உக்ரைனிலிருந்து திரும்பிய மாணவர்கள் தங்களது படிப்பைத் தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்களவையில் மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தின் இரண்டாவது அமர்வு பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று காலை தொடங்கியது. இதில் எதிர்க்கட்சியினர் உக்ரைன் விவகாரத்தையும் அங்கிருந்து வந்த மாணவர்களின் நிலை பற்றியும் மத்திய அரசிடம் கேள்வி எழுப்பினர்.
மக்களவையில் பேசிய தமிழக எம்.பி டி.ஆர்.பாலு, “உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களுக்கு என்ன திட்டம் வைத்துள்ளீர்கள். மாணவர்கள் ரஷ்யாவில் படிப்பைத் தொடர மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமா?” என்று கேள்வி எழுப்பினார்.
காங்கிரஸ் எம்.பி கவுரவ் கோகாய், “உக்ரைனிலிருந்து திரும்பிய மாணவர்களுக்காக மத்திய அரசு ஏதேனும் கொள்கை வகுத்து உள்ளதா? பல்கலைக்கழகங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதா?” என்று கேள்வி எழுப்பினார்.
இதே பிரச்சினையைக் குறிப்பிட்டுப் பேசிய காங்கிரஸ் உறுப்பினர் ராஜ்மோகன் உன்னிதன், “ஆயிரக்கணக்கான கேரள மாணவர்கள் இன்னும் சுமி நகரில் சிக்கி தவிப்பதாகவும் அவர்களை உடனடியாக மீட்க வேண்டும்” என்றும் வலியுறுத்தினார்.
மற்றொரு உறுப்பினரான அப்துல் காலிக், “உக்ரைனிலிருந்து எல்லை நாடுகளுக்கு மாணவர்கள் தாங்களாகவே வந்து சேர்ந்துள்ளனர். எனவே போர்க்களத்திலிருந்து இந்தியர்களை மீட்டதுபோல் மத்திய அரசு பேசக்கூடாது” என்றார்.
அதுபோன்று எதிர்க்கட்சிகள் உக்ரைனில் படிப்பதற்காக மாணவர்கள் வாங்கிய கல்விக் கடனை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
எதிர்க்கட்சிகளின் கேள்விக்குப் பதில் அளித்துப் பேசிய மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் , “மாணவர்களை அங்கிருந்து மீட்டு வந்து இருக்கிறோம். இதைப்பற்றி எல்லாம் நாங்கள் சிந்தித்து இருப்போம் என்பதை நீங்கள் உணர வேண்டும். மாணவர்களின் எதிர்காலத்தை அரசு கருத்தில் கொண்டுள்ளது. அவர்கள் மருத்துவப் படிப்பை முடிப்பதற்கான வழிகளை அரசு ஆராய்ந்து வருகிறது. எனவே உக்ரைனிலிருந்து திரும்பிய மாணவர்கள் மருத்துவர்களாக என்னென்ன தேவையோ அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பது பற்றி மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. தற்போதைய சூழலில் மாணவர்களை அதிர்ச்சியிலிருந்து மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம்.
பிரதமர் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட ஆப்ரேஷன் கங்கா திட்டத்துக்காகப் பிரதமருக்கு இந்த அவை பாராட்டு தெரிவிக்க வேண்டும்” என்றார்.
மாநிலங்களவையில் இவ்விவகாரம் தொடர்பாகப் பேசிய வெங்கையா நாயுடு, “இந்திய மருத்துவக் கவுன்சிலின் விதிமுறைகளும் நடைமுறைகளும் உறுப்பினர்களுக்கு நன்றாகத் தெரியும். மாணவர்களின் பிரச்சினை கவனிக்கப்பட வேண்டியது. எனினும் இது சிக்கலான பிரச்சினை. இந்த விவகாரம் தொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அறிக்கை தாக்கல் செய்வார். இதை அடுத்து இந்த விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்தலாம்” என்றார்.
உக்ரைனிலிருந்து மாணவர்கள் திரும்பியது தொடர்பாகவும் அவர்களது மருத்துவப் படிப்பு தொடர்பாகவும் அமைச்சர் ஜெய்சங்கர் இன்று அறிக்கை தாக்கல் செய்வார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
**-பிரியா**