நிக்கா ஹலாலா, பலதார மணம்: மத்திய அரசுக்கு உத்தரவு!

public

முஸ்லிம் மதத்தில் பின்பற்றப்படும் பலதார மணம், நிக்கா ஹலாலா ஆகியவற்றிற்குத் தடை கோரிய வழக்கில் மத்திய அரசும், மத்திய சட்ட ஆணையமும் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முஸ்லிம் மதத்தில் கணவர் தனது மனைவியை மூன்று முறை தலாக் சொல்லி விவாகரத்து செய்யும் நடைமுறை இருந்தது. இது தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கில் முத்தலாக் முறை என்பது சட்ட விரோதமானது என்று கடந்த ஆண்டு தீர்ப்பை வழங்கியது உச்ச நீதிமன்றம். இந்தத் தீர்ப்பு முஸ்லிம் பெண்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் முஸ்லிம் மதத்தில் பின்பற்றப்படும் பலதார மணம், நிக்கா ஹலாலா குறித்து ஆய்வுசெய்ய உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

நான்கு மனைவிகள் வரை திருமணம் செய்துகொள்ள இஸ்லாம் ஆணுக்கு அனுமதி வழங்குவது பலதார மணம் என்று அழைக்கப்படுகிறது. இது பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி எனப் பரவலாகக் கருதப்படுகிறது.

அதுபோன்று, முஸ்லிம் தனிநபர் சட்டத்தின்படி, கணவன்-மனைவி இடையே விவாகரத்து ஆன பிறகு, மீண்டும் இருவரும் சேர விரும்பினால் அதற்கு நிக்கா ஹலாலா என்ற முறை உள்ளது. இதன்படி விவாகரத்தான பெண் வேறொரு ஆணைத் திருமணம் செய்துகொண்டு விவகாரத்து ஆகியிருந்தால் மட்டுமே முதல் கணவருடன் மீண்டும் சேர்ந்து வாழமுடியும்.

இந்த இரு முறைகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

பலதார மணம், நிக்கா ஹலாலா முறையை அங்கீகரிக்கும் முஸ்லிம் தனிநபர் சட்டத்தின் 2ஆவது பிரிவு, அரசியலமைப்புச் சட்டம் மற்றும் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என அறிவிக்கக் கோரியும், நிக்கா ஹலாலாவை இந்திய தண்டனைச் சட்டம் 375ஆவது பிரிவின் கீழ் பாலியல் பலாத்காரம் என அறிவிக்க வேண்டும் என்றும் டெல்லி பாஜக தலைவரும், வழக்கறிஞருமான அஸ்வினி உபாத்யாய் கடந்த 5ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

கடந்த 14ஆம் தேதி டெல்லியைச் சேர்ந்த பெண் ஒருவர், “நிக்கா ஹலாலா முறை முஸ்லிம் பெண்களுக்கு பாதிப்பாக அமைகிறது. எனது கணவர் என் அனுமதியின்றி வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். காவல் துறையினரும் வழக்குப் பதிவு செய்ய மறுத்துவிட்டனர். எனவே இந்த முறைக்குத் தடை விதிக்க வேண்டும்“ என்று கூறியிருந்தார்.

ஹைதராபாத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர், ”முஸ்லிம் தனிச் சட்டத்தின் கீழ் வரும் அனைத்துத் திருமணங்களும் பெண்களின் அடிப்படை உரிமைக்கு எதிராக உள்ளது. ஆண்களுக்குப் பலதார மணத்துக்கு அனுமதிக்கும் முறை பெண்களுக்கு அனுமதிப்பதில்லை” என்று உச்ச நீதிமன்றத்தில் கூறியிருந்தார்.

இந்த மனுக்கள் இன்று (மார்ச் 26) உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள், ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்த மனுக்கள் குறித்து விசாரணை நடத்த 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு உருவாக்கப்படும் என்று கூறிய நீதிபதிகள் நிக்கா ஹலாலா, பலதார மணம் ஆகியவற்றுக்கு அரசியலமைப்பு அங்கீகாரம் இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும் தெரிவித்தனர்.

இது குறித்து மத்திய அரசும், மத்திய சட்ட ஆணையமும் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *