சட்டப்பேரவையில் ஓபிஎஸுக்கு நன்றி தெரிவித்த முதல்வர்: ஏன்?

politics

இலங்கைக்கு உதவி தொகை அறிவித்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று (ஏப்ரல் 29) இலங்கை மக்களுக்கு உதவிடும் வகையில் தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில், தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று இலங்கையில் கடும் இன்னலுக்கு உள்ளாகி இருக்கக்கூடிய மக்களுக்கு உதவக்கூடிய வகையில், உணவு மற்றும் அத்தியாவசிய மருந்துப் பொருட்களை உடனடியாக அனுப்பி வைக்கத் தேவையான ஏற்பாடுகளைச் செய்து, உரிய அனுமதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானம் பற்றி அனைத்துக் கட்சித் தலைவர்களும் பேசினர்.

அதிமுக ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஓபிஎஸ் பேசுகையில், “இலங்கை மக்களுக்குத் தான் சார்ந்திருக்கும் குடும்பத்தின் சார்பில் 50 லட்சம் ரூபாய் தர தயார் எனவும், மனிதநேயத்திற்கு அடையாளமாகத் தமிழர்கள் இருக்கிறார்கள் என்பதை உணர்த்தும் தீர்மானம் இது” என்றும் கூறினார்.

இதைத்தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், அனைத்து கட்சி உறுப்பினர்களும் இந்த தீர்மானத்தை ஆதரித்துப் பேசியதற்கு நன்றி தெரிவித்தார்.

மேலும், கடும் இன்னலுக்கு உள்ளாகியிருக்கக்கூடிய இலங்கை நாட்டு மக்களுக்கு உதவிடும் நோக்கில், இன்று தமிழக அரசு அறிவித்துள்ள உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர்காக்கக்கூடிய மருந்துகள் அடங்கிய உதவி என்பது முதற்கட்டமாக அறிவிக்கப்பட்டிருப்பதுதான். இலங்கை நாட்டு மக்களுக்கு இன்னும் உதவி தேவைப்படுமென்றால், அடுத்த கட்டமாக, உதவிகள் செய்வதற்குத் தமிழக அரசு என்றைக்கும் தயாராக இருக்கிறது.

அதுமட்டுமல்ல நம்முடைய உறுப்பினர் ஜி.கே. மணி கூட குறிப்பிட்டுச் சொன்னார். “வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’’ என்ற வள்ளலாரின் உணர்வுகளைத் தாங்கி, தமிழ்நாட்டு மக்கள், அதேபோல அரசியல் கட்சிகள், தொண்டு நிறுவனங்கள், வர்த்தக அமைப்பினர் உள்ளிட்டோர் இலங்கை நாட்டு மக்களுக்கு உதவிகள் செய்ய முன்வந்தால் அவற்றையும் ஒருங்கிணைத்து, மத்திய அரசின் மூலமாக இலங்கை நாட்டு மக்களுக்கு வழங்குவதற்குத் தமிழ்நாடு அரசு தயாராக இருக்கிறது.

அதற்கு முன்னோட்டமாகத்தான் நம்முடைய எதிர்க்கட்சியினுடைய துணைத் தலைவர், அவருடைய சொந்த நிதியிலிருந்து 50 லட்சம் ரூபாயைத் தான் வழங்குவதாக இன்று அறிவித்திருக்கிறார். அவர் ஏன் இதை அறிவித்திருக்கிறார் என்றால், மற்றவர்களும் அதைப் பின்பற்ற வேண்டுமென்ற அந்த அடிப்படையில்தான் அதை அறிவித்திருக்கிறார். ஆகவே, அவருடைய அந்த நல்லெண்ணத்திற்கு நான் நன்றி சொல்லிக் கொள்கிறேன்” என்றார்.

**-பிரியா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *