கல்குவாரி விபத்துக்கு யார் காரணம்?

politics

கல்குவாரியில் விபத்துக்குள்ளாகி சிக்கித் தவித்த மீதமிருந்த மூவரில் ஒருவரின் உடல் நேற்று இரவு மீட்கப்பட்டது.
நெல்லை மாவட்டம் அடைமிதிப்பான் குளம் கல்குவாரியில் சரிவு ஏற்பட்டு மே 14ஆம் தேதி இரவு நடந்த விபத்தில் ஆறு தொழிலாளர்கள் சிக்கினர். இவர்களில் மூன்று பேர் நேற்று முன்தினம் மீட்கப்பட்டனர். அதில் ஒருவர் உயிரிழந்தார். இந்த நிலையில் பாறை சரிந்து விழுவதால் மீட்புப் பணிகளில் அவ்வப்போது தொய்வு ஏற்பட்டு வருகிறது. உடல்கள் மீது சரிந்துள்ள பாறைகளை நீக்குவதே கடினமாக இருப்பதாக மீட்புப் பணியில் உள்ளவர்கள் கூறுகின்றனர்.
நேற்று மாலை கல்குவாரியிலிருந்து நான்காவது நபரின் உடல் மீட்கப்பட்டது. கல்குவாரியில் சிக்கியிருந்த தச்சநல்லூர் ஊருடையான் குடியிருப்பைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் ராஜேந்திரன், நாங்குநேரி காக்கை குளத்தைச் சேர்ந்த செல்வகுமார், நாட்டார் குளத்தைச் சேர்ந்த முருகன் ஆகிய மூவரில் அவர் யார் என அடையாளம் காண முடியவில்லை. அதோடு பாறைகளில் பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டதால், அவை சரிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் நேற்று இரவு மீண்டும் மீட்புப் பணி நிறுத்தப்பட்டது. மண்ணியல் நிபுணர்கள் ஆய்வு செய்த பின்னரே மீண்டும் மீட்புப் பணி தொடங்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் கல்குவாரியில் சிக்கியுள்ள மிதமுள்ள இருவரின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.
இந்த நிலையில், இதுபோன்ற விபத்துகளுக்கு யார் காரணம்? கல்குவாரிகளுக்கு விதிமுறைகள் இல்லையா? என்று திருநெல்வேலி மாவட்ட வருவாய்த் துறை அதிகாரிகளிடம் விசாரித்தோம்.
அவர்கள் கூறுகையில், “திருநெல்வேலி மாவட்டத்தில் சுமார் 60 குவாரிகள் உள்ளன. இந்த குவாரிகளில் எடுக்கும் கற்களை கேரளா மாநிலத்துக்கு சப்ளை செய்கின்றனர். குவாரிகளுக்கு விதிமுறைகள் உள்ளன. 164அடி ஆழம் வரை மட்டுமே வெட்ட வேண்டும் என விதிமுறை உள்ளது.
அதேபோல் காலை 6.00 முதல் மாலை 5.00 வரையில் குவாரி நடத்த வேண்டும். ஆனால் இங்கு 24 மணி நேரமும் வெடி வைத்து உடைத்து எடுக்கிறார்கள். 164 அடிக்குப் பதிலாக 350 அடி ஆழம் வரை எடுக்கிறார்கள்.
குறிப்பாக விபத்து நடந்த குவாரிக்கு மார்ச் மாதத்துடன் பர்மிட் முடிந்துவிட்டது. 14ஆம் தேதி இரவு சம்பவம் நடந்த வரையில் பர்மிட் இல்லாமல் சட்டத்துக்கு புறம்பாகத்தான் கற்களை வெட்டி எடுத்துள்ளனர். இதேபோல் இந்த மாவட்டத்தில் சட்டத்துக்கு புறம்பாகத்தான் பல குவாரிகளை நடத்தி வருகின்றனர். இதெல்லாம் இந்த மாவட்ட அதிகாரிகளுக்கும் ஆளும் கட்சி பிரதிநிதிகளுக்கும் தெரியாதா என்ன?
குவாரிகளில் கொள்ளை அடிப்பவர்கள், கொடுக்க வேண்டிய இடத்தில் கொடுக்க வேண்டியதைக் கொடுத்து வாயடைத்து வந்த விளைவுதான் தற்போது நடந்திருக்கும் விபரீதம். சம்பவம் நடந்த குவாரியை நடத்தி வந்த சேம்பர் செல்வராஜ் காங்கிரஸ் பிரமுகர் மட்டுமல்ல ,விவி மினரல்ஸ் வைகுண்ட ராஜனின் மச்சான் ஆவார். இவர் கடந்த 30 வருடங்களாக இந்தத் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்” என்கிறார்கள்.

**வணங்காமுடி**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *