தலாக்கை பெண் நிராகரிக்க முடியுமா? : உச்சநீதிமன்றம் !

public

முத்தலாக் வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் இன்றைய (17.5.2017) விசாரணையில் ஆண்கள் தலாக் கூறும் போது அதை மறுக்கும் உரிமை பெண்களுக்கு உள்ளதா ? என்ற கேள்வியை முஸ்லீம் சட்ட வாரியத்திடம் முன்வைத்துள்ளது.

முத்தலாக் முறை குறித்தும், இது குறித்த வழக்கு மற்றும் விசாரணை குறித்து நாம் ஏற்கெனவே நமது மின்னம்பலத்தில் விரிவாக எழுதியிருந்தோம். மூன்று முறை தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்யும் நடைமுறை முஸ்லிம் மதத்தில் பின்பற்றப்படுகிறது. இதை எதிர்த்து முஸ்லிம் பெண்கள் சிலர் மற்றும் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள், தலைமை நீதிபதி கெஹர் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட கோடை விடுமுறை கால அமர்வு முன்பு விசாரிக்கப்படுகிறது. தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதிகள் குரியன் ஜோசப், ஆர்.எஃப்.நரிமன், யு.யு.லலித் மற்றும் அப்துல் நசீர் ஆகியோர் கொண்ட அமர்வில் முத்தலாக் வழக்கு தினசரி விசாரணையாக நடைபெற்றுவருகிறது.

இதையடுத்து நடந்த விசாரணையில் முத்தலாக் முறையை நீதிமன்றம் ரத்து செய்தால் இஸ்லாமியர்களுக்கென தனி சட்டம் கொண்டுவரத் தயார் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. இதற்கு அடுத்த நாள் நடந்த விசாரணையில்(16.5.2017) இதை எதிர்த்து வாதாடிய மூத்த வழக்கறிஞரும், முன்னாள் சட்ட அமைச்சருமான கபில் சிபல், முத்தலாக் முறை 637 ஆம் ஆண்டிலிருந்து கிட்டத்தட்ட 1400 ஆண்டுகளாக பழக்கத்தில் உள்ளது. அயோத்தியில்தான் ராமர் பிறந்தார் என்பது எப்படி நம்பிக்கையோ, அதேபோல் முத்தலாக் 1400 ஆண்டுகளாக முஸ்லீம்களால் பின்பற்றப்பட்டு வரும் நம்பிக்கை . அந்த மதநம்பிக்கைக்கு சட்டக்குறுக்கீடு இருக்கக்கூடாது என்றும் அவர் வாதாடினார்.

இதனிடையே முத்தலாக் குறித்த 5வது நாள் விசாரணை இன்று(17.5.2017) நடைபெற்றது. அப்போது முத்தலாக் முறைக்கு மறுப்பு தெரிவிக்கும் அதிகாரத்தை முஸ்லிம் பெண்களுக்கு அவர்கள் திருமண ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் போதே வழங்கலாமா? அல்லது திருமணங்களை நடத்திவைக்கும் தலைமை காஜிகளுக்கு இந்த நடைமுறையைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தலாமா? என அனைத்து இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்திடம் உச்ச நீதிமன்றம் யோசனை கோரியது. இதற்குப் பதிலளித்த இஸ்லாமிய வாரியம் பெண்களும் முத்தலாக் கூறலாம் எனத் தெரிவித்துள்ளது. மேலும் முத்தலாக் சொல்ல முஸ்லிம் பெண்களுக்கு அனைத்து உரிமைகளும் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள், “ஒரு ஆண் முத்தலாக் கூறினால் அதை மறுக்கும் அதிகாரம் பெண்களுக்கு உண்டா என்று கேள்வி எழுப்பி அதற்குப் பதில் அளிக்குமாறு முஸ்லீம் சட்டவாரியத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் நமது மின்னம்பலம் இதழுக்காகக் கவிஞரும் , திமுக மகளிர் அணி பிரசார குழு செயலாளருமான சல்மா அவர்களைத் தொடர்பு கொண்டு, முத்தலாக் வழக்கு குறித்து உங்கள் கருத்து என்ன என்று கேட்டேன். அதற்கு அவர் அளித்த பதில் இதோ:

இஸ்லாமிய மதத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தலாக் முறை பயன்பாட்டில் இருந்து வருகிறது. அதை நடைமுறைப்படுத்தும் விதத்தில்தான் தற்போது சிக்கல் எழுந்துள்ளது. இதுதான் இன்று பெரிய முரண்பாட்டை ஏற்படுத்தியிருக்கிறது. இஸ்லாமிய நாடுகளில் குரானில் எப்படி வரையறுக்கப்பட்டுள்ளதோ அதை அடி பிறழாமல் பின்பற்றி வருகிறார்கள். அப்படி பின்பற்றும் பட்சத்தில் அது பிரச்சனையே இல்லை. நீதிமன்றத்தில் எப்படி விவாகரத்து வழங்குகிறார்களோ அதே நடைமுறைதான் தலாக் கூறுவதிலும் பின்பற்றப்பட வேண்டும். ஒரு தலாக்கிற்கும் இன்னொரு தலாக்கிற்கும் இடையே இடைவெளி வேண்டும். அந்த இடைவெளி ஒரு மாதவிடாய் காலம் என்று குரான் கூறியுள்ளது. ஒரு முறை தலாக் கூறிய பின்னர் கணவனும் மனைவியும் சேர்ந்து வாழ வேண்டும். அப்போது இருவரிடையே உள்ள மன வேற்றுமை, கருத்து வேறுபாடு நீங்கி அவர்கள் மீண்டும் இணைந்து வாழ வாய்ப்பு உண்டு. மூன்று தலாக்கிற்கு இடையே சமரசம் ஏற்படாத பட்சத்தில்தான் இருவரும் அந்தத் திருமண உறவு முடிந்துபோகும். இது அனைத்து இஸ்லாமிய நாடுகளிலும் அழகாகப் பின்பற்றப்படுகிறது. ஆனால் இந்தியாவில் குறிப்பாக வட இந்தியாவில் உள்ள சில முஸ்லீம் சமூகத்தினர் ஒரே நேரத்தில் மூன்று முறை தலாக் கூறி மண வாழ்வை முடிவுக்குக் கொண்டு வந்துவிடுகிறார்கள்.

இதுதான் பிரச்சனையாக தற்போது பேசப்படுகிறது. அப்படி ஒரே நேரத்தில் மூன்று முறை தலாக் கூறுவதை இஸ்லாம் ஏற்றுக்கொள்ளவில்லை. அது செல்லாது. ஆண் என்ற அகந்தையை ஒருவர் வெளிப்படுத்தும் போதுதான் இத்தகைய தவறு நடக்கிறது. இந்நிலையில்தான் பெண்கள் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதியை எதிர்த்து நீதிமன்றத்திற்குச் செல்கிறார்கள்.

இஸ்லாமிய நாடுகளில் பின்பற்றக் கூடிய ஒரு விஷயத்தை இங்கே ஏன் பின்பற்றக் கூடாது என்று கேள்வி எழுவது இயல்பானதே. முஸ்லீம் அமைப்புகள், தனிநபர் முஸ்லீம் சட்ட வாரியம்தான் இந்த தவறை சரிசெய்ய வேண்டும். அப்படி சரிய செய்யாத பட்சத்தில்தான் பெண்கள் நீதிமன்றத்தை நாடுகிறார்கள். ஒரே நேரத்தில் முத்தலாக் கூறியதை எதிர்த்து ஒரு பெண் நீதிமன்றத்திற்குச் சென்றார். அந்த வழக்கு விசாரணையில் ஒரே நேரத்தில் முத்தலாக் கூறியதை செல்லாது என்று நீதிமன்றம் சொல்லிவிட்டது. ஆனால் ஆண்களும், முஸ்லீம் அமைப்புகளும் இந்தப் பிரச்சனையை தங்களுக்குள் நெறிப்படுத்த வேண்டுமல்லவா? தவறு செய்யும் ஆண்களை இந்த அமைப்புகள் கண்டிக்காமல் தண்டிக்காமல் விட்டதால்தான் பெண்கள் மறுபடியும் மறுபடியும் நீதிமன்றத்தை நாட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்கள்.

இந்தப் பிரச்சனைதான் தற்போது நீதிமன்றத்திற்கு வந்திருக்கிறது. பிஜேபி அரசைப் பற்றி நமக்கு நன்றாகவே தெரியும். அவர்களின் வலதுசாரித்துவம், ஒற்றை மதக் கொள்கையை அனைவரும் அறிவோம். இந்துக்களின் பெரும்பான்மையை நிறுவ முயலும் பாஜக அரசு தலாக் முறையைச் செல்லாது என்று கூறுவதையும். முஸ்லீம்களுக்கு தனிச்சட்டம் இயற்றுவோம் என்று கூறுவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. இது தனிப்பட்ட மத நம்பிக்கை. உங்களின் கடவுளைப் பற்றி உங்களுக்கு ஒரு நம்பிக்கை இருக்கிறது என்றால் இஸ்லாமியர்கள் தங்களின் கடவுளைப் பற்றி ஒரு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். நீங்கள் ஒரு சட்டத்தை இயற்றினால், குரானில் உள்ள சட்டத்தை மீறி அதை முஸ்லீம்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. முத்தலாக் முறையைப் பற்றி பேச பிஜேபி அரசிற்கு எந்த அருகதையும் இல்லை.

இஸ்லாமிய தனி நபர் சட்ட வாரியம் மிகப் பெரிய சக்தியோடு இந்தியாவில் இயங்கி வருகிறது. யார் அவர்களுக்கு இந்த அதிகாரத்தைக் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால் அவர்களுக்கு அந்தச் சக்தி தேவையான ஒன்றுதான். அவர்கள்தான் இந்தப் பிரச்சனையை பெண்கள் பாதிக்காத வண்ணம் நெறிப்படுத்த வேண்டும். மைனாரிட்டிகளான முஸ்லீம்களின் உரிமையை பிஜேபி அரசு தொடக் கூடாது என்று நான் நினைக்கிறேன். இந்துக்கள் எதை உண்ண வேண்டும் முஸ்லீம்கள் எதை உண்ண வேண்டும் என்பதை முடிவு செய்யும் இடத்திற்கு பிஜேபி அரசு சென்றுவிட்டது. இது தொடர்ந்தால் சிக்கலாக மாறும். முஸ்லீம் தனி நபர் சட்டவாரியம்தான் இந்தப் பிரச்சனைக்கு தீர்வு வேண்டும். பிஜேபி அரசு அல்ல. இந்தப் பிரச்சனையை சரி செய்யும் கடமையும் உரிமையும் முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியத்திற்கு இருக்கிறது. அதைச் சரி செய்யும் பணியில் வாரியம் இறங்கிவிட்டது என்று நான் நம்புகிறேன்.

மேலும் அவரிடம், பெண்களுக்கு தலாக் சொல்லும் உரிமை இருக்கிறதா? தலாக் கூறுவதை மறுக்கும் அதிகாரம் பெண்களுக்கு உள்ளதா என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இது குறித்து உங்கள் கருத்து என்னவென்று கேட்டேன். அதற்கு சல்மா அளித்த பதில் இதோ:

திருமண உறவை நிராகரிக்கும் உரிமை பெண்களுக்கும் இருக்கிறது. ஆனால் அதற்குப் பெயர் தலாக் என்பதல்ல… ‘குலா’ என்று சொல்வார்கள். எங்கள் ஊரிலே நிறையப் பேர் நிறையப் பெண்கள் திருமண உறவைக் குலா மூலம் நிராகரித்துள்ளார்கள். ‘எனக்கு இந்த ஆளப் பிடிக்கவில்லை. எனக்கு இந்தத் திருமண உறவு வேண்டாம்’ என்று ஒரு பெண் நினைத்தால் அதைத் தாய் தந்தையரிடம் கூற வேண்டும். அவர்கள் சம்மதித்தால் ஜாமத்தில் சென்று குலா சொன்னால் அந்தப் பெண் திருமண உறவில் இருந்து எளிமையாக வெளியே வந்துவிடலாம்.

ஆனால் ஒரு ஆண் தலாக் சொல்லும் போது மறுக்கும் அதிகாரம் பெண்களுக்கு இல்லை. ஒரு ஆண் வாழ முடியாது என்றால் யாரும் யாரையும் கட்டாயப்படுத்த முடியாது அல்லவா?. எனக்கென்னவோ ஒருவர் விரும்பாத போது அந்த வாழ்க்கையைத் தொடர வேண்டியதில்லை என்றுதான் தோன்றுகிறது. ஆனால் ஒரு வாதத்திற்கு என்று எடுத்துக்கொண்டால் ஒரு பெண்ணிற்கு தலாக்கை மறுக்கும் அதிகாரம் வேண்டியிருக்கிறது என்று சொல்லலாம். மிகச் சாதாரண காரணங்களுக்காக, உதராணத்திற்கு பெண் அழகாக இல்லை, கார் வாங்கிக்கொடுக்கவில்லை போன்ற காரணங்களுக்காக தலாக் சொல்வது. இது எல்லா இடங்களிலும் இருக்கிறது. ஆனால் நீதிமன்றத்திலோ ஜாமத்திலோ அந்த ஆண் அந்தக் காரணங்களை சொல்வதில்லை. பொய்யான காரணத்தை புனைந்து சொல்லுவான். என்னைப் பொறுத்தவரை ஒருவன் வாழ விரும்பவில்லை என்று சொன்ன பிறகு அந்தப் பெண்ணை அவனோடு வாழ நிர்ப்பந்திப்பது, அல்லது அவளே வாழ விரும்புவது, அவளுக்கு அது நரகம்தான். எனவே பிரிந்துவிடுவதே அவள் வாழ்க்கைக்கு நல்லது.

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *