�சிறப்புக் கட்டுரை: மாநில அரசியலும் தேசிய அரசியலும் – இந்தியாவின் எதிர்காலம்!

politics

ராஜன் குறை

சமீபத்தில் நடந்து முடிந்த டெல்லி தேர்தல் ஒரு வித்தியாசமான ஆனால் முக்கியமான அரசியல் புதிரை உருவாக்கியுள்ளது. அதை முதலில் ஆழமாகப் புரிந்துகொண்டால்தான் அது இந்தியாவின் எதிர்காலத்தைக் குறித்த எந்தவிதமான அறிகுறிகளை வழங்குகிறது என்று பேசமுடியும்.

எட்டு மாதங்களுக்கு முன்னால், நன்றாகக் கவனியுங்கள், வெறும் எட்டு மாதங்களுக்கு முன்னால் டெல்லி பாரதிய ஜனதா கட்சியை அதன் ஏழு நாடாளுமன்றத் தொகுதிகளிலும் மகத்தான வெற்றி பெறச் செய்தது. எல்லா தொகுதிகளிலும் ஐம்பது சதவிகிதத்துக்கும் அதிகமான வாக்குகளை பாஜக பெற்றது. ஒரு வேட்பாளர் ஐம்பது சதவிகித வாக்குகளுக்கும் அதிகமாகப் பெற்றால் அதன் பொருள் பிற வேட்பாளர்கள் அனைவரும் சேர்ந்து பெற்ற வாக்குகளைவிட அதிகம் என்பதுதான். அப்படிப்பட்ட வெற்றியை பாஜக வேட்பாளர்கள் அனைத்து தொகுதிகளிலும் பெற்றனர். ஆம் ஆத்மி கட்சி மூன்றாவது இடத்தையே ஆறு தொகுதிகளில் பெற்றது. காங்கிரஸ் ஆம் ஆத்மியைவிட அதிக வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்திலிருந்தது.

எட்டு மாதங்களுக்குப் பிறகு ஆம் ஆத்மி கட்சி கடந்த வாரம் மாநில சட்டமன்றத் தேர்தலில் ஐம்பது சதவிகிதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளது. அதாவது அதன் வேட்பாளர்கள் பலர் பிற வேட்பாளர்கள் அனைவரையும் சேர்த்தாலும் வரும் வாக்குகளைவிட அதிக வாக்குகள் பெற்றுள்ளார்கள் என்பது பொருள். ஆனால் பாஜக 40 சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சிதான் வெறும் 4 சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளது. அதாவது பாஜக எதிர்ப்பு ஓட்டுக்கள் அனைத்தும் ஆம் ஆத்மி கட்சிக்குக் கிடைத்துள்ளது. மத்தியில் மோடி, மாநிலத்தில் கேஜ்ரிவால் என்று மக்கள் முடிவு செய்துள்ளார்கள்.

இதன் பொருள் கேஜ்ரிவால் பாஜக B டீம் என்பதோ, அவர் மிதமான இந்துத்துவா என்பதோ அல்ல. பலரும் அப்படித்தான் எழுதிவருகிறார்கள். மார்க்ஸியம் பயின்றவர்களும்கூட தனிநபர்களை மையப்படுத்தியே யோசிக்கிறார்கள். கேஜ்ரிவால் கோயிலுக்குப் போனார், அனுமார் சாலிஸா சொன்னார் என்பதெல்லாம் காரணம் என்று நினைக்கிறார்கள். இவர்கள் ஷாஹீன் பாக் உள்ள ஓக்லா தொகுதியில் ஆம் ஆத்மி சார்பில் முஸ்லிம் வேட்பாளர் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளதைக் கவனிக்க வேண்டும். பாரதிய ஜனதாவின் ஆதரவு தளம் பெரிதாகக் குறைந்துவிடவில்லை. ஆனால், அதற்கான எதிர்ப்பு ஒருமுகப்பட்டு ஆம் ஆத்மி ஆதரவாக மாறியுள்ளது. இது தனிநபர்கள் சார்ந்ததல்ல. மாநில அரசியலின் சுயேச்சைத் தன்மை சார்ந்தது. இதை மேலும் புரிந்துகொள்ளப் பிற மாநிலத் தேர்தல்களையும் கவனிக்க வேண்டும்.

**மாநில தேர்தல்களில் பாஜக**

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னும் பின்னும் பல்வேறு மாநிலத் தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சி தோல்வி அடைந்தது. கர்நாடகாவில் மிக மோசமான, அப்பட்டமான குதிரை பேரத்தின் மூலம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் 2017 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி ஜனதா காங்கிரஸுடன் கூட்டணி வைக்க, பகுஜன் சமாஜ்வாதி தனியாகப் போட்டியிட மும்முனை போட்டியில் வென்றது பாஜக. நாடாளுமன்றத் தேர்தலில் சமாஜ்வாதியும், பகுஜன் சமாஜ்வாதியும் இணைந்தாலும் அது நாடாளுமன்றத் தேர்தல் என்பதால் பாஜக வென்றது. சமீபத்தில் ஹரியானாவிலும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக நூலிழையில் வென்றது. ஊழல் வழக்கில் சிறையில் இருக்கும் ஓம் பிரகாஷ் செளதாலாவின் பேரன் துஷ்யந்த் தொடங்கிய புதிய மாநிலக் கட்சியின் ஆதரவில் ஆட்சி அமைத்துள்ளது. மகாராஷ்டிராவில் சிவசேனையினுடனான முரண்களை எதிர்கொள்ள முடியாததால், முற்றிலும் எதிர்பாராத விதமாக மாநிலக் கட்சிகளான சிவசேனையும், ஷரத் பவாரின் தேசியவாத காங்கிரஸும் இணைந்து ஆட்சி அமைப்பதைத் தடுக்க முடியாமல் மூக்குடைபட்டது. இந்து அடையாளத்தைவிட மாநில அடையாளத்தை முக்கியமென சிவசேனை உணர்ந்துவிட்டது. அதனால் சிவசேனையிலிருந்து பிரிந்த நவநிர்மாண் கட்சியை இந்துத்துவ அரசியலுக்குத் தயார் செய்கிறது பாரதிய ஜனதா கட்சி. உள்ளபடி சொன்னால் குஜராத் ஒரு மாநிலத்தைத் தவிர வேறு எங்குமே பாரதிய ஜனதா மிக உறுதியான ஆதரவு தளத்தைப் பெற்றிருப்பதாகக் கூறமுடியவில்லை. ஆனால் நாடாளுமன்றத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை பெற்றது.

இந்த முரண்பாட்டை ஆழமாகப் பரிசீலிப்பது இந்திய அரசியலின் எதிர்காலத்தைப் புரிந்துகொள்ள இன்றியமையாதது. பாரதிய ஜனதா கட்ட விரும்பும் இந்து மதவாத அடையாளம், அது சார்ந்த இந்திய அடையாளம் இரண்டுமே மாநில வேர்களைக் கொண்டவை. உதாரணமாக கர்நாடகாவில் லிங்காயத்துகள் என்ற நிலவுடைமை வகுப்பினரே பாரதிய ஜனதாவின் ஆதரவு தளமாக உள்ளனர். ஆனால் லிங்காயத்துக்கள் இந்து மதமே கிடையாது என்று பலர் வாதிடும் அளவு தனித்துவமான அடையாளம் கொண்டவர்கள். பசவர் என்ற சீர்திருத்தப் பார்வைகொண்ட மகானால் உருவாக்கப்பட்ட வீரசைவ இயக்கத்தின் விளைவுதான் லிங்காயத்து வகுப்பு. இது போல ஒவ்வொரு மாநிலத்திலும் வேறு வேறு சமூக, சாதி பின்புலங்களும் அவர்களுடைய அரசியல் நலன்களும், அதிகாரப் போட்டியுமே அரசியலைத் தீர்மானிக்கின்றன. இவற்றுக்கான பொது அடையாளமாக மாநில, மொழி அடையாளம் விளங்குகிறது. இந்த சாதி, சமூக முரண்பாடுகளைக் கடந்து இந்து, முஸ்லிம் முரண்பாட்டை அரசியலின் மைய விசையாக மாற்றுவது மாநிலங்கள் அளவில் சாத்தியமற்று இருக்கிறது. குஜராத் பரிசோதனை என்ற பெயரில் குஜராத்தில் சங்கிகள் இதைச் செய்தார்கள். அதையும் “குஜராத்தின் பெருமிதம்” என்பதையே அடிப்படையாகக் கொண்டு அதன் மூலம் கோத்ரா நிகழ்வை ஒட்டிய கலவரங்கள் மூலம் அதைச் செய்தார்கள். அதன் பின்னணி விரிவாக ஆராயப்பட வேண்டும். ஆனால் அந்தப் பரிசோதனையில் கிடைத்த அனுபவத்தை அவர்களால் பிற மாநிலங்களில் வெற்றிகரமாகப் பிரதியெடுக்க முடியவில்லை.

**நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக**

மாநிலங்களின் அரசியலிலிருந்து மாறுபட்டு, மத்திய அரசு என்று வரும்போது பாகிஸ்தான் என்ற எதிரியைக் காட்டி, இஸ்லாமிய தீவிரவாதம் என்ற பிரச்சினையை முன்வைத்து இஸ்லாமியர்களுக்கு எதிரான ஓர் இந்துத்துவ அரசியலை அவர்களால் பேச முடிகிறது. கடந்த ஆண்டு நிகழ்ந்த நாடாளுமன்றத் தேர்தலில் புல்வாமா தீவிரவாதத் தாக்குதலும், பாலகோட் என்ற இடத்தின் மீது இந்தியா நிகழ்த்தியதாகச் சொல்லப்பட்ட தாக்குதலும் பாஜகவுக்குப் பெரும் பக்கபலமாக இருந்தது. இவை இரண்டு பற்றியுமே பலவிதமான ஐயங்களும், கேள்விகளும் இருந்தாலும் பாமர மக்களிடையே அது போன்ற நுட்பமான விவரங்கள் சென்று சேர்வதில்லை. அமாவாசை இருட்டில் விமானங்கள் சென்றால் ரேடார்களால் விமானங்களைக் காண முடியாது என்று ஒரு பிரதமர் சொல்வதன் அபத்தம் பாமர மக்களுக்குப் புரியாததில் வியப்பில்லை. இந்தி மொழி ஊடகங்கள் பெருமளவு ஆதரவாக இருக்கும் நிலையில் பாஜகவால் பாகிஸ்தான், இஸ்லாம் இரண்டையும் ஒன்றாக்கி, தனது மதவாதப் பிளவுபடுத்தும் அரசியலைச் செய்துவிட முடிகிறது. ஆனால் மாநில அரசியல் என்று வந்தால் இந்த பாகிஸ்தான் பூச்சாண்டி எடுபடுவதில்லை. அந்தந்த மாநிலங்களில் உள்ள சமூக, சாதி முரண்களே முக்கியத்துவம் பெறுகின்றன.

குறிப்பாக மாநில அடையாளமும், தனித்துவமிக்க மாநில அளவிலான அரசியல் அணிதிரட்டலும் நிகழ்ந்த தமிழகம், கேரளம், பஞ்சாப், ஆந்திரம், தெலுங்கானா போன்ற மாநிலங்களில் பாஜக ஒரு போதும் காலூன்ற இயலாது என்ற நிலையே இருக்கிறது. அதிகபட்சம் போனால் அகாலி தளம், சிவசேனா, நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் போன்ற மாநிலக் கூட்டாளிகளை வேண்டுமானால் தேடலாம். மேற்கு வங்கத்தில் மமதா எதிர்ப்பு வேகத்தில் சிபிஐ (எம்) ஆதரவாளர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு ஓட்டளித்தாலும், மாநிலத் தேர்தலில் அது நடக்காது. இந்த நிலையில் பாஜகவும், காங்கிரஸும் தேசிய கட்சிகள், அவை தேசிய அளவில் மோதுகின்றன என்பதன் பொருள் உண்மையில் என்னவென்பதை பரிசீலிக்க வேண்டும்.

**இந்தியாவில் தேசிய அரசியல் என்று ஒன்று உள்ளதா? **

இந்தியாவின் தேசிய அரசியல் என்பது காலனீய எதிர்ப்பு அரசியல். காங்கிரஸ் கட்சி காந்தி, நேரு தலைமையில் அதை முன்னெடுத்தது. அதனால் காங்கிரஸ் கட்சி நாட்டின் பல்வேறு முரண்பட்ட தொகுதிகளையும் தனக்குள் உள்ளடக்கி மக்களாட்சி அரசியலை முதல் பதினைந்து ஆண்டுகளில் வெற்றிகரமாக உருவாக்கியது. கேரளாவில் கம்யூனிஸ்டுகளும், தமிழகத்தில் திமுகவும் காங்கிரஸுக்கு வெளியே மக்களை அணிதிரட்டி மாநில அரசியலுக்கு வழி வகுத்தன. கம்யூனிஸ்டு கட்சி தன்னை மாநிலக் கட்சி என்று சொல்லிக் கொள்ளாவிட்டாலும் மேற்கு வங்க கட்சியும், கேரளக் கட்சியும் வேறுபட்ட தன்மை கொண்டவை என்பது பலரும் அறிந்ததுதான்.

காலனீய எதிர்ப்பின் தாக்கம் குறைந்து, இந்தியாவினுள் மக்களாட்சி அரசியல் வேரூன்றும்போது காங்கிரஸ் மாநில அடையாளங்களைக் கையாள்வதில் பெரும் சவாலைச் சந்தித்தது. இந்திரா காந்தி சோஷலிஸம், ஏழ்மை ஒழிப்பு என்பது போன்ற புதிய அரசியலைக் கைக்கொண்டதன் மூலம் ஒரு தேசிய அரசியலைத் தக்கவைத்தார். ஆனாலும் நாளாவட்டத்தில் மாநில சக்திகளின் தலையெடுப்பு நிகழத்தான் செய்தது. குறிப்பாக பிற்படுத்தப்பட்டோரின் அரசியல் என்பது திட்டவட்டமாக மாநில வேர்களைக் கொண்டதாகவே இருந்தது. நெருக்கடி நிலையை ஒட்டி காங்கிரஸுக்கு மாற்றாக உருவான ஜனதா கட்சி, மாநிலத்துக்கு ஒரு ஜனதாவாக மாறியது. பிகாரில் ராஷ்டிரீய ஜனதா, ஐக்கிய ஜனதா என்று இரண்டாக உள்ளது.

இந்த நிலையில்தான் இந்து மத அடையாள வாதத்தின் மூலம், இஸ்லாமியர்களுக்கு எதிரான பாசிசத்தை வளர்ப்பதன் மூலம் ஒரு புதிய தேசிய அரசியலை, பிற்போக்கு அரசியலை உருவாக்கலாம் என்று பாஜக முயல்கிறது. காங்கிரஸ் மாநில அரசியலின் எழுச்சியை சரிவர கையாளாததால் பலவீனப்பட்டது. அதைப் பயன்படுத்திக்கொண்டும், சர்வதேச அளவில் அமெரிக்காவின் செயல்பாடுகளால் இஸ்லாமிய தீவிரவாதம் 21ஆம் நூற்றாண்டில் பிரச்சினையாக மாறியதைக்கொண்டும் பாஜக மத்தியில் ஆட்சியைப் பிடித்துள்ளது. ஆனால் இரண்டு பலவீனங்களை அதனால் சரி செய்ய இயலாது. ஒன்று அளப்பரிய பன்மை நிறைந்த இந்து மத பிரிவுகளைக் கொண்டு இந்து அடையாள வாதத்தைக் கட்டுவது இயலாது. இரண்டு, மாநிலங்களில் வேர்கொண்டுவிட்ட அரசியலை, தேசிய அரசியலாக மாற்ற முடியாது.

இந்தியா சந்திக்கும் முக்கியமான முரண்பாடு இன்றைக்கு என்னவென்றால் அளப்பரிய அதிகாரங்களை தன்னிடம் குவித்துக்கொண்டுள்ள மத்திய அரசும், அதற்கு முற்றிலும் முரண்பட்டு மாநிலங்களில் வேர்கொண்டுவிட்ட அரசியலும்தான்.

இதற்கான நியாயமான விடை தமிழகம் சொன்னது: மாநில சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்பதே!

தவறான விடை: இந்துத்துவ பாசிசம்; அது முடியாதபோது சர்வாதிகாரம், ஒடுக்குமுறை.

**கட்டுரையாளர் குறிப்பு**

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *