டிஜிட்டல் திண்ணை-அதிமுக-வுக்கு சிக்கல் 35-திமுக-வுக்கு சிக்கல் 60

public

வாட்ஸ் அப் ஆன்லைனில் வந்ததும் டைப்பிங் ஆரம்பித்திருந்தது.

‘உளவுத்துறை, பிரைவேட் இன்வெஸ்டிகேசன் டீம் என பல தரப்பில் இருந்தும் தினமும் ரிப்போர்ட் கேட்டபடியே இருக்கிறார் ஜெயலலிதா. பிரைவேட் இன்வெஸ்டிகேசன் டீம் லேட்டஸ்டாக ஒரு ரிப்போர்ட் கொடுத்திருக்கிறது. அதில், ‘வாசன், வேல்முருகன், ஸ்ரீதர் வாண்டையார், சேதுராமன், ஜான் பாண்டியன், ஈஸ்வரன் ஆகியோர் எப்படியும் அதிமுக-வில் தங்களுக்கு இடம் கிடைக்கும் எனக் காத்திருந்தார்கள். ஆனால், அவர்களுக்கு கடைசி நேரத்தில் சீட் கொடுக்கவில்லை. இதனால் அவர்கள் ஆதரவை விலக்கிக் கொண்டார்கள். இவர்களுக்கு பெரியளவில் வாக்கு வங்கி இல்லை என்றாலும், அவர்கள் சார்ந்திருக்கும் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் அதிமுகமீது கோபத்தில் இருக்கிறார்கள். ‘நம்ப வெச்சு ஏமாத்திட்டாங்க…’ என்ற வருத்தம் அவர்களிடம் இருக்கிறது. இவர்கள் எல்லோரையும் சேர்த்தால் மொத்தமாக 6 சதவிகிதம் வாக்கு வங்கி வரும். இந்த 6 சதவிகிதமும் தற்போது அதிமுக-வுக்குக் குறையும். சரி, இதனால் என்ன பாதிப்பு இருக்கப்போகிறது? என நினைக்க வேண்டாம். தமிழ்நாடு முழுக்க 35 தொகுதிகளில் இவர்கள் வாக்குகள் குறிப்பிடத்தக்க அளவில் இருக்கிறது. இந்த 35 தொகுதிகளில் வெற்றி தோல்வியை நிர்ணயம் செய்யப்போவது இவர்களின் வாக்குகள்தான். அதனால், அதிமுக-வுக்கும் இந்த 35 இடங்களில் பாதிப்பை உண்டாக்கும்’ என்பதுதான் அந்த ரிப்போர்ட்.

அந்த ரிப்போர்ட்டை ஜெயலலிதா படித்தபோது சசிகலாவும் அருகில் இருந்தாராம். ‘அவங்க இஷ்டத்துக்கு வந்து பேசுவாங்க. அவங்களுக்கு சீட் கொடுக்கணுமா? வேல்முருகனுக்கு டபுள் டிஜிட்ல சீட் வேணுமாம். ஜான் பாண்டியனுக்கு 10 சீட் வேணுமாம். உள்ளே போய் எதுவும் பேசக்கூடாதுன்னு அவங்களை சொல்லி அனுப்பியும் எப்படி வந்து தைரியமா பேசுறாங்க? அவங்க ஆதரவு இல்லாமலே நம்மால ஜெயிக்க முடியும்னு காட்டணும். அப்பவே வெளியில போகச் சொல்லியிருப்பேன். வீட்டுக்கு வந்தவங்களை அசிங்கப்படுத்தக்கூடாதுன்னு அமைதியா இருந்தேன்…’ என்று சொன்னாராம் ஜெயலலிதா.

அதிமுக-வினரை பொறுத்தவரை, 150 தொகுதி வரை எளிதில் ஜெயித்துவிடலாம் என உறுதியாக நம்பியிருக்கிறார்கள். தற்போது, அதில் 35 இடங்கள் சிக்கல் என்றாலும் 115 என்பது உறுதியாகிவிடும். அந்தச் சிக்கலில் இருக்கும் 35 தொகுதியை தேர்தல் அறிக்கையும் கடைசி நேரத்தில் கொடுக்கப்போகும் பணமும் காப்பாற்றிவிடும் என நம்புகிறார்கள். அதனால், தனி மெஜாரிட்டியில் ஆட்சியைப் பிடித்து ஜெயலலிதாவை மீண்டும் முதலமைச்சர் ஆக்கிவிடலாம் என்ற கனவில் இருக்கிறார்கள் அதிமுக-வினர்’’ என்று டைப்பிங் முடித்து செண்ட் கொடுத்தது.

ஃபேஸ்புக் சைன் இன் ஆகத் தயாராக இருந்தது. சைன் இன் ஆனதும், ஏற்கனவே அடித்துவைத்திருந்த ஸ்டேட்டஸை போஸ்ட் செய்தது. ‘‘திமுக தலைவர் கருணாநிதி முதல் சுற்றுப் பிரச்சாரத்தை முடித்து சென்னைக்கு வந்து ரெஸ்ட் எடுக்க ஆரம்பித்துவிட்டார். ஆனாலும், அவரது கவனம் முழுக்கவே திருவாரூர் தொகுதியில்தான் இருக்கிறது. என்ன செய்ய வேண்டும்? என்ன செய்கிறார்கள்? என்பதை தினமும் நிர்வாகிகளுக்கு போன் போட்டு விசாரிக்க ஆரம்பித்துவிட்டார். அதில் சில மாற்றங்களையும் சொல்லி, இப்படிச் செய்யுங்க… என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறார். பிரச்சாரம் முடித்துவிட்டு வந்த கருணாநிதியிடம் ஒரு சர்வே ரிப்போர்ட் வந்தது. அந்த ரிப்போர்ட்டில், 90 இடங்களில் திமுக உறுதியாக ஜெயிக்கலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. 60 இடங்களில் கடுமையாகப் போராடினால் ஜெயிக்கலாம் என்பது அந்த ரிப்போர்ட். ஆக, திமுக-வுக்கு சாதகமாக இருக்கும் 150 தொகுதிகளின் பட்டியலை ஒருமுறை படித்த கருணாநிதி, சிக்கலில் உள்ள 60 தொகுதி வேட்பாளர்களிடமும் பேசி, இன்னும் கூடுதல் கவனம் செலுத்தச் சொல்லியிருக்கிறார்.

இன்னொருபக்கம், ஸ்டாலின் தனியாக ஒரு டீமைப் போட்டு விசாரித்தபடி இருக்கிறார். அந்த டீம் ஜெயலலிதா பற்றிய தகவல்களைத்தான் அதிகமாக அப்டேட் செய்கிறதாம். பிரச்சாரத்துக்கு ஜெயலலிதா நீண்டதூரம் செல்வது அவரது உடல் நலத்தை ரொம்பவே பாதிக்கிறது. இதனால், ஜெயலலிதா அடிக்கடி டென்ஷன் ஆகிறார். பிரச்சார நேரத்தை அவர் மாற்றினாலும், மக்களை வெயில் நேரத்திலேயே லாரிகளில் அழைத்துவந்து கூட்டம் நடக்கும் இடத்தில் அடைத்து வைக்கிறார்கள். ஜெயலலிதா வெயில் குறைந்த பிறகுதான் வருகிறார். மக்களின் சிரமம்தான் தொடர்ந்தபடி இருக்கிறது. ‘வரும் கூட்டம் எல்லாம் ஓட்டுகளாக மாறும் என்று சொல்ல முடியாது’ என்று, அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். இதைக் கேட்டு ஸ்டாலின் ரொம்பவே மகிழ்ச்சியில் இருக்கிறார்.’’ என்பதுதான் அந்த ஸ்டேட்டஸ்.

அதற்கு லைக் போட்டு, ஷேர் செய்துகொண்டது வாட்ஸ் அப். தொடர்ந்து அடுத்த அப்டேட்டை தட்ட ஆரம்பித்தது, ‘‘அதிமுக-வில் போட்டியிட திரும்ப வாய்ப்பு வழங்கப்பட்டவர்களில் 10 பேர் மறுபடியும் ஜெயிப்பது சிக்கல் என்பது ஜெயலலிதா கையில் இருக்கும் அடுத்த ரிப்போர்ட். அந்த ரிப்போர்ட்டில் உள்ள அமைச்சர்களுக்கு கார்டனில் இருந்து தொடர்ந்து போன் போனபடியே இருக்கிறது. ‘கடந்த அஞ்சு வருசத்துல நீங்க செஞ்ச தவறுகளை எல்லாம் எதிர்க்கட்சிகள் பட்டியல் போட ஆரம்பிச்சுட்டாங்க. உங்களில் சிலபேரை தொகுதிக்குள் போனால் மக்களே விரட்டும் சம்பவங்களும் நடந்திருக்கு. எல்லாவற்றையும் அம்மா பார்த்துட்டுதான் இருக்காங்க. என்ன பண்ணுவீங்களோ.. ஏது பண்ணுவீங்களோ தெரியாது. நீங்க ஜெயிக்கலைனா நடக்குறதே வேற… அதுல ஒருத்தரை பப்ளிக் கேள்வி கேட்கும்போது, அமைதியா பதில் சொல்லாம ஓப்பன் மைக்ல திட்டி இருக்கீங்க… இதெல்லாம் அம்மாவுக்கு சுத்தமா பிடிக்கல. இதுமாதிரியான செய்திகள் வெளியே வரும்போது அது உங்களுக்கு மட்டும் பாதிப்பு இல்ல. ஒட்டுமொத்தமா கட்சிக்குத்தான் பாதிப்பை உண்டாக்கும் என்பதை மறந்துடாதீங்க…’ என்று எச்சரிக்கப்பட்டு இருக்கிறதாம். அரண்டு போயிருக்கிறார்கள் அமைச்சர்கள்.” என்று அடித்த அப்டேட்டுக்கு செண்ட் கொடுத்தது.

ட்விட்டர் வந்த கையுடன் ஒரு ட்விட் தட்டியது. ”தமிழகத்தின் பல பகுதிகளில் மின் வெட்டு தொடங்கிவிட்டது. அதுவும் தற்போது வெயில் வாட்டி வதைக்கும் நேரத்தில் மின்வெட்டு என்பது மக்களை ரொம்பவே பாதிப்புக்குள்ளாக்கி வருகிறது. இதுபற்றி சபரீசன் டீம் ஏரியா வாரியாக தகவல்களை விசாரிக்க ஆரம்பித்துள்ளது. ஸ்டாலின், அடுத்து கையில் எடுக்கப்போகும் சப்ஜெக்ட் மின்வெட்டாக இருக்கலாம். அத்துடன் மின்சாரத் துறையில் கடந்த 5 ஆண்டுகளில் நடந்த ஊழல்பற்றியும் அவரது பேச்சில் ஹைலைட்டாக இருக்கும் என்கிறார்கள்.” என்று சைன் அவுட் ஆனது.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *