பன்னீர் பூச்சாண்டிக்கு பயப்பட மாட்டேன்: ஜெயக்குமார்

politics

அதிமுக தலைமைக் கழகத்தில் இன்று (ஜூன் 18) செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தன் மீது சொன்ன புகாருக்கு பகிரங்க பதில் அளித்துள்ளார்.

பொதுக்குழுவுக்கான தீர்மானங்களை வரையறுக்கும் தீர்மானக் குழு கூட்டம் கடந்த சில நாட்களாக அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. ஜூன் 16 ஆம் தேதி தீர்மானக் குழுக் கூட்டத்தில் ஜெயக்குமார், வளர்மதி, சி.வி.சண்முகம் போன்றோர் கலந்துகொண்டிருந்தபோது ஓ.பன்னீர் செல்வம் தலைமைக் கழகத்துக்கு வந்தார். அவர் வரும் தகவல் கிடைத்து ஜெயக்குமார், வளர்மதி, சண்முகம் ஆகியோர் கீழே இறங்கிவிட்டனர். ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்துக் கொண்டிருந்தபோதே பெண் தொண்டர்கள் அவரை மிகக் கடுமையான வார்த்தைகளில் தாக்கினார்கள். அதன் பிறகு மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஒற்றைத் தலைமை பற்றி பேசியதை பேட்டியாகக் கொடுத்ததுதான் இத்தனை பிரச்சினைக்குக் காரணம்” என்று கூறியிருந்தார் ஓபிஎஸ்.

இந்த பின்னணியில் இன்றும் தீர்மானக் குழு கூட்டம் காலை 11 மணியளவில் கூடியது, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தோடு அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஜெயக்குமார் அதன் பின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.

”அதிமுகவின் வேர்களாக இருக்கும் தொண்டர்களின் மனநிலையை, மாவட்டச் செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கருத்துகளாக சொன்னார்கள். உள்ளங்கை நெல்லிக்கனி போல அவர்களது எண்ண ஓட்டத்தை நான் எதிரொலித்தேன். இதில் சிதம்பர ரகசியம் ஒன்றும் கிடையாது. நான் சிதம்பர ரகசியத்தையா போட்டு உடைத்தேன்? நான் சொன்னது தொண்டர்களின் எண்ணங்களைதான். பெரும்பான்மையோர் ஒற்றைத் தலைமை வேண்டும் என்று சொல்கிறார்கள். இதில் என்ன தவறு இருக்கிறது? ஒரு தவறும் கிடையாது” என்று கூறியவரிடம்,
“ உங்கள் மீது நடவடிக்கை பற்றிய கேள்விக்கு பொறுத்திருந்து பாருங்கள் என்று பன்னீர்செல்வம் கூறியிருந்தாரே” என்று கேட்டதற்கு,
“என் மேலயா?” என்று கேட்டு சிரித்தவர் பிறகு, “என் மேல நடவடிக்கையா? இந்த பூச்சாண்டிக்கெல்லாம் பயப்படுபவன் ஜெயக்குமார் கிடையாது. தொண்டனாக இருந்து அம்மா அவர்கள் கட்சியிலும், ஆட்சியிலும் எனக்கு எவ்வளவோ பொறுப்புகள் கொடுத்து அழகு பார்த்தார்கள். எனக்கு பதவி வெறி கிடையாது. அதனால் அதிமுகவின் தொண்டனாக இருந்து கட்சியின் நலன்களை பாதுகாப்பேன். திமுக ஆட்சியின் அவலங்களை எடுத்துரைப்பேன்.

மாவட்டச் செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், தொண்டர்களின் ஒட்டுமொத்த விருப்பத்தைதான் தலைமைக் கழக கூட்டத்தில் பேசப்பட்டதைத்தான் நான் வெளியே சொன்னேன். ஒத்தையா, ரெட்டையா என்பதை அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். ஜெயக்குமார் இல்லை” என்று விளக்கம் அளித்தார் ஜெயக்குமார்.

-**வேந்தன்**

[பன்னீர் காட்டம்: ஜெயக்குமார் என்ன சொல்கிறார்?](https://www.minnambalam.com/politics/2022/06/17/32/panneer-angry-jeyakumar-reaction-edapadi-talk-to-edapadi)

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *