இலங்கைக்கு உதவ விருப்பமில்லை: நீதிமன்ற காவலர் கடிதம்!

politics

இலங்கைக்கு உதவ விருப்பம் இல்லை, எனது ஒருநாள் ஊதியத்தை பிடித்தம் செய்யாதீர்கள் என்று உயர்நீதிமன்ற பாதுகாப்பு பிரிவு காவலர் ஒருவர் காவல்துறை ஆணையாளருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு இந்தியா உதவி செய்து வருகிறது. தமிழக அரசும் இலங்கைக்கு உதவிடும் வகையில் அரிசி, மருத்துவ பொருட்கள் ஆகியவற்றைக் கப்பல் மூலம் அனுப்பி வைத்தது. திமுக எம்எல்ஏக்கள் எம்பிக்கள் தங்களுடைய ஒரு மாத சம்பளத்தை வழங்குவார்கள் என்று முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் அறிவித்தார்

இந்த நிலையில் இலங்கை மக்களுக்கு உதவும் வகையில் தங்களது ஒருநாள் ஊதியத்தை பிடித்தம் செய்து கொள்ளுமாறு தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் முன்வந்தது. இந்த சங்கத்தின் மாநிலத் தலைவர் சண்முகராஜ், தமிழக அரசில் பணிபுரியும் அரசு அலுவலர் ஆசிரியர்களது ஒருநாள் ஊதியத்தை பிடித்துக் கொள்வதற்கு அரசாணை பிறப்பித்து உத்தரவிடுமாறு முதல்வரைக் கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்த சூழலில், தமிழக காவல்துறையில் உயர் நீதிமன்ற பாதுகாப்பு பிரிவில் பணியாற்றி வரும் தலைமைக் காவலர் ஜனார்த்தனம் தனது ஒருநாள் ஊதியத்தைப் பிடிக்கக் கூடாது என்று வலியுறுத்தி காவல்துறை ஆணையாளருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

இலங்கைக்கு உதவ விருப்பம் இல்லை என்று கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ள அவர் அதற்காக 6 காரணங்களையும் குறிப்பிட்டுள்ளார்.

அதில், நமது பாரத பிரதமரை (ராஜீவ் காந்தி கொன்றவர்கள் இலங்கை நாட்டினர்.
நமது தமிழ் இனத்தைக் கொன்ற இலங்கை அரசாங்கம்.
பாரத பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டபோது அதில் காவல்துறையினர் பெரிதும் பாதிக்கப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
அரசுக்கு ஈட்டிய விடுப்பு ஒப்புவித்த, பெற்ற பணப்பலனை தற்போது ஈட்டிய விடுப்பு ஒப்புவித்தல் ஆணையை அரசு ரத்து செய்ததால் ஆண்டுக்கு 15 நாட்கள் ஊதிய பலன் பாதிக்கப்பட்டுள்ளது.
தற்போது மத்திய அரசு டிஏ அறிவித்துள்ளது. ஆனால் அதைத் தமிழக அரசு இன்று வரை டிஏ அறிவிக்கவில்லை.
நீதிபதி கிருபாகரன் பலமுறை காவலர்களுக்கான ஊதியம் குறைவினை ஏற்றித் தரக் கோரியும் அதற்கு இந்த தமிழக அரசு இதுநாள் வரை செவிசாய்க்கவில்லை.

” தனக்கு மிஞ்சி தான் தான தர்மம்” ஆகையால், அரசு அண்டை நாடான இலங்கைக்கு உதவி செய்தல் நல்ல எண்ணம். ஆனால், எனது குடும்பத்தைப் பராமரிக்கவே என்னுடைய சம்பளம் போதுமானதாக இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்வதுடன் எனது ஒருநாள் ஊதியத்தை அரசுக்கு விட்டுக் கொடுக்க எனக்கு விருப்பமில்லை என்பதை இதன் மூலம் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

**-பிரியா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *