவிகிதப் பெண்கள் கூறினர். 1.5 சதவிகிதம் பேர் கொடூரமாக நடத்தப்பட்டதாக அல்லது எரிக்கப்பட்டதாகக் கூறினார்கள். 0.8 சதவிகிதம் பேர் துப்பாக்கி, கத்தி மற்றும் பிற ஆயுதங்களால் தாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
நன்றி: தி வயர்
தமிழில்: சா.வினிதா
மின்னஞ்சல் முகவரி: [email protected]