பன்னீரால் தான் மன உளைச்சல்: ஜெயக்குமார்

politics

அதிமுக பொருளாளர் பன்னீர் செல்வத்தால் தொண்டர்களுக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

சென்னையில் அண்ணா, எம்ஜிஆர் ஜெயலலிதா நினைவிடங்களில் அதிமுக அவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் மகன் உசேன் மற்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் இன்று (ஜூன் 25) மரியாதை செலுத்தினர்.

இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயக்குமார், “ஜூலை 11ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி ஒற்றை தலைமை ஏற்பார். நிச்சயம் அன்றைய தினம் இதற்கான செயல் வடிவம் கொண்டுவரப்படும்” என்றார்.

இரட்டை தலைமைதான் எங்களது நோக்கம் என்று வைத்தியலிங்கம் கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு, “ தூங்குபவர்களை எழுப்பி விடலாம், தூங்குவது போல நடிப்பவர்களை எழுப்ப முடியாது. என்னென்ன சட்டப் பிரச்சினைகள் இருக்கிறது என்று சிவி சண்முகம் நேற்று விடை அளித்திருக்கிறார். அதிமுகவின் சட்ட திட்டத்தின்படி தான் எல்லாம் நடைபெறுகிறது” என்று தெரிவித்தார்.

மேலும் அவர், “யாரையும் அவமதிக்க வேண்டும் என்ற எண்ணம் யாருக்கும் கிடையாது. விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்து இருந்தால் அது கண்டிப்பாக கண்டிக்கத்தக்கது. அவமரியாதை செய்ய வேண்டுமென்ற உள்நோக்கம் கிடையாது.

ஓபிஎஸ் ஏன் மன உளைச்சலில் இருக்க வேண்டும். எல்லோரும் விரும்புவது ஒற்றை தலைமைதான். ஊரோடு ஒத்து வாழ வேண்டும். ஒரு படை என்று எல்லோரும் வந்துவிட்டால் நம்மளும் தானே ஆதரவு கொடுக்க வேண்டும். இப்படி ஆதரவு கொடுக்காமல் நீதிமன்றத்தை அணுகுவது, தேர்தல் ஆணையத்தை அணுகுவது, பிரச்சனைகளை உருவாக்குவது எல்லாம் அவருக்கு மன உளைச்சல் இல்லை. கட்சிக்காரர்களுக்கும் தொண்டர்களுக்கும் தான் மன உளைச்சல். பொதுக்குழு மேடையில் இருக்கும் போது எல்லோரும் அமைதி காக்க வேண்டும் என்று முன்னாள் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது. அழிப்பதற்கு யாரும் பிறந்து வரவும் முடியாது. திமுகவை அழிக்க நினைத்தவர்கள் எல்லாம் அழிந்து போயுள்ளனர் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியிருக்கிறார். அவர் மு.க அழகிரியை மனதில் வைத்து தான்
அப்படிச் சொல்லி இருப்பார் என்று குறிப்பிட்டார்.

**-பிரியா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *