இளையராஜா v/s எஸ்.பி.பி. : யார் சரி? – வெங்கடேஷ் சக்ரவர்த்தி

public

இளையராஜா எஸ்.பி.பி. பிரச்னையில் இருக்கும் பொருளாதார நுணுக்கங்களை ஆய்வுசெய்யாமல் நமக்குப் பிடித்தவர் பக்கம் சாய்வதில் எந்த நியாயமுமில்லை.

ராஜா அவர்கள் தமிழ் சினிமாவில் அடியெடுத்துவைக்கும் முன், ஒரு திரைப்படத்தின் இசைக்கான காபிரைட் எப்பொழுதும் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்தது என்றாலும் அதன் முழுப்பயன் அந்த நிறுவனத்துக்கு சென்றடையவில்லை. ஏனென்றால் பாடல்களின் மூலம் லாபம் சம்பாத்திக்க அன்று இரண்டே வழிகள் மட்டுமே இருந்தன. ஒன்று இசைத்தட்டுகளை உருவாக்க ஒரே ஒரு நிறுவனம், இஸ் மாஸ்டர்ஸ் வாய்ஸ் (எச்.எம்.வி) மட்டுமே இருந்தது. அது சில சமயங்களில், எச்.எம்.வி. பிராண்டிலும் மற்ற சமயங்களில் கொலம்பியா என்ற பிராண்டிலும் இசைத்தட்டுகளை வெளியிட்டது. லாபத்திலிருந்து ஆண்டுக்கு ஒரு முறை ராயல்டியை, தயாரிப்பாளருக்கு 15%, இசையமைப்பாளருக்கு 5%, பாடல் ஆசிரியருக்கு 3%, மற்றும் பாடகர்களுக்கு தலா இரண்டு அல்லது ஒரு சதவிகிதம் என்ற அடிப்படையில் வழங்கி வந்தது. இந்த விகிதமுறை படத்தின் வரவேற்புக்கு ஏற்றவாறு மாறியதுமுண்டு.

மற்றொரு வழி, அரசு வானொலி அலைவரிசைகளும், சிலோன், மலேசியா போன்ற நாடுகளில் இருந்த வானொலி அலைவரிசைகளும் பாடலின் ஒரு ஒலிப்பரப்புக்கு ஐந்து அல்லது பத்து ரூபாய் என்ற கணக்கில் மேற்கூறிய விகித முறையைவிட மிகவும் குறைவான விகிதமுறையில் பகிர்ந்து அந்தத் தொகையை ஆண்டுக்கு ஒருமுறை வழங்கின. இதில் சிலோன் மற்றும் மலேசியாவில் இருந்து வந்த பணம் அனைத்தும் அது அந்தப் பாடல் இருக்கும் படத்தை அந்த நாடுகளில் விநியோகித்தவர்களின் கைகளுக்கே சென்றது.

எழுபதுகளின் தொடக்கத்தில் எச்.எம்.வி. என்ற நிறுவனத்துக்கு எதிராக பாலிடார் (?) என்ற நிறுவனம் வந்தது. இந்த நிறுவனம், இசைத்தட்டு உரிமைகளைப் பெற ஒரு படம் தயாரிப்பில் இருக்கும்போதே தயாரிப்பாளருக்கு முன்பணம் வழங்கியது மட்டுமல்லாமல், விற்பனைக்கு ஏற்றவாறு எல்லோருக்கும் ராயல்டி அடிப்படையிலும் பணம் வழங்கியது. மேலும் அதிக வியாபரத்தை தொட்ட பாடல்கள் அடங்கிய படத்தின் தயாரிப்பாளருக்கும் இசையமைப்பாளருக்கும் கோல்டன் டிஸ்க் அல்லது பிளாட்டினம் டிஸ்க் போன்றவற்றை விழா நடத்தி பரிசளித்தது.

இப்படி இசையின் வழியாக வரும் வருமானம் ஓரளவுக்கு கூடிக்கொண்டிருந்த சமயத்தில், புதிய தொழில்நுட்பம் காஸெட் வடிவத்தில் உள்ளே நுழைந்தது. உடனே கடகடவென்று பல கம்பெனிகள் முளைத்தன. இந்த காலக்கட்டத்துக்கு ஒருசில ஆண்டுகளுக்கு முன் இளையராஜா அறிமுகமாகி படிப்படியாக வெற்றிவாகை சூடி முன்னேறிக்கொண்டிருந்ததால் அவருடைய சம்பளமும், அதிகாரமும் அதற்கு ஏற்றவாறு உயரத் தொடங்கின. விரைவில் அவரும் எக்கோ என்ற காஸெட் நிறுவனத்தை உருவாக்கி, ஒரு படத்தின் இசையமைப்புக்கு வாங்கும் சம்பளத்தைத் தவிர அதன் மொத்த உரிமையையும் எழுதி வாங்கத் தொடங்கினார். இதனால் பல தயாரிப்பாளர்களுக்கும், மற்றவர்களுக்கும் வருத்தமிருந்தாலும் மொத்த உரிமையும் ராஜா அவர்களுக்கே போய்ச் சேர்ந்தது.

நடிகர்களும், இயக்குநர்களும் யாராக இருந்தாலும் ராஜா அவர்களின் இசை இருந்தாலே ஒரு படத்தை விநியோகம் செய்யமுடியும் என்ற நிலையும் உருவானது. ராஜ்கிரண் அவர்கள் தயாரிப்பிலும், கஸ்தூரி ராஜா அவர்களின் இயக்கத்திலும் உருவான – என் ராசாவின் மனசிலே (1991) – என்ற படம் வரை அந்தமாதிரியான பல படங்களின் விளம்பர போஸ்டர்களில் ராஜா அவர்களின் பிம்பம்தான் பெரிதாக இருக்கும். சிலசமயங்களில் அவர் பிம்பம் மட்டுமே இருக்கும்.

இந்த மாதிரியான ஒப்பந்தத்தை ராஜாவுடன் செய்துக்கொள்ள விரும்பாத தயாரிப்பாளர்கள் தேவா, சந்திரபோஸ் போன்றவர்களின் இசையை வைத்து தங்கள் படங்களை உருவாக்கினார்கள். இவர்களில் தேவா நம்பர் 2ஆவது இடத்தை எட்டிப் பிடித்தார்.

ஆனால் இதே காலக்கட்டத்தில் காஸெட்டுகளிலும் பைரசி நிகழ்ந்தன. எடுத்துக்காட்டாக, ஊரக பேருந்து நிலையங்களில் பத்து ரூபாய்க்கு ஒரு அரை மணி நேரப் பாடல்களின் தொகுப்பை வாங்க முடிந்தது. இருந்தாலும் புதிய காஸெட்டுகளின் விற்பனையை பெருமளவுக்கு இந்த பைரசி பாதிக்கவில்லை.

90களில் கம்பாக்ட் டிஸ்க் என்ற சி.டி.யுடன் ஒரு முக்கியமான தொழில்நுட்ப மாற்றம் வந்தது. இதன் விலை இரு நூறு அல்லது முன்னூறு ரூபாய் என்பது, காலாவதியான இசைத்தட்டைவிட அதிகமாக இருந்தாலும் அதற்கு வரவேற்பு அதிகரிக்க, ஒரு படத்தின் இசையின்வழியாக வரும் லாபம் முன்பைவிட மிகவும் அதிகமானது. ராஜா அவர்கள் இசையமைத்த படங்களைப் பொருத்தவரை அந்த லாபமும் அவரிடமே போய்ச் சேர்ந்தது.

இந்தக் கட்டத்தில் 1992இல் ரகுமானுக்கு கிடைத்த மாபெரும் வரவேற்பு எல்லாவற்றையும் புரட்டிப்போட்டது. மறுபடியும் மொத்த உரிமையை தங்களின் கீழ் கொண்டுவர தயாரிப்பாளர்கள் முரட்டுத்தனமாக இளையராஜாவை ஒதுக்கினார்கள். மேலும் ஒரு படம் தமிழிலும், தெலுங்கிலும் ரகுமானின் இசையை உள்ளடக்கி வந்தால் அதன் இசைக்கு மட்டுமே கோடிக்கணக்கில் பணம் வரும் என்ற நிலையும் ஏற்பட்டது. உதாரணத்துக்கு, ரூ.ஒன்பதரைக் கோடி பட்ஜெட்டில் உருவான காதலன் (1994). இசையின்வழியாக மட்டுமே ரூ.மூன்றரைக் கோடி லாபம் திரட்டியது.

டிஜிட்டல் காலத்துடன், எஃப்.எம், இணையம் போன்றவை வந்தபிறகு (இன்று எல்லோருடய உரிமைகளும் முக்கியம் என்று ரகுமான் அவர்கள் குரல் கொடுத்தாலும்) ஒரு படத்தின் இசைக்கு ஒரு பைசாகூட வருமானம் வரும் நிலைமை இல்லை என்பதே நிஜம்.

தொலைக்காட்சி சானல்களிலும், எஃப்.எம். வானொலி அலைவரிசைகளின் மூலம் வரக்கூடியதைக்கூட, படத்துக்கான விளம்பரத்துக்கு செலவாகும் தொகையைக் குறைக்க பாடல்களுக்கு எந்த ஒரு ஒப்பந்தத்தையும் செய்துகொள்ளாமல் அப்படியே அவற்றை தாரைவார்த்துக் கொடுக்கும் வழக்கமே இன்றைய நடைமுறையாக இருக்கிறது.

ஒரு படத்தின் ஆடியோ வெளியீடு என்பதே எல்லா சானல்களையும் வரவழைத்து, அவர்களிடம் அந்த நிகழ்ச்சியின் பதிவுக்கான உரிமையையும் தந்து, அதனுடன் மேக்கிங் ஆஃப் புஃட்டேஜ்களையும் தந்து பாடல்களுக்கான உரிமையையும் கொடுப்பது அந்தப் படத்தின் விளம்பரத்துக்கான உத்தியாக இன்று செயல்முறையில் இருக்கிறது.

இதனால் ஏற்பட்ட ஒரு நல்ல விளைவு, எப்படியும் இசையின் மூலம் வருமானமில்லை என்பதாலும் அது ஒழுங்காக அமைந்தால் மட்டுமே போதும் என்ற புரிதலும் அதனுடன் வந்துவிட்டதால் இன்று, பல புதிய இசையமைப்பாளர்களுக்கு வாய்ப்புகள் முன்பைவிட அதிகரித்துவிட்டன என்பதே நிஜம்.

அதேசமயம், வெளிநாடுகளில் ஏற்பாடு செய்யப்படும் பாடல் இசை நிகழ்ச்சிகளுக்கு குறிப்பாக ஐரோப்பா, அமெரிக்கா போன்ற இடங்களையும் உள்ளடக்கினால் அதற்கான சந்தை இன்று பெருகி உள்ளது என்பதும் நிஜம்.

இந்தப் பின்னணியில், மற்ற எல்லா தரப்புகளிலும் ஒரு படத்தின் இசைக்கு வருமானம் குன்றிவிட்ட சூழலில், ராஜா அவர்கள் எஸ்.பி.பி.க்கு அனுப்பிய நோட்டீஸில் நியாயம் இருக்கிறது. ஆனால் அந்த நிகழ்ச்சிகளின்மூலம் வரும் ஒட்டுமொத்த லாபத்தையும் அவருக்கே தர வேண்டும் என்று கேட்டால் அதில் எந்த நியாயமுமில்லை. அவர் அப்படிக் கேட்கவில்லை என்பதே எனது புரிதல். ஆகையால் இந்த சச்சரவை இனியும் ஊதிப்பெருக்காமல் இருதரப்பினரும் யார் கையும் கடிபடாத அளவுக்கு ஒரு ஒப்பந்தத்தை செய்துகொள்வது நல்லது.

*

கட்டுரையாளர் குறிப்பு:

வெங்கடேஷ் சக்ரவர்த்தி, இயக்குநர், எல்.வி.பிரசாத் பிலிம் மற்றும் டி.வி. அகெதமி, சென்னை.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *