{தூத்துக்குடி: மார்க்சிஸ்ட் கட்சி மீது வழக்கு!

public

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து நீதிமன்ற அனுமதியோடு நடந்த போராட்டத்தை ஒட்டி மார்க்சிஸ்ட் கட்சி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் தூத்துக்குடி போலீஸார்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்தும், மனித உரிமை மீறல்களைக் கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டக்குழு சார்பில் 18.6.18 அன்று கண்டன பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்து, பொதுக்கூட்டத்திற்கு தூத்துக்குடி மாவட்ட காவல் துறையிடம் அனுமதி கேட்கப்பட்டது. ஆனால், அனுமதி மறுத்தது தூத்துக்குடி காவல் துறை.

அதன் பிறகு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், பொதுக்கூட்டம் நடத்துவதற்கு அனுமதி கேட்டு அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் கே.எஸ்.அர்ச்சுனன் வழக்கு தொடுத்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் சில நிபந்தனைகளுடன் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி அளித்தது.

நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளுக்குட்பட்டு 18.06.2018 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத், மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி ஆகியோர் உரையாற்றினர். எந்தவித அசம்பாவிதமுமின்றி அமைதியாகவும், நீதிமன்ற அறிவுறுத்தலின்படியும் பொதுக் கூட்டம் நடந்து முடிந்தது.

இச்சூழ்நிலையில், உயர் நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை மீறி பொதுக்கூட்டம் நடத்தியதாக நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த மாவட்டச் செயலாளர் கே.எஸ்.அர்ச்சுனன் மீதும், பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற தோழர்கள் மீதும் தென்பாகம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதைக் கண்டித்திருக்கும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், “உயர் நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளுக்குட்பட்டு நடைபெற்ற இந்தப் பொதுக்கூட்ட ஏற்பாடுகளின் நிபந்தனைகளை மீறியதாக வழக்கு தொடுத்திருப்பது காவல் துறையினரின் பழிவாங்கும் நடவடிக்கையையே வெளிப்படுத்துகிறது. காவல் துறையின் ஜனநாயக விரோதப் போக்கை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு வன்மையாகக் கண்டிப்பதோடு, இந்தப் பொய் வழக்கை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டுமெனத் தமிழக அரசை வலியுறுத்துகிறது’’ என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *