நான் பன்னீர் ஆளா? எடப்பாடி ஆளா?: ஜெயக்குமார்

politics

அதிமுகவுக்குள் ஒற்றைத் தலைமை விவகாரம் பூதாகரமாகியுள்ள நிலையில், ஓபிஎஸ் பக்கமா, ஈபிஎஸ் பக்கமா என்ற கேள்விக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஒற்றை தலைமை பற்றி பேட்டி கொடுத்ததால் தான் அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்தது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் குற்றம்சாட்டியிருந்தார். அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விக்கும் பொறுத்திருந்து பாருங்கள் என்று கூறியிருந்தார்.

ஓபிஎஸின் இந்த காட்டமான பதிலுக்கு ஜெயக்குமாரின் ரியாக்‌ஷன் குறித்து மின்னம்பலத்தில், [பன்னீர் காட்டம்: ஜெயக்குமார் என்ன சொல்கிறார்?](https://minnambalam.com/politics/2022/06/17/32/panneer-angry-jeyakumar-reaction-edapadi-talk-to-edapadi) என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

அதில், “ராஜ்யசபா எம்பி வாய்ப்பு வந்தபோது அதை ஜெயக்குமாருக்கு கொடுக்க வேண்டும் என்று அதிமுக தலைமையில் விவாதம் எழுந்தது. ஆனால் அதை ஓ.பன்னீர் விரும்பவில்லை. எடப்பாடி நினைத்திருந்தால் ஜெயக்குமாருக்கு எம்பி பதவியை வலியுறுத்தி வாங்கிக் கொடுத்திருக்க முடியும். ஆனால் எடப்பாடியும் மெனக்கெடவில்லை. எனவே எடப்பாடியின் ஆதரவாளர் என்று ஜெயக்குமாரை சொல்லவும் இடமில்லை. அதேநேரம் அவர் பன்னீர்செல்வத்தின் எதிர்ப்பாளரும் அல்ல” என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறியிருந்ததாகத் தெரிவித்திருந்தோம்.

இந்நிலையில் நில அபகரிப்பு புகார் தொடர்பாகக் கையெழுத்திடச் சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வருகை தந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தற்போதுள்ள சூழ்நிலையில் ஒற்றைத் தலைமை தேவை என்ற காலத்தின் கட்டாயத்தால் தான் பிரதிபலிக்கப்பட்டிருக்கிறது. இதில் எந்தவிதமான உள்நோக்கம் கிடையாது” என்று கூறினார்.

அப்போது ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி இதுவரை வாய் திறக்காததற்குக் காரணம் என்ன என்ற கேள்விக்கு, நான் தான் பேசிக்கொண்டிருக்கின்றேனே என்று கூறிய அவர், “இவருக்குத்தான் தகுதி இருக்கிறது. ஏ-க்குதான் தகுதி, பி-க்குதான் தகுதி என யாரையும் நான் சொல்லவில்லை. கட்சியைப் பொறுத்தவரையில் ஒட்டுமொத்தமாகப் பொதுக்குழு தான் முடிவு செய்யும். திட்டமிட்டபடி பொதுக்குழு நடக்கும். அதில் சுமுகமான முடிவு எட்டப்படும்” என்று பதிலளித்தார்.

ஓபிஎஸ் பக்கமா, ஈபிஎஸ் பக்கமா என்ற கேள்விக்கு, “அது ரகசியமானது, கட்சி பக்கம்தான் இருப்பேன்” என்றார்.

வாழ்க்கையில் நான் பார்க்காத பதவி கிடையாது என்று தெரிவித்த ஜெயக்குமார், “ஆட்சியில் மீன் வளத் துறை, பால் வளத் துறை, நிதித் துறை, சட்டத் துறை, தகவல் தொழில்நுட்பத் துறை என எல்லா துறையும் கொடுத்து அம்மா அழகுபார்த்தார்கள். 2016ல் அவர் மறைவுக்குப் பிறகு நிதித் துறை என்னிடம் இருந்த போது, ஓபிஎஸ் உங்களுடன் வந்து இணைந்தால், நிதித் துறையை விட்டுக் கொடுப்பீர்களா என்று நிருபர் ஒருவர் கேட்டார். தாராளமாக விட்டுத் தருவேன் என்று கூறியிருந்தேன். அதேபோன்று எந்த கோரிக்கையும் வைக்காமல் விட்டுக்கொடுத்தேன். பதவி ஆசை என்பது எனக்கு எப்போதுமே கிடையாது. கட்சிதான் முக்கியம். வாழ்நாள் கொள்கையே திமுகவை எதிர்ப்பதுதான். ராஜ்யசபா பதவியை நான் எதிர்பார்க்கவே இல்லையே’ என்று குறிப்பிட்டார்.

மேலும் அவர், “ஒரு கருத்து பேசப்பட்டு அதற்குச் செயல்வடிவம் கொடுப்பதற்கு முயற்சி எடுக்கப்படுகிறது. முயற்சி எடுப்பது நல்லதுதானே. விரைவில் நல்ல உடன்பாடு எட்டப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது. நான் சிறையிலிருந்து வெளியே வந்ததும் என்னைப் பார்க்க ஓபிஎஸ், ஈபிஎஸ் அண்ணன்கள் என் வீட்டுக்கு வந்தனர். அதுபோன்று இரண்டு பேரும் டீ சாப்பிட வந்தார்கள் என்றால் அங்கேயே எல்லாவற்றையும் பேசி முடித்துவிடலாம். எனக்கு தனிப்பட்ட கருத்து கிடையாது. கட்சிக் கூட்டத்தில் வலியுறுத்தப்படும் கருத்தை உதாசீனப்படுத்த முடியாது. அதற்குச் செயல்வடிவம் கொடுப்பது அடுத்தகட்ட நடவடிக்கை” என கூறினார்.

ஒற்றைத் தலைமை பற்றி வெளிப்படையாகக் கூறியது ஏன் என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், “சட்டமன்றத்திலும், பாராளுமன்றத்திலும் எம்.எல்.ஏ.க்கள்., எம்.பி.க்கள், தொகுதி பிரச்சினை பற்றிப் பேசுவது போலத் தலைமை கழகத்தில் ஒற்றை தலைமை பற்றிப் பேசப்பட்டது. நான் சிதம்பர ரகசியத்தை ஒன்றும் போட்டு உடைக்கவில்லை. உள்ளே என்ன நடந்தது என விலாவாரியாக சொல்லியிருந்தால் அது தப்பு” என குறிப்பிட்டார்.

ஒற்றைத் தலைமை, இரட்டை தலைமை விவகாரம் ஜூன் 23ஆம் தேதி முடிவுக்கு வருமா அல்லது இந்த பிரச்சினை தொடருமா என்ற கேள்விக்கு, “அம்மா மறைவுக்குப் பிறகு எத்தனையோ பிரச்சினைகள் இதுபோன்று வந்தது. அந்த பிரச்சினைகள் எல்லாம் சரியானது. அதுபோன்று எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு இருக்கிறது. ஓபிஎஸை பொறுத்தவரை இப்போதும் ஒருங்கிணைப்பாளராகத்தான் இருக்கிறார். அவரை ஓரங்கட்டும் எண்ணம் எல்லாம் கிடையாது” எனக் கூறினார் ஜெயக்குமார்.

**-பிரியா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *