திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஜூன் 14ஆம் தேதி மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை நடந்தது. முதல் நாள் இரவுதான் மாசெக்கள் கூட்டம் நடக்கிறது என்ற தகவல் மாசெக்கள் வாட்ஸ்அப் குரூப்பில் தலைமையால் பதிவிடப்பட்டிருக்கிறது.
அதன்படியே நேற்று மாலை காணொலிக் காட்சியில் கூட்டம் தொடங்கியது. திமுக தலைவர் ஸ்டாலின் உடைந்து போயிருந்தார். மிக உருக்கமான குரலில் அவர் பேசும்போது, “இந்தக் கூட்டத்தின் முதன்மை நோக்கம் மறைந்த திமுக மாசெ ஜெ.அன்பழகனுக்கு இரங்கல் தெரிவிப்பதுதான். நாம் எல்லாரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஜெ.அன்பழகன் என்ற மாவீரனுக்கு விமரிசையாக படத் திறப்பு நிகழ்வுகூட நடத்த முடியவில்லை. கொரோனா தொற்றுக்கான ஊரடங்கு நீடிக்கும் வரை நாம் எதுவும் செய்ய முடியாது. அதனால்தான் உடனடியாக இந்தக் கூட்டத்தைக் கூட்டியிருக்கிறோம். கட்சியின் இரங்கலைப் பதிவு செய்ய வேண்டும். மாவட்டச் செயலாளர்கள் அன்பழகன் பற்றிய நினைவுகளை பகிர்ந்துகொள்ளுங்கள்” என்று கூறினார்.
திமுக பொருளாளராக துரைமுருகன் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டார். அதன்பின் முதன்மைச் செயலாளர் நேரு பேசுகையில் முக்கியமான ஒரு தகவலைப் பகிர்ந்துகொண்டார். “ஒரு நிகழ்ச்சியில தலைவர் கலைஞருக்காக வெயிட் பண்ணிட்டிருந்தோம். அப்ப கலைஞர் வந்துட்டாரு. மேடைக்குப் போயிட்டிருந்தாரு. நான், அன்பழகன்லாம் நின்னுக்கிட்டிருந்தோம். ‘அன்பு மேடைக்கு வா போவோம்’ என்று அன்பழகனைப் பார்த்துக் கூப்பிட்டாரு. அப்போ அன்பழகன் டக்குனு, ‘தலைவரே… எங்க தலைவரு இன்னும் வரலை, அவர் வரட்டும்’னு தலைவர்கிட்டயே சொன்னாரு. அப்போ அன்புவைப் பார்த்து சிரிச்சுக்கிட்டே தலைவர் மேடைக்குப் போனாரு. அன்பழகன் எங்க தலைவர் இன்னும் வரலைன்னு குறிப்பிட்டது நம்ம தளபதியைதான். அந்த அளவுக்கு உங்க (ஸ்டாலின்) மேல பாசம் கொண்டவரு அன்பழகன்” என்று சொன்னபோது ஸ்டாலின் கண்களில் நீர் துளிர்த்தது.
திருப்பூர் செல்வராஜ் பேசுகையில், “அன்பழகன் ஒரு வழக்குல திருப்பூர்ல கையெழுத்து போட சொல்லி கண்டிஷன் போட்டிருந்தாங்க. அப்ப தலைவர் கலைஞர் எனக்கு போன் பண்ணி, ‘அன்பு திருப்பூர் வர்றாருப்பா… பார்த்துகப்பா’ என்று கூறினார். அன்பழகன் அண்ணனுக்காக தலைவர் கலைஞரே போன் பண்ணி அவரை பார்த்துக்க என்று சொன்னதில் இருந்து அவர் மேல் தலைவர் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார் என்று தெரிந்தது” என்று நெகிழ்ந்தார்.
இவ்வாறு கலைஞர் அன்பழகன் மேல் வைத்திருந்த அன்பையும், ஸ்டாலின் மேல் அன்பழகன் வைத்திருந்த மரியாதையையும் நிர்வாகிகள் வெளிப்படுத்தினர்.
ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துவிட்டுப் பேசும்போது, “கிளைக் கழகங்களுக்குக் கட்சித் தேர்தல் நடந்தும் நடக்காமலும் இருக்கிறது. நடந்து முடிந்தததை அனுப்பி வையுங்கள். மீதி கிளைகளுக்கு கொரோனா முடிந்து பார்த்துக் கொள்ளலாம்” என்று கூறியிருக்கிறார்.
**-ஆரா**�,