}பாலில் கலப்படம்: உறுதி செய்த ஆய்வு ரிப்போர்ட்!

public

நெஸ்லே, ரிலையன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பால் பொருள்களில் காஸ்டிக், ப்ளீச்சிங் பவுடர் ஆகியவை கலப்படம் செய்யப்பட்டுள்ளதாக, பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த மே 24ஆம் தேதி தனியார் பால் நிறுவனங்களில் பாலில் உயிருக்குக் கேடு விளைவிக்கும் ரசாயனப் பொருள்களைக் கலப்பதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளைத் தனியார் பால் நிறுவனங்கள் மறுத்து வந்தன. இதனால் தனியார் பால் நிறுவனங்களின் பாலை வாங்க மக்கள் அச்சப்பட்டனர். இதற்கு பதிலளித்த பால் முகவர்கள் சங்கம், ‘ஆதாரமில்லாமல் அமைச்சர் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்’ என்று தெரிவித்தது.

இந்தச் சூழ்நிலையில் சென்னையில் நேற்று ஜூன் 27ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறுகையில், “நெஸ்லே எவ்ரிடே பால் பவுடர்களில் காஸ்டிக் சோடா, ப்ளீச்சிங் பவுடர் கலந்துள்ளதாக அறிக்கை வந்துள்ளது. அதேபோல ரிலையன்ஸ் நிறுவன பாலிலும் கலப்படம் உள்ளதாக அறிக்கை வந்துள்ளது. மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட சோதனைக்கூடத்தில் நடத்தப்பட்ட சோதனையில் இது தெரியவந்துள்ளது.

கெட்டுப்போன பாலில் அமிலத்தன்மைக்காக காஸ்டிக் சோடாவைச் சேர்க்கின்றனர். பின்னர் அதைப் பாலாக்காமல் பால் பவுடராக்கி விடுகின்றனர். இதனால் காலரா, இதயநோய், சிறுநீரகக் கோளாறு, அல்சர் போன்ற நோய்கள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்தச் சோதனையை யார் வேண்டுமானாலும் செய்யலாம். ஆவின் பால், தாய்ப்பாலுக்கு இணையானது என்று கூறியிருந்தேன். தற்போது ஆவின் பாலில் எவ்விதக் கலப்படமும் இல்லை என்பதை சோதனை அறிக்கை உறுதி செய்துள்ளது.

மக்களின் விழிப்பு உணர்வுக்காகவே இதை நான் கூறுகிறேன். அனைத்து நிறுவனங்களும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதில்லை. ஒரு சில நிறுவனங்களே ஈடுபடுகின்றன. ஆகவே, மக்கள் நல்ல நிறுவனத்துக்குச் சொந்தமான பொருள்களைப் பயன்படுத்த வேண்டும். ஆய்வு முடிவுகள் வந்தால் மேலும் பல நிறுவனங்கள் இதில் சிக்கும். தனியார் பால் நிறுவனங்களின் பால் பொருள்களையும், ஆவின் பால் நிறுவன பொருள்களையும் சோதித்து பார்க்கலாம்.

தமிழகத்தில் ஆவின் பால் விற்பனை அதிகரிக்கப்படும். பாலில் கலப்படம் செய்வோருக்குக் கூடுதல் தண்டனை வழங்குவது குறித்து தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. பால் கலப்படம் குறித்து சிலர் கேலி பேசி வருகின்றனர். எனக்கு போனில் மிரட்டல்கள் வந்தவண்ணம் உள்ளன. ஆனால், இந்த விவகாரத்தில் யாருக்கும் பயப்படாமல் நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் கூறியுள்ளார். இதற்கு நடவடிக்கை எடுக்கும் முழு அதிகாரம் என்னிடம் இல்லை. அதிகாரம் என்னிடம் இருந்தால் உடனடியாக எடுப்பேன்” என்று தெரிவித்தார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *