ஆளுநருக்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள் கருப்புக் கொடி!

politics

“தமிழ்நாடு சட்டமன்றத்தின் மாண்பை மதிக்காமல் நடந்து கொள்ளும் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி க்கு தமிழக மக்களின் உணர்வுகளை அனைத்து மன்றங்களிலும் எதிரொலிப்போம்” என்று சட்டமன்றத்தில் நேற்று ஏப்ரல் 18ஆம் தேதி அறிவித்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.

இன்று ஏப்ரல் 19 ஆம் தேதி மயிலாடுதுறையில் தமிழக ஆளுநர் ரவிக்கு எதிராக திமுகவின் கூட்டணிக் கட்சிகளும் மற்ற அமைப்புகளும் இணைந்து கருப்புக் கொடி போராட்டம் நடத்தியுள்ளனர்.

நேற்று ஏப்ரல் 18ஆம் தேதி சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் கலந்து கொண்டதால், அந்த விழாவை தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, கடலூர் மாவட்ட அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் புறக்கணித்தனர்.

நேற்று ஆளுனருக்கு எதிராக அமைச்சர்கள் புறக்கணிப்பின் மூலம் எதிர்ப்பை காட்ட, இன்று ஆளுநருக்கு எதிராக மக்கள் மன்றத்தில் கருப்புக்கொடி போராட்டம் நடைபெறுகிறது.

தமிழக ஆளுநர் ரவி நேற்று மாலை சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டுவிட்டு, இன்று காலை திருக்கடையூர் அபிராமி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
அதன் பிறகு தருமபுரம் ஆதீனத்துக்கு சென்று ஆதீனத்தின் ஞான ரத யாத்திரையை தொடங்கி வைக்கிறார். அடுத்து திருவாவடுதுறை ஆதீனத்திற்கு ஆளுநர் செல்கிறார்.

இந்நிலையில் தமிழக சட்டமன்றத்தில் சட்ட மசோதாக்களை உரிய வகையில் குடியரசுத் தலைவருக்கு அனுப்ப காலதாமதம் செய்யும் ஆளுநரை கண்டித்து மயிலாடுதுறை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் ஒருங்கிணைப்பில் பல்வேறு அமைப்புகள் போராட்டம் அறிவித்தன.

தமிழ் வளர்த்த தருமபுரம் ஆதீனத்துக்கு ஆளுநர் ஏன் வரவேண்டும் என்று கேள்வி கேட்ட போராட்டக்காரர்கள், எங்கள் எச்சரிக்கையை மீறி ஆளுநர் வந்தால் கருப்புக் கொடி போராட்டம் நடத்துவோம் என்றும் அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில் இன்று காலை 9.30 மணி அளவில் ஆளுநர் திருக்கடையூர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு…அங்கிருந்து மன்னம்பந்தல் வழியாக தர்மபுரம் ஆதீனத்துக்கு செல்வதாக பயணத்திட்டம் அமைத்திருந்தனர்.
இந்த அடிப்படையில் காலை மன்னம்பந்தலில் நூற்றுக்கணக்கான பேர்கள் கைகளில் கருப்பு கொடியுடன் திரண்டனர்.
“தமிழ்நாட்டு மக்களுக்கு எதிரான ஆளுநரே தமிழ்நாட்டை விட்டு வெளியேறு!”, ‌”தருமபுரம் ஆதீனமே மதவெறியை தூண்டும் வன்முறை கும்பலுக்கு துணை போகாதே” என்ற கோஷங்களுடன் போராட்டக்காரர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

இந்த போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்),
விடுதலை சிறுத்தைகள் கட்சி,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,
மனிதநேய மக்கள் கட்சி, எஸ்டிபிஐ, திராவிடர் கழகம்
மக்கள் அதிகாரம்,
தந்தை பெரியார் திராவிடர் கழகம்,
திராவிடர் விடுதலைக் கழகம், மீத்தேனுக்கு எதிரான மக்கள் இயக்கம் உள்ளிட்ட அமைப்புகள் கலந்து கொண்டன.
கருப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து மயிலாடுதுறை திருமண மண்டபத்தில் வைத்துள்ளார்கள் போலீசார்.

**வேந்தன்**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *