மோடி நேர்காணல்: பாகிஸ்தான் முதல் சவுகிதார் வரை!

public

2019 மக்களவை தேர்தல் வரவுள்ள நிலையில் பிரதமர் மோடி அண்மையில் தனது பிரச்சாரத்தை தொடங்கினார். அதன் ஒரு பகுதியாக ரிபப்ளிக் பாரத் தொலைக்காட்சிக்கு மோடி பேட்டியளித்துள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளில் நடைபெற்ற பல்வேறு சம்பவங்கள், மாற்றங்கள் குறித்து மோடி பதிலளித்துள்ளார். தேர்தலில் பாஜகவுக்கான வாய்ப்புகள், எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி, குடும்ப அரசியல் என பல்வேறு விவகாரங்கள் குறித்து மோடி தனது கருத்துகளை பகிர்ந்துகொண்டார். முழுக்க முழுக்க இந்தியில் இருந்த நேர்காணலின் முக்கிய பகுதிகளை தமிழில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

**மிஷன் சக்தி**

“விண்வெளி போட்டியில் மிஷன் சக்தியின் மூலம் இந்தியா தனது முத்திரையை பதித்துள்ளது. இது முன்பே திட்டமிடப்பட்ட நடவடிக்கை அல்ல. சோதனை வெற்றி பெற்றபோது நாங்கள் அறிவிப்பை வெளியிட்டோம். பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட முயற்சியால் இந்த சோதனை வெற்றி பெற்றுள்ளது”

**மக்களவைத் தேர்தல் பரப்புரை**

“தேர்தலின் மையமே வாக்காளர்கள்தான். வாக்காளர்களின் எதிர்பார்ப்புகளை சந்திக்கவே அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிடுகின்றன”

**தேர்தலில் பாஜகவின் வெற்றி வாய்ப்பு**

“இந்தியர்கள் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையால்தான் கடந்த ஐந்து ஆண்டுகளில் எங்களால் வெற்றிகரமாக பல திட்டங்களை செயல்படுத்த முடிந்தது. கடந்த பொதுத் தேர்தலில் நாங்கள் அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றோம். அதுவே மக்கள் எங்களுக்கு அளித்துள்ள ஒப்புதலுக்கு சாட்சி. அரசியல் பற்றிய என்னுடைய புரிதலின்படி, மக்களுக்கு மோடியால் என்ன செய்ய முடியும், மோடி அரசால் என்னென்ன மாற்றங்களை கொண்டுவர முடியும், நாட்டின் வளர்ச்சிக்கு பாஜகவால் எப்படி உதவ முடியும் என்பதை மக்கள் புரிந்துவைத்துள்ளனர்”

**பாலகோட் போர் விமானத் தாக்குதல்**

“இந்தியாவின் பாதுகாப்பு படை வீரர்களுக்கு ஏதேனும் ஆபத்து நேரிட்டால் அது குறித்து தொடர்ந்து நடவடிக்கை எடுப்பேன். இது என்னுடைய பழக்கம். வீரர்கள் என்னிடம் எதையும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் என்னால் உறங்க முடியவில்லை. என்ன நடந்தது என்பது பற்றி எனக்கு தெரியும்”

**பாலகோட் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு**

“எனது தேசப்பற்று பற்றி யாரும் கேள்வியெழுப்ப முடியாது. பாதுகாப்பு படை வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் எவ்வளவு பெரியது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் தனிநபர் தாக்குதல் குறித்து எதிர்க்கட்சியிடம் நீங்கள் கேள்வியெழுப்ப வேண்டும். எந்த பிரச்சினைக்காக எங்கள் மீது குறை கூறுகின்றனர் என்பதை புரிந்துகொண்டால், அதையே அவர்கள் தேர்தல் வியூகமாகவும் பயன்படுத்தலாம்.

மக்களுக்கு வழங்கப்பட்ட சமையல் எரிவாயு இணைப்புகள், கட்டமைக்கப்பட்ட வீடுகள், துவங்கப்பட்ட வங்கிக் கணக்குகள் குறித்து எதிர்க்கட்சிகளுடன் நாம் விவாதிக்கலாம். வளர்ச்சி குறித்து நான் பேசினால் அவர்கள் விவாதத்தை திசைத்திருப்பி வேறு பிரச்சினைகள் குறித்து பேசுகின்றனர். மக்களுக்காக 24 மணி நேரமும் உழைக்கிறோம். இவையெல்லாம் மிக முக்கியமான பிரச்சினைகள். அபிநந்தன் பாகிஸ்தானில் சிக்கிக்கொண்டது வருந்தத்தக்கது. ஆனால் எதிர்க்கட்சிகளோ பாலகோட் விமான தாக்குதல் பற்றி கேள்வி எழுப்ப தொடங்கிவிட்டனர்”

**மோடியை தொடர்புகொள்ள முயன்ற பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்**

“பயங்கரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாகிஸ்தான் பலமுறை உறுதியளித்துள்ளது. ஆனால் அவர்கள் தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகையால் அவர்களது உறுதிமொழிகளுக்கு பதிலளிப்பதை நிறுத்திவிட்டேன். 26/11 தாக்குதல் தொடர்பாக விரிவான ஆவணங்களை பாகிஸ்தானிடம் வழங்கியுள்ளோம். ஆனால் அவர்களிடமிருந்து பதிலில்லை. இம்ரான் கான் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது நான் வாழ்த்து தெரிவித்தேன். சுமூக பேச்சுவார்த்தை நடத்த நான் முயற்சித்தேன். ஆனால் என்ன நடவடிக்கை எடுத்தார்கள்? பாகிஸ்தான் மக்களுக்கு இம்ரான் கான் நல்லது செய்கிறார் என்பது நல்ல விஷயம்தான். ஆனால் பயங்கரவாதத்தை விட்டு பாகிஸ்தான் வெளியேறுவதுதான் இப்போது மிக அவசியம்”

**சவுகிதார் பிரச்சாரம்**

“குஜராத்தில் நீண்டகாலமாக முதல்வராக இருந்தவர் நான்தான். நான் ஒரு டீ வியாபாரி. ஆனால் நான் முதல்வராக இருந்தபோது எனது கடந்தகாலம் பற்றி பேசப்படவில்லை. நான் பிரதமராக பதவியேற்ற பிறகு அதை ஒரு பிரச்சினையாக பேசத் தொடங்கிவிட்டனர். ஆனால் நான் ஒரு டீ வியாபாரியாக இருந்தது குறித்து பெருமைப்படுகிறேன். சவுதாரை பொறுத்தவரையில், 2011-12ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்திலேயே நான் இந்த வார்த்தையை பயன்படுத்தியிருக்கிறேன். மகாத்மா காந்திக்கும் சவுகிதாருக்கான பண்புகள் இருந்தது” என்று தெரிவித்தார்.

**நீரவ் மோடி, விஜய் மல்லையா**

“வெளிநாட்டுக்கு தப்பியோடுபவர்கள் குறித்து எதிர்க்கட்சியினர் எங்களை விமர்சிக்கின்றனர். நாங்கள் எடுக்கும் கடுமையான நடவடிக்கைகளுக்கு பயந்தே அவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பியோடுகின்றனர். அவர்களது சொத்துகள் தொடர்பாக கடும் நடவடிக்கை எடுத்துள்ளதை நீங்கள் கவனிக்கவில்லையா? எதிர்க்கட்சி ஆட்சியில் இருந்திருந்தால், வெளிநாட்டுக்கு தப்பியோடியவர்களின் பெயர் கூட உங்களுக்கு தெரிந்திருக்காது”

**ராபர்ட் வதரா விசாரணை**

“இந்தியாவில் ஒரு முறையான சட்ட அமைப்பு உள்ளது. காங்கிரஸுக்கு நீதிமன்றத்திலிருந்து பல நோட்டீஸ்கள் வந்துள்ளன. ஆனால் தாமதமாகவே காங்கிரஸ் பதிலளிக்கிறது. நாம் அரசியல் பாதையில் போக வேண்டுமென்றால் போகலாம். ஆனால் நீதித் துறை பாதையில் பயணிப்பதை உறுதி செய்ய வேண்டும்”

**எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி**

“மேற்கு வங்கத்திலும், கேரளாவிலும், ஒடிசாவிலும் எதிர்க்கட்சிகளுக்கிடையே ஏதும் புரிதல் இருக்கிறதா? நாட்டு மக்கள் எங்களுக்கு பெரும்பான்மை அளிக்க வேண்டும் என முடிவு செய்துவிட்டால் யார் கூட்டணி அமைத்தாலும் எங்களை வெளியேற்ற முடியாது. அறுதி பெரும்பான்மையுடன் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசை கொண்டுவர நாட்டு மக்கள் முடிவெடுத்துவிட்டனர். அதில் எந்த சந்தேகமும் இல்லை”

**ஒரு பொறுப்பான குடிமகனாக மோடி**

மூன்று விஷயங்களில் நாங்கள் உறுதியாக உள்ளோம். ஒன்று, அறுதிப் பெரும்பான்மையுடன் நாங்கள் மீண்டும் வருவோம். இரண்டு, தேசிய ஜனநாயகக் கூட்டணியும், பாஜகவும் அதிக தொகுதிகளை கைப்பற்றும். மூன்று, ஒரு பிரதமராகவும், ஒரு பொறுப்பான குடிமகனாகவும், யார் வெற்றி பெற்றாலும் அவர்களுடன் இணைந்து பணிபுரிய விரும்புகிறேன். அரசியலில் எல்லோரும் இணைந்து உழைக்க வேண்டும். கடந்த 30 ஆண்டுகளாக மக்கள் துன்பமுற்றனர். ஆனால் கடந்த ஐந்தாண்டுகளில் மகிழ்ச்சியாக இருந்தனர். அதனால் தேர்தல் குறித்து நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன்”

**குடும்ப அரசியல்**

“குடும்ப அரசியல் எனது பிரச்சினையில்லை. ஆனால் இந்தியாவின் ஜனநாயகத்துக்கு குடும்ப அரசியல் ஒரு முக்கிய அச்சுறுத்தலாகும். தனிநபரின் நிறுவனம் போல இயங்கும் ஒரு கட்சியில் ஒரு குடும்பத்தினரை தவிர வேறு யாரும் தலைவர் பதவிக்கு வரமுடியவில்லை என்றால் அது தவறு. இதுபோன்ற பரம்பரை அரசியல் குடும்பங்களை வெளிக்கொண்டு வரவேண்டியது உங்களை போன்ற ஊடகங்களின் பொறுப்பு”

**ராகுல் காந்தியின் வறுமை ஒழிப்பு முழக்கம்**

“வறுமை பற்றி நேரு பேசினார். பின்னர் ராஜிவ் காந்தி பேசினார். அதன்பின் சோனியா காந்தியும் பேசினார். இப்போது ராகுல் காந்தியும் பேசுகிறார். ஐந்தாவது தலைமுறையாக அவர்களின் குடும்பம் இதைப் பற்றி பேசுகிறது. இதை மீண்டும் மீண்டும் சொல்வதை அவர்கள் கொள்கையாகவே வைத்துள்ளனர்”

**மாவோயிஸ்டுகள் மற்றும் தீவிரவாதக் குழுக்களின் விமர்சனம்**

“நாடுதான் மிக முக்கியமானது. நாட்டுக்கு அச்சுறுத்தலாக இருப்பது யாராக இருந்தாலும் சட்டம் தன் கடமையை செய்யும்”

**டெல்லியில் ஒரு அங்கமாகிவிட்டீர்களா?**

“டெல்லியிலும், டெல்லிக்கு வெளியிலும் எனது குடும்பம் இருக்கிறது. சென்னை, புபனேஷ்வர், குஜராத் ஆகிய இடங்கள் எனக்கு எவ்வளவு முக்கியமோ அதேபோல டெல்லியும் முக்கியம்தான்”

நேர்காணலின் முடிவில், நாட்டு மக்கள் அனைவரும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்று மோடி வலியுறுத்தினார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *