சமீபத்தில் தமிழ்நாடு மாநிலம் கோவையில் ரயில் மோதி மூன்று யானைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் யானை நடமாட்டம் உள்ள பகுதி என அறிவிக்கப்பட்ட வழித்தடங்களில் வேகக் கட்டுப்பாடுகள் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பின்பற்றப்படவில்லை என்று சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜ்யசபாவில் சமர்ப்பிக்கப்பட்ட தணிக்கை(சிஏஜி) அறிக்கையில் இந்தியாவில் 2016 முதல் 2019ஆம் ஆண்டுகளுக்கிடையில் ரயில்கள் மோதி 61 யானைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யானை வழித்தடங்களை அமைப்பதில் ரயில்வேயின் குறைபாடு மற்றும் வேகக் கட்டுப்பாடு நடவடிக்கைகளை பின்பற்றாதது உள்ளிட்ட காரணங்களால் ரயில் மோதி யானைகள் உயிரிழக்கின்றன. யானைகள் நடமாட்டம் உள்ள பகுதியாக அடையாளம் காணப்பட்ட வழித்தடத்தில் 37 யானைகளும், அடையாளம் காணப்படாத வழித்தடத்தில் 24 யானைகளும் ரயில்களில் மோதி உயிரிழந்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் வழித்தடத்தின் குறுக்கே யானை கடக்க வாய்ப்புள்ள பகுதிகளில் மணிக்கு 50 கி.மீ வேகத்தில் மட்டுமே ரயில் செல்ல வேண்டும் என்கிற விதி பின்பற்றப்படுவதில்லை. மேலும் யானைகள் நடமாட்டத்திற்கு வசதியாக ரயில்வே தண்டவாளத்தின் குறுக்கே சுரங்கப்பாதை, மேம்பாலம் அமைப்பதற்கு வனத்துறை ஒத்துழைப்பு அளிப்பதில்லை. வழிதடங்களில் உள்ள தாவரங்களை ரயில்வே அகற்றுவதில்லை. சில இடங்களில் யானை நடமாட்ட உள்ள பகுதியாக குறிப்பிடும் போர்டுகள் தவறான இடத்தில் வைக்கப்பட்டுள்ளதால், ரயில் ஓட்டுநர்கள் கவனமாக ரயிலை இயக்கினாலும் விபத்து ஏற்படுகிறது என்று விபத்துக்கான காரணங்களாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் மோதி யானைகள் உயிரிழப்பதை தடுப்பதற்காக ரயில்வே அமைச்சகம் மற்றும் சுற்றுச்சூழல், வன அமைச்சகத்திலிருந்து மூத்த அதிகாரிகளைக் கொண்ட குழு கடந்த 2013ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
**-வினிதா**
�,