�‘நீட்’ டுக்கும் இதைத்தான் சொன்னார்கள்: சட்டப்பேரவையில் காரசார விவாதம்!

politics

CUET(க்யூட்) நுழைவுத் தேர்வுக்கு எதிராகச் சட்டப்பேரவையில் தனி தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதை எதிர்த்து பாஜக வெளிநடப்பு செய்தது.

நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன் மூலமே வரும் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும் என பல்கலைக்கழக மானியக் குழுவான யுஜிசி உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் இந்த நுழைவுத் தேர்வுக்கு எதிராகத் தனி தீர்மானம் கொண்டு வந்தார்.

அப்போது பேசிய அவர், “மாநிலத்தின் கல்வி உரிமை மீது ஒன்றிய அரசின் தாக்குதல் தொடருகிறது. பல்கலைக்கழக மானியக் குழுவின் நிதியுதவியுடன் இயங்கும் அனைத்து மத்தியப் பல்கலைக்கழகங்களிலும், இளங்கலை உள்ளிட்ட பல்வேறு படிப்புகளுக்கான சேர்க்கைகளுக்கு ’பொது நுழைவுத் தேர்வு’ (CUET(க்யூட்)) என்று அறிவித்து, வருகின்ற 2022-2023 ஆம் கல்வியாண்டு முதல் செயல்படுத்தத் திட்டமிட்டிருக்கிறது.

இந்த நுழைவுத் தேர்வு மதிப்பெண்களை மாநிலப் பல்கலைக்கழகங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், தனியார் பல்கலைக்கழகங்கள், உயர் கல்வி நிறுவனங்கள்கூட இளங்கலைப் படிப்புகளின் மாணவர் சேர்க்கைக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனப் பீடிகை போட்டு, ஓர் அறிவிப்பினை யுஜிசி வெளியிட்டுள்ளது. இதனை எதிர்த்து இந்த தீர்மானத்தைக் கொண்டு வருகிறேன்” என்றார்.

அந்த தீர்மானத்தில், “பனிரெண்டாம் வகுப்புத் தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களைக் கணக்கில் கொள்ளாமல் பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே சேர்க்கை நடைபெறும் எனவும், மாநிலப் பல்கலைக்கழகங்கள், தனியார் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் விரும்பினால் மாணவர்கள் சேர்க்கையை நடத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு (NCERT) பாடத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட எந்தவொரு நுழைவுத் தேர்வும், நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலப் பாடத் திட்டங்களில் படித்த மாணவர்கள் அனைவருக்கும் சமமான வாய்ப்பினை வழங்கிடாது. பெரும்பாலான மாநிலங்களில் மொத்த மாணவர்களில் 70 விழுக்காட்டிற்கும் அதிகமான மாணவர்கள் மாநிலப் பாடத் திட்டங்களில் பயின்று வருபவர்கள்.

இவர்கள் பெரும்பாலும் விளிம்புநிலைப் பிரிவினரைச் சேர்ந்தவர்கள் ஆவர். எனவே, என்சிஇஆர்டி பாடத் திட்ட அடிப்படையிலான நுழைவுத் தேர்வு, மத்திய பல்கலைக்கழகங்களில் சேருவதற்குத் தகுதியான பெரும்பான்மையினருக்குப் பாதகமான நிலையை ஏற்படுத்துவதோடு, இந்தச் சூழ்நிலை நம் நாட்டிலுள்ள பல்வேறு மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அவற்றின் இணைப்புக் கல்லூரிகளில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கையை வெகுவாகக் குறைக்கும்.

இந்நுழைவுத் தேர்வும், நீட் தேர்வைப் போன்றே நாடு முழுவதும் உள்ள பல்வேறு பள்ளிக் கல்வி முறைகளை ஓரங்கட்டி, பள்ளிகளில் நீண்ட காலக் கற்றல் முறைகளை வெகுவாகக் குறைத்து மதிப்பிட வழிவகுப்பதோடு, மாணவர்கள் தங்களது நுழைவுத் தேர்வு மதிப்பெண்களை அதிகரிக்கப் பயிற்சி மையங்களைச் சார்ந்திருக்கும் ஒரு சூழலை ஏற்படுத்திவிடும் என்பதில் ஐயமில்லை.

மேலும், மாணவர்களுக்கான பயிற்சி மையங்கள் புற்றீசல் போன்று வளர மட்டுமே இது சாதகமாக அமையும் என்று தமிழக மக்களிடையே அச்சம் எழுந்திருக்கிறது. இவ்வாறு ஒரு நுழைவுத் தேர்வினைச் செயல்முறைக்குக் கொண்டு வருவதன் மூலம் பள்ளிக் கல்வியோடு பயிற்சி மையங்களையும் நாடும் இளைய மாணவ சமுதாயத்தினர் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்படுவார்கள்.

எனவே, மாநில அரசுகளின் உரிமையினை நிலைநாட்டும் பொருட்டு மத்திய பல்கலைக்கழகங்களில் பல்வேறு படிப்புகளில் சேர்வதற்காக நடத்தவிருக்கும் பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வினை ரத்து செய்திட ஒன்றிய அரசினை இந்தப் பேரவை வலியுறுத்துகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வரைத் தொடர்ந்து பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி வேல்முருகன், ”பேர் வேண்டுமானால் இந்த நுழைவுத் தேர்வுக்கு க்யூட் என்று இருக்கலாம். ஆனால் மத்திய அரசின் செயல் க்யூட்டாக இல்லை” என்று கூறி இந்த தீர்மானத்தை வரவேற்றார். மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்ட அரசியல் கட்சியினர் வரவேற்றனர்.

பாஜம எம்.எல்.ஏ.நயினார் நாகேந்திரன் பேசும் போது, “நாடுமுழுவதும் 49 மத்திய பல்கலைக் கழகங்கள் உள்ளன. அதில் ஒன்று முதல்வரின் ஊரான திருவாரூரில், ‘திருவாரூர் மத்திய பல்கலைக் கழகம்’ உள்ளது. இதில் 27 துறைகள் உள்ளன. 2515 மாணவர்கள் சேர்க்கையில் இருக்கிறார்கள். ஏற்கனவே அங்கு நுழைவுத் தேர்வு முடிந்துவிட்டது.

அதுபோன்று கம்யூனிஸ்ட் ஆளும் மாநிலமான கேரள மாநில காசர்கோட்டில் ஒரு மத்திய பல்கலைக் கழகம் உள்ளது. அங்கு யாரும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அதைப் பற்றி பேச விரும்பவில்லை.

முதல்வர் கொண்டு வந்த தீர்மானத்தின் கீழ், மாநில அரசு பல்கலைக் கழகங்கள், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் பல்கலைக் கழகங்கள் விரும்பினால் சேர்த்துக்கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது” என்றார்.

அவர் பேசிக்குகொண்டிருக்கும் போதே குறுக்கிட்டுப் பேசிய உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, “நீட் தேர்வுக்கும் இதைத்தான் சொன்னார்கள். தமிழகம் விரும்பினால் கொண்டு வரலாம் என்று. இப்படிதான் சொல்லிக் கொண்டிருப்பீர்கள், விரும்பினால் கொண்டு வரலாம் என ஆரம்பித்து புதிய கல்விக் கொள்கை என அனைத்தையும் கட்டாயப்படுத்துவீர்கள். நீங்கள் சொல்வது தவறான கருத்து. அதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்பதற்காக முதல்வர் தீர்மானத்தைக் கொண்டு வந்தார்” என்று கூறினார்.

அப்போது தமிழ்நாட்டுக்கு இந்த நுழைவுத் தேர்வு தேவையில்லை என பாஜக உறுப்பினருக்கும் தெரியும் என சபாநாயகர் கூற, அதைத்தொடர்ந்து எழுந்து பேசிய நயினார் நாகேந்திரன், “சென்னை ஐஐடி, திருச்சி ஐஐஎம், என்.ஐ.டி கல்லூரிகளில் படிக்கிற மாணவர்கள் தேசிய அளவில் ஜாயிண்ட் எண்ட்ரன்ஸ் எக்சாம் எழுதுகிறார்கள். 40 ஆண்டுகளாக இது நடக்கிறது. இதனுடைய நீட்டிப்பு மாநில பல்கலைக் கழகங்களில் இல்லை. ஆகவே இந்த தீர்மானத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்று கூறினார். இதையடுத்து பாஜக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

**-பிரியா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *