Lதம்பிதுரை எம்பி ஆனது எப்படி?

Published On:

| By Balaji

அதிமுகவின் ராஜ்யசபா வேட்பாளர்கள் பட்டியல் மார்ச் 9 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. முன்னாள் நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி ஆகியோருக்கும், மூன்றாவது ராஜ்யசபா உறுப்பினர் பதவியை தமாகா தலைவர் ஜி.கே.வாசனுக்கும் அளித்தது அதிமுக.

தமாகா தலைவர் வாசனுக்கு ராஜ்யசபா சீட் அளிக்கப்பட்டதுதான் மீடியாக்களால் தீவிரமாக விவாதிக்கப்பட்டது. ஆனால் அதிமுக கட்சிக்குள், ‘கே.பி. முனுசாமியாவது அக்மார்க் ஓ.பன்னீர் ஆதரவாளர். அவருக்கு சீட் கொடுத்ததில் ஓர் அர்த்தமிருக்கிறது. ஆனால் தம்பிதுரையோ ஓபிஎஸின் ஆளும் கிடையாது, ஈபிஎஸ்ஸின் ஆளும் கிடையாது. அவருக்கு எப்படி ராஜ்யசபா சீட் கிடைத்தது?” என்று பரபரப்பாக விவாதித்துக் கொள்கிறார்கள். மேலும், “தம்பிதுரை கரூரை மையமாக வைத்து தேர்தல் அரசியல் செய்தாலும் அவரது பூர்வீகம் கிருஷ்ணகிரி. அதேபோல கே.பி. முனுசாமிக்கும் கிருஷ்ணகிரி மாவட்டம். இப்படி ஒரே மாவட்டத்தைச் சேர்ந்த இருவருக்கு எம்பி பதவியா?” என்ற கேள்வியும் அதிமுக நிர்வாகிகளால் கேட்கப்படுகிறது.

இதுபற்றி அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம்.

“தம்பிதுரை முதல்வர் எடப்பாடிக்கும் ஆதரவாளர் இல்லை, துணை முதல்வர் ஓ.பன்னீருக்கும் ஆதரவாளர் இல்லை. கொஞ்சம் ஆழமாக பின்னோக்கிப் பார்த்தால் அவர் சசிகலாவின் ஆதரவாளர். ஓ.பன்னீர் முதல்வராக இருந்தபோதே சசிகலாவை முதல்வராக்க வேண்டும் என்று அமைச்சர் உதயகுமார் கூறி முதல் சலசலப்பை ஏற்படுத்தினார். அதையடுத்து அப்போது நாடாளுமன்ற துணை சபாநாயகராக இருந்த தம்பிதுரை தன்னுடைய லெட்டர் பேடிலேயே சசிகலாவை முதல்வர் பதவியேற்குமாறு அழைத்து கடிதம் எழுதினார். இது அதிமுகவில் மட்டுமல்ல பாஜக தலைமையிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியது.

அதன் பின் சசிகலா சிறைக்கு சென்றபின்னும் தம்பிதுரை அவ்வப்போது அவரை சென்று சந்தித்து வந்தார். குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு ஆதரவு கேட்டு சசிகலாவைச் சந்தித்ததாகவும் அப்போது தம்பிதுரை கூறினார். அதேபோல தனது நாடாளுமன்ற உரைகளில் மத்திய பாஜக அரசையும் கடுமையாக விமர்சித்தார்.

இந்நிலையில் ராஜ்யசபா பட்டியலில் தம்பிதுரையின் பெயர் கடைசி வரைக்கும் இல்லை. இதைத் தெரிந்துகொண்ட தம்பிதுரை சில தினங்களுக்கு முன் முதல்வர் எடப்பாடியை சந்தித்தார். தன்னுடைய சீனியாரிட்டி, கட்சியில் தான் வகித்த பதவிகள், ஜெயலலிதாவுக்கு தன் மீதிருந்த மரியாதை ஆகியவற்றை எல்லாம் குறிப்பிட்டு, ‘யார் பேச்சைக் கேட்டுகிட்டு என்னைப் புறக்கணிக்கிறீங்க? இன்னிக்கு உங்க கையில இருக்கிற அதிகாரம் நாளைக்கு மாறாதா? அப்ப நிலைமை வேறு மாதிரிப் போகும். சின்னம்மா வெளியே வந்தவுடன் எல்லாமே மாறும், அப்ப நான் பாத்துக்குறேன்’ என்று எடப்பாடியை கடுமையாக எச்சரித்திருக்கிறார். இதனால் அதிர்ந்து போன எடப்பாடி அதன் பிறகே தம்பிதுரையை ராஜ்யசபா பட்டியலில் சேர்த்திருக்கிறார். ஆக எடப்பாடி பழனிசாமிக்கு நேருக்கு நேர் எச்சரிக்கை விடுத்துதான், எம்பி பதவியைப் பெற்றிருக்கிறார் தம்பிதுரை” என்கிறார்கள்.

**-வேந்தன்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share