எஸ்.வி.ராஜதுரை கடிதம் குறித்து ரவிக்குமார் கருத்து

public

தமிழ் அறிவுஜீவிகளில் முக்கிய ஆளுமையான எஸ்.வி.ராஜதுரையின் ஆவணப்படம் திரையிடப்படும் நிகழ்ச்சி அண்மையில், தமிழக போலீஸாரால் தடை செய்யப்பட்டது. இதையடுத்து, எஸ்.வி.ஆர்.-ன் ஆவணப்படம் திரையிடும் நிகழ்ச்சி நடைபெறவிருந்த தினத்தன்று தோழர்களுக்கு, ஒரு உரையை அவர் கடிதமாக எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தை வாசகர்களுக்காக நமது மின்னம்பலம் பதிவு செய்திருந்தது. (http://www.minnambalam.com/k/1465344067) அதில் “அண்மைய தேர்தல் முடிவுகள், ஒட்டுமொத்த தலித் மக்களுக்கு எதிராக தமிழகத்தின் மிகப் பெரும்பான்மை மக்கள் வாக்களித்திருக்கின்றனர் என்னும் உணர்வை எனக்கு ஏற்படுத்துகின்றன. தமிழக மக்களின் உளவியலில் ஆதிக்கம் செலுத்தும் சாதிய உணர்வை எவ்வாறு எதிர்த்துப் போராடுவது? இந்திய அளவில் பாஜக, காங்கிரஸ், தமிழக அளவில் திமுக, அஇஅதிமுக ஆகிய இரண்டு கட்சிகள் மட்டுமே இருந்தால்போதும் என்று கார்ப்பரேட், வணிக, ரியல் எஸ்டேட், சாராயச் சக்திகள் விரும்புகின்றன” என்று எஸ்.வி.ஆர். குறிப்பிட்டிருந்தார்.

எஸ்.வி.ஆரின் இந்தக்கூற்று பற்றி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார், தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: “ தேர்தல் முடிவு தலித் எதிர்ப்பின் அடையாளமா?

தோழர் எஸ்.வி.ஆரின் கருத்து சரிதானா?

தோழர் எஸ்.வி.ஆர். குறித்த ஆவணப்படத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்தது குறித்த செய்திகளை, கடந்த ஒரு வாரமாக கவனித்து வருகிறேன். மின்னம்பலம் மின் இதழில் வெளியாகியிருக்கும் கடிதத்தை இன்று படித்தேன். மிகச் சுருக்கமாக, செறிவாக அதில் தனது கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார். அதில் வெளிப்படுத்தப்பட்டிருக்கும் சில கருத்துகளோடு உடன்படுகிறேன் என்றாலும், கடந்த மே மாதத்தில் நடந்துமுடிந்த சட்டப்பேரவைத் தேர்தல் குறித்த அவரது பின்வரும் அவதானத்தோடு நான் முரண்படுகிறேன்:

அண்மைய தேர்தல் முடிவுகள், ஒட்டுமொத்த தலித் மக்களுக்கு எதிராக தமிழகத்தின் மிகப் பெரும்பான்மை மக்கள் வாக்களித்திருக்கின்றனர் என்னும் உணர்வை எனக்கு ஏற்படுத்துகின்றன” என்று எஸ்.வி.ஆர். குறிப்பிட்டிருக்கிறார். இது மிகைப்படுத்தப்பட்ட, அவநம்பிக்கையை வெளிப்படுத்தும் கூற்று.

அரசியல் கட்சிகளின் அணிசேர்க்கை என்ற தளத்தில் பார்த்தால், இந்தத் தேர்தலில்தான் தலித் கட்சியான விசிக எடுத்த முன்முயற்சியின் காரணமாக முன்னெப்போதும் இல்லாதளவுக்கு ஆறு கட்சிகளைக்கொண்ட மாற்று அணி உருவானது. கூட்டணி ஆட்சி என்ற கோட்பாடு முன்மொழியப்பட்டு கருத்தியல் தளத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

அந்த அணி வெற்றிபெற முடியாமல் போனதற்கு அதிமுக, திமுக ஆகிய பெரிய கட்சிகளால் வாக்காளர்களுக்குப் பணம் விநியோகிக்கப்பட்டதே காரணம் என்பதை யாவரும் அறிவர். தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலான தொகுதிகளில் தேர்தல் அதிகாரிகளால் பணம் கைப்பற்றப்பட்டு வழக்குகள் பதியப்பட்டிருப்பதே அதற்கு ஆதாரம்.

இதற்கு மாறாக, தலித் வெறுப்பை மூலதனமாக்க முயற்சித்த கட்சி தனிமைப்படுத்தப்பட்டதோடு, விளம்பரத்துக்கு மட்டும் சுமார் இருநூறு கோடி செலவுசெய்தும் இரண்டு ஆண்டுகள் பரப்புரை மேற்கொண்டும் அக்கட்சி உருவான காலத்தில் பெற்ற வாக்குகளைத்தான் பெற முடிந்திருக்கிறது.

இந்தத் தேர்தல் சாதியவாத, மதவாத சக்திகள் தனிமைப்படுத்தப்பட்டதையும் தமிழ்நாட்டின் பெரும்பாலான அரசியல் கட்சிகளும், வாக்காளர்களும் தலித் வெறுப்பு அரசியலை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதையும்தான் நிரூபித்துள்ளது.

தோழர் எஸ்.வி.ஆரின் கருத்தில் தொனிக்கும் தலித் ஆதரவு நிலைப்பாட்டை நான் வரவேற்கிறேன். ஆனால், தேர்தல் முடிவு தொடர்பான அவரது அவதானிப்பு ஆதாரங்களோ, அடிப்படையோ இல்லாத ஒன்று என்பதைப் பணிவோடு சுட்டிக்காட்டுகிறேன்.” என்று பதிவிட்டுள்ளார்.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *