�சிறப்புக் கட்டுரை: தூய்மை இந்தியாவுக்குத் தடைபோடும் ஜாதியவாதம்! – ஸ்வாகதா யாதவர்

public

இந்தியாவைவிட மிக ஏழ்மையான நாடுகளில் உள்ள குழந்தைகளைவிட இந்தியாவில் உள்ள குழந்தைகள் ஏன் மிகவும் குள்ளமாக உள்ளார்கள்?

அமெரிக்காவைச் சேர்ந்த பட்டதாரிகள் டீன் ஸ்பியர்ஸ் மற்றும் டியானே கோஃபே ஆகியோர் 2009ஆம் ஆண்டு இந்தியா வருவதற்கு முன்பு வரை, இந்தியாவின் மேம்பாட்டுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டிய கேள்விகளில் இதுவும் ஒன்றாகத்தான் இருந்தது. இந்த இணையர்கள் இணைந்து 2011ஆம் ஆண்டு ‘கருத்தியல் பொருளியல் ஆராய்ச்சி நிறுவனம் (RICE)’ ஒன்றை இந்தியாவில் தொடங்கினர். இவர்கள் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு மத்திய உத்தரப்பிரதேசத்தில் உள்ள சிதாபூர் என்ற மாவட்டத்தில் குடியேறினார்கள். அந்த மாவட்டம் பெரும்பாலும் கிராமங்களால் அமைந்தது. அந்த மாவட்டத்தின் மக்கள்தொகை 45 லட்சமாகும். இது மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள சியேரா லியோன் மற்றும் லிபேரியா ஆகிய நாடுகளின் அளவுக்குச் சமமானது.

“சியேரா லியோன் மற்றும் லிபேரியா ஆகிய நாடுகளுக்கு சுகாதாரத்துறை அமைச்சகம், கல்வி அமைச்சகம் மற்றும் ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் (UNICEF) போன்றவை உள்ளன. ஆனால், சிதாபூருக்கு அவையெல்லாம் இல்லை. எங்களுக்கு எங்காவது சென்று உதவ வேண்டும்; அது பயனுள்ளதாய் இருக்க வேண்டும் என்ற உணர்வு இருந்தது” என்று கூறி தமது பேட்டியைத் தொடங்கினார் ஸ்பியர்ஸ்.

ஸ்பியர்ஸ் மற்றும் கோஃபே ஆகிய இருவரும் பொது நிர்வாகத்தில் முதுநிலை பட்டம் பெற்றவர்கள். மேலும், பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்கள். பொருளாதாரம் மற்றும் பொது விவகாரங்களில் ஸ்பியர்ஸ் சிறப்பு பெற்றவர். அதேபோல கோஃபே மனித பிறப்பு முதல் இறப்பு வரையிலான கணக்கெடுப்புகளில் சிறப்பு வாய்ந்தவராவார். இவர்கள் இருவரும் 2011ஆம் ஆண்டு காதலித்துத் திருமணம் செய்து கொண்டனர். காதலிக்கும்போது ஸ்பியர்ஸ், கோஃபேவுக்கு புள்ளிவிவரங்கள் பற்றிய வகுப்புக்குத் துணை ஆசிரியாராக இருந்தார்.

இவர்கள் இந்தியாவில் திறந்தவெளியில் மலம் கழித்தல் மற்றும் கிராமப்புற இந்தியாவில் அதிகளவில் நடைபெறும் குழந்தைகள் மரணம் தொடர்பான ஆய்வை மேற்கொண்டனர். இந்த ஆய்வு இந்தியாவில் நிலவும் சாதி வேறுபாடுகள், திறந்தவெளியில் மலம் கழித்தலை ஊக்குவிப்பதை வெளிப்படுத்தியது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால் கிராமப்புறங்களில் உள்ள, குறிப்பாக வட இந்தியாவில் உள்ள வீடுகளில் கழிவறைகள் இருந்தும் பலர் திறந்த வெளியில் மலம் கழிப்பதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர். திறந்தவெளி கழிப்பிடங்களே கழிவறைகளை விட வசதியானது மற்றும் மனதுக்குகந்தது என்று பல காரணங்களைக் கூறுகின்றனர். இதுதொடர்பாக இவர்களால் எழுதப்பட்ட Where India Goes: Abandoned Toilets, Stunted Development and the Costs of Caste என்ற புத்தகம் தெளிவாக எடுத்துரைக்கிறது. ஆனால் சுகாதார நிபுணர்கள் மற்றும் அதிகாரிகள் இதை ஏற்க மாட்டார்கள். மத்திய அரசின் 2012ஆம் ஆண்டு சர்வேபடி தமிழகத்தில் உள்ள கிராமங்களில் 66.4 சதவிகித வீடுகளில் கழிவறை வசதிகளில் இல்லாமல் இருந்துள்ளது. அதேபோல நகர்ப்புறங்களில் 12.2 சதவிகித வீடுகளில் கழிவறை வசதிகள் இல்லாமல் இருந்துள்ளது.

இதுதொடர்பாக இந்தியாவில் தங்கி ஆய்வு செய்துள்ள ஸ்பியர்ஸ் மற்றும் கோஃபேவிடம் எடுத்த பேட்டியைக் கீழே காண்போம்.

**கேள்வி 1: உத்தரப்பிரதேசம், பீகார், ஹரியானா, மத்தியப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் உள்ள கிராமப்புற வீடுகளில் 40 சதவிகித வீடுகளில் மட்டுமே கழிவறைகள் உள்ளன. ஆனால், அவர்களில் வீட்டுக்கு ஒருவராவது திறந்தவெளியில் மலம் கழிக்கின்றனர் என்று ‘தி ஸ்குவாட் சர்வே’ கூறுகிறது. ஏன் இந்தியர்கள் கழிவறைகளை வெறுக்கின்றனர்?**

**ஸ்பியர்ஸ்**: இதற்கு சில காரணங்கள் உள்ளன. இவர்கள் அதிகாலையில் நேரமாக எழுந்து திறந்தவெளிகளில் மலம் கழிக்கவே விரும்புகின்றனர். அதையே அவர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். சில இளம் பெண்களும் இந்தப் பழக்கத்தை கொண்டுள்ளனர். ஆனால், இளம் மருமகள்கள் மட்டும் வெளியே செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. திறந்தவெளிகளில் மலம் கழிப்பதற்கு மிகப்பெரிய காரணமாக இருப்பது இங்கு நிலவும் சாதியவாதம். மேலும், கழிவறைக்குழிகள் நிரம்பிவிட்டால் என்ன செய்வது போன்ற கவலையிலும் அவர்கள் திறந்தவெளிகளைப் பயன்படுத்துகின்றனர்.

**உலகம் முழுவதும் எளியக்குழிகள் கொண்ட கழிவறைகள் உள்ளன. அவை நிரம்பிவிட்டால் அவற்றை நீக்க அந்தக் குடும்பத்தில் ஒருவரோ அல்லது வெளியில் இருந்து யாராவது ஒருவரோ அழைத்து வரப்பட்டு தூய்மை செய்யப்படுகிறது. இது விரும்பத்தகாததாக இருந்தாலும், இது ஒரு பெரிய காரியமாக இருப்பதில்லை. ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரையில் இது மிகப்பெரிய காரியமாகத்தான் உள்ளது. இந்தப் பணி முழுக்கவும் தலித் மக்களுடன் மட்டுமே இணைக்கப்பட்டுள்ளது. தலித் மக்கள் அதைச் செய்ய விரும்பவில்லை. நீண்ட காலமாக ஒடுக்கப்பட்டுவரும் அவர்கள் அதிலிருந்து மீண்டு நல்ல எதிர்காலத்தை அமைத்துக்கொள்ளவே விரும்புகின்றனர்.**

பெரும்பாலான குடும்பங்கள் கழிவறைகளைப் பயன்படுத்தினால் அது வீட்டை அசுத்தப்படுத்தும் அவற்றைத் தொட்டிகளிலிருந்து காலி செய்ய இயலாது என்று கருதுகின்றனர். அதனாலேயே கழிவறைகளை பயன்படுத்துவதை விடுத்து திரண்ட வெளிகளை மலம் கழிக்க பயன்படுத்துகின்றனர். இதைத் தீர்ப்பதற்கான வழியில் மிகக் கடினமான, இங்கு நிலவும் சமூக சமத்துவமின்மை போன்ற பிரச்னைகளைக் கொண்டுள்ளது.

**கேள்வி 2: நீங்கள் உங்களுடைய புத்தகத்தில் குழந்தைகள் இறப்பு விகிதம் (IMR) மற்றும் துப்புரவு குறித்து இணைத்துப் பேசியுள்ளீர்கள், இந்தியாவின் குழந்தைகள் இறப்பு விகிதாச்சார வீழ்ச்சி என்பது வங்கதேசம் போன்ற ஏழ்மை நாடுகளைவிடக் குறைவாக இருப்பதற்கு இதுதான் காரணமா?**

இந்தியாவில் பெரும்பாலானோர் கால்களுக்கு ஷூ அணிவதில்லை. திறந்தவெளியில் மலம் கழித்தால் அதிலுள்ள கிருமிகள் மண்ணில் பரவும். அந்தக் கிருமிகள் கைகளில்படும். அம்மாவின் கைகளில் படுமானால் உணவுகளில் அந்தக் கிருமிகள் பரவ வாய்ப்புள்ளது. மேலும், ஈக்கள் மூலமும் உணவுப்பொருள்கள் மற்றும் மொத்த சுற்றுச்சூழலிலும் பரவ வாய்ப்புள்ளது. தொடர்ந்து திறந்தவெளிகளில் மலம் கழிக்கும்போது பல வழிகளில் கிருமிகள் பரவும். இதில் முக்கியமான ஒன்று என்னவென்றால் நீங்கள் கழிவறைகளை உபயோகிப்பவராகவே இருந்தாலும், உங்கள் அண்டை வீட்டார்கள் திறந்தவெளியைப் பயன்படுத்தினால்கூடக் கிருமிகள் பரவ வாய்ப்புள்ளது. திறந்தவெளிகளில் மலம் கழிக்கும் பகுதிகளுக்கு அருகில் இருப்பவர்களே அதிகம் இறக்கிறார்கள். வங்கதேசத்தில் திறந்த வெளிகளில் மலம் கழிப்பவர்கள் 1 சதவிகிதத்துக்கும் குறைவாகவே உள்ளனர். அதனால் அங்குக் குழந்தைகள் இறப்பு விகிதமும் இந்தியாவைவிடக் குறைவாகவே உள்ளது. இதுமட்டுமே காரணம் என்று கூற முடியாது. முக்கியமான காரணங்களில் இதுவும் ஒன்று.

**கேள்வி 3: சுகாதாரக் காரணிகளில் இந்து குழந்தைகளைவிட எவ்வாறு முஸ்லிம் குழந்தைகள் நல்ல வாய்ப்புகளைப் பெறுகின்றனர் என்று கூற முடியுமா?**

இதுதான் இந்தியாவின் பொருளாதார நிலையில் உள்ள புதிராக உள்ளது. இந்து குழந்தைகளைவிட முஸ்லிம் குழந்தைகள் இறப்பு குறைவாகத் தான் உள்ளது. பணக்கார மக்களின் குழந்தைகள் ஆரோக்கியமாகவே உள்ளன. முஸ்லிம் மக்களின் எண்ணிக்கை என்பது இந்தியாவில் இந்துக்களின் எண்ணிக்கையைவிட மிகக் குறைவாகத்தான் உள்ளது. மக்கள்தொகை குறைவு என்பது குழந்தைகள் இறப்பு குறைவாக இருப்பதற்குக் காரணமல்ல. ஏனென்றால் இவர்களிலும் திறந்தவெளி மலம் கழிப்பவர்களுக்கு அருகில் குடியிருப்பவர்கள் உள்ளனர். ஆனால், இந்து குடும்பங்களைவிட குழாய் தண்ணீர் மற்றும் அரசின் மற்ற சேவைகளை இவர்கள் குறைவாகவே பெறுகின்றனர். ஆனால், இந்துக்களை ஒப்பிடும்போது திறந்தவெளிகளில் மலம் கழிக்கும் முஸ்லிம்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இது வடகிழக்கு மாநிலங்களில் மட்டுமல்ல; இந்தியா முழுவதும் பரவலாகவே முஸ்லிம் குழந்தைகளின் சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் நிலை இப்படித்தான் உள்ளது.

(இக்கட்டுரையின் தொடர்ச்சியை 1 மணி அப்டேட்டில் காணலாம்)

[நன்றி : இந்தியா ஸ்பென்ட்](http://www.indiaspend.com/cover-story/casteism-will-not-allow-swacch-bharat-abhiyan-to-succeed-24444)

தமிழில் – [பிரகாசு](https://www.facebook.com/prakash.dvk.1)

மின்னஞ்சல் முகவரி: prakash@minnambalam.com�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *