ஹிஜாப்- கர்நாடகாவில் பந்த்: வெறிசோடிய தெருக்கள்!

politics

கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து இன்று(மார்ச் 17) முஸ்லிம் அமைப்புகள் முழு கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

பள்ளிகளுக்கு ஹிஜாப் அணிந்து செல்ல விதிக்கப்பட்ட தடை நியாயமான கட்டுப்பாடு என்பதால், அந்த தடை உத்தரவு செல்லும் என்று கர்நாடக உயர் நீதிமன்றம் கடந்த மார்ச் 15 ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து முஸ்லிம் மாணவிகள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். மேலும் பல மாணவிகள் பள்ளிகளுக்கு செல்லாமல் உள்ளனர்.

ஹிஜாப் தீர்ப்பை ரத்து செய்யக் கோரி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், கர்நாடகாவில் இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் இன்று முழு கடை அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அதன்படி, ஹிஜாப் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று(மார்ச் 17) காலை முதல் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு பந்த் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
பெங்களூரில் சிவாஜி நகரில் கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டுள்ளதால் அப்பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது.

அதுபோன்று மங்களூருவில் மீன்பிடித் துறைமுகம், சென்ட்ரல் மார்க்கெட், ஸ்டேட் வங்கி, ஏபிஎம்சி மார்க்கெட் மற்றும் பிற வணிகப் பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதி மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. வழக்கமாக இந்த பகுதியில் காலை நேரத்தில் மீன் மற்றும் காய்கறிகள் வாங்குவதற்கு மக்கள் கூட்டம் அலைமோதும். மங்களூருவில் மீன் மற்றும் காய்கறி வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களில் பெரும்பான்மையானவர்கள் முஸ்லிம்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தட்சிண கன்னடாவின் பிற பகுதிகளில் பெரும்பாலான கோழி, ஆட்டிறைச்சி மற்றும் மாட்டிறைச்சி கடைகளும் மூடப்பட்டன. முழு கடை அடைப்பு காரணமாக மக்களும் தங்களுக்கு தேவையான காய்கறி, மீன்களை வாங்க முடியாமல் தவிக்கின்றனர்.

சாந்தி நகரில் பழக்கடை வைத்துள்ள ஒருவர் கூறுகையில், “ காய்கறிகள் மற்றும் பழங்கள் மக்களுக்கு தேவைப்படும் மற்றும் சீக்கிரம் கெட்டு போகும் என்பதால் கடையை திறந்து வைக்கிறேன்…ஆனால் கொஞ்ச நேரத்தில் கடையை அடைத்துவிடுவேன்” என்று கூறினார்.

“எனது தேவை என்பதைத் தாண்டி, மக்களுக்கு என் சேவை தேவைப்படுவதால் சிறிது நேரத்திற்கு பயணிகளை ஏற்றி, இறக்குகிறேன்….பிறகு போராட்டத்தில் இணைந்துவிடுவேன்” என்று முஸ்லிம் ஆட்டோ டிரைவர் கூறினார்.

பந்த் குறித்து முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்கள் கூறுகையில், “ பந்த் காலை 9 மணி வரை அனைத்து பகுதிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இது நாள் முழுவதும் தொடரும் என்று நம்புகிறோம். இந்த பந்த்க்கு பல்வேறு சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. அவரவர் விருப்பதின்படியே முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்” என்று கூறினர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து வணிக பகுதிகளிலும், குறிப்பாக முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
**-வினிதா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *