தொடரி: தொடரும் பிரபு சாலமனின் ‘காப்பி’ ஃபார்முலா!

public

அந்த சீன் வரும்போது சில்லுன்னு காத்தடிக்கும். அப்போது படம் பார்க்கும் நமக்கும் சில்லுனு ஒரு ஃபீல் வரும். காரணம், அது பிரபு சாலமன் படம் என்பதால் மட்டுமல்ல; ஏ.சி. டெம்பரேச்சர் அதிகமாக இருப்பதால் ஏற்படும் உணர்வு. பிரபு சாலமன், தமிழ் சினிமாவில் மைனா, கும்கி என இரு மறக்க முடியாத திரைப்படங்களைக் கொடுத்தவர். மரங்களின் பச்சை நிறமும்,குளிர்க்காற்றின் நீலநிறமும் சங்கமிக்கும் ஒரு நிறம், இவரது படங்களின் டெம்ப்ளேட். அதுவே அவரது ‘தொடரி’ திரைப்படத்திலும் தொடர்ந்திருக்கிறது. ஆனால், ‘தொடரி’ திரைப்படத்துக்கு Under Siege 2 திரைப்படத்தின் கதையை ஏன் எடுத்திருக்கிறார் என்பதுதான் புரியவில்லை.

தீவிரவாதிகள் கடத்திவிடும் ரயிலில், என்ன கேட்டாலும் கொடுக்க அரசாங்கம் தயாராக இருக்கும் அளவுக்கு ஒரு அரசியல்வாதியும், மக்களும் சிக்கிக் கொள்கிறார்கள். அந்த ரயிலின் கேன்டீனில் வேலை செய்யும் ஹீரோ, தீவிரவாதிகளை துவம்சம் செய்வது டிரெய்லரில் சொல்லப்பட்டிருக்கிறது. டிரெய்லரைப் பார்த்தே விமர்சனம் செய்வது சரியா? என்ற கேள்வி நியாயமானதுதான். ஆனால், ஸ்டோரி லைன் என்ற ஒன்று இருக்கிறது. கேரக்டர் கெபாஸிட்டி என்ற மற்றொன்றும் இருக்கிறது. டீசர் என்பதோ டிரெய்லர் என்பதோ எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு ‘தொடரி’ ஒரு உதாரணம். முதலில் Under Siege 2 கதை என்னவென்று பார்ப்போம்.

அமெரிக்காவின் டென்வர் மாகாணத்திலிருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணம் வரை செல்லும் ராக்கி மவுண்டெயின்ஸ் ரயிலைத் தீவிரவாதிகள் கடத்தி விடுகிறார்கள். அமெரிக்க கடற்படையிலிருந்து ரிட்டையர் ஆன ஹீரோ, தனது மருமகளுடன் அந்த ரயிலில்தான் இருக்கிறார். தீவிரவாதிகளிடமிருந்து அந்த ரயிலை அவர் காப்பாற்றுவதுதான் கதை. இதற்கு முந்தையUnder Siege படத்தில் கடத்தப்படும் கப்பலைக் காப்பாற்றுவார். இதில் ரயிலைக் காப்பாற்றுவார். முக்கிய விஷயமே ரயில் பயணம்தான். டென்வரிலிருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் செல்லும் ரயிலுக்கு எங்கும் சிக்னல் இருக்காது என்ற 1995-ஆம் ஆண்டின் உண்மையை அப்படியே வைத்து படமெடுத்திருப்பார்கள். ஆனால், பிரபு சாலமன் டெல்லியிலிருந்து சென்னை வரும் எக்ஸ்பிரஸை தேர்ந்தெடுத்திருக்கிறார்.

2 நிமிட டிரெய்லரை வைத்து 2 மணி நேர படத்தை நிச்சயம் விமர்சனம் செய்ய முடியாதுதான். ஆனால், டிரெய்லரிலேயே அத்தனை கேரக்டர்களையும் கொண்டு வந்துவிட்டார் பிரபு சாலமன். டிரெயின் மாஸ்டர் தம்பி ராமய்யா, ஹீரோ தனுஷ், ஹீரோயின் கீர்த்தி சுரேஷ், கருணாகரன், ராதாரவி, கணேஷ் வெங்கட்ராமன், ஹரிஷ் உத்தமன், போஸ் வெங்கட் என முக்கிய கதாபாத்திரங்கள் அனைத்தும் அங்கேயே தான் இருக்கின்றன. வேறு கதைக்கு வழியே இல்லை.

டிரெய்லரில் சொல்லாதது என்ன? என்ற கேள்விக்கு, ரயிலைக் கடத்திய பெண் தீவிரவாதி பூஜா ஜவேரி என்ற பதில் கிடைக்கும். மற்றபடி Under Siege 2 திரைப்படத்தின் கதைக்கும் இதற்கும் எப்படிப்பட்ட மாற்றங்கள் இருக்கலாம் என்றால், Seven Samurai படத்தில் கிராமத்தில் நெல்லைக் கொள்ளையிடும் மன்னரின் ஆட்களுக்கும், அவர்களுடன் சண்டையிட்டு ஊரைக் காப்பாற்றும் சாமுராய் வீரர்களுக்கும் பதிலாக கொம்பன் – மாணிக்கம் என இரு யானைகளை வைத்து, அந்த படத்துக்கும் இந்த படத்துக்கும் சம்மந்தம் இல்லை என்று சொன்னமாதிரி, தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் நிற்காமல் செல்லும் எக்ஸ்பிரஸை, பாடல்களுக்காக அவ்வப்போது ஸ்லோ மூவ்மெண்டிலும், ஆக்‌ஷன் ப்ளாக்குகளில் அதிவேகத்திலும் ஓட வைத்ததால் ‘தொடரி’க்கும், Under Siege 2-க்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று சொல்லிவிடலாம்.

டல் கலர் சட்டை பேன்ட், சாம்பல் நிற பாவாடை – சட்டை என வழக்கமான பிரபு சாலமன் படங்களிலிருந்து எந்தவிதத்திலும் மாறாமல், இம்ப்ரெஸ் செய்ய தவறிவிட்டதுடன், ஏன் இந்த படத்தைப் பார்க்க வேண்டும் என்ற கேள்விக்கானப் பதிலை சொல்லவில்லை. ஒருவேளை இளைய சூப்பர் ஸ்டார்(!?) தனுஷை அன்டர்கவர் ஆபரேஷனில் இருக்கும் மிலிட்டரி ஆஃபீஸராக காட்டிவிடுவாரோ என்று நினைக்கும்போதே, டமால் என்ற ஒரு சத்தம் கேட்கிறது.

பிரபு சாலமன் சார் பார்த்து செய்யுங்க. ஆனால், உங்கள் படத்திலும் தனுஷ் ஸ்டைலில் ‘எங்க பொண்ணுங்க எல்லாம் Born Actress சார். பசங்களைக் கேட்டு பாருங்க என்னமாதிரி நடிப்பாங்க’ என்பன போன்ற வசனங்களை வைத்து, ஹீரோயிசத்துக்கு பணிந்துவிட்டீர்களே என நினைக்கும்போது கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது. “ஒவ்வொரு படம் முடிந்த பின்னும் ஒரு நீண்ட பயணம் செல்வேன். அப்போதுதான் எனக்கு கதைகள் கிடைக்கும்” என்று வழக்கமாக சொல்வார் பிரபு சாலமன். அடுத்த முறை ஆங்கிலப்படங்கள் கிடைக்காத ஒரு இடத்துக்கு அவரது பயணத்தைத் திட்டமிட்டுக் கொடுத்து ‘மைனா’ மாதிரியான ஒரு நல்ல படத்தைப் பார்க்கட்டும் தமிழ் சினிமா. யாருய்யா அது, மைனா ‘Dog bite dog’ சைனீஸ் படத்தோட காப்பின்னு கத்துறது?மேடைக்கு வாங்க!�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *