ோவை மாநகராட்சி மேயர் பதவியைப் பிடிப்பதில் அதிமுக மற்றும் திமுகவினர் இன்று (பிப்ரவரி 19) வாக்கு பதிவு நடைபெறும் நாள் வரையில் போராடி வருகிறார்கள்.
திமுகவுக்காக கோவை மாவட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியும்,அதிமுகவுக்காக முன்னாள் அமைச்சர் எஸ். பி வேலுமணியும் வாக்காளர்களுக்கு போட்டி போட்டுக்கொண்டு பணத்தையும் பரிசுப் பொருட்களையும் வழங்கினர்.
இது தேர்தலுக்கு முதல் நாளான நேற்று இரவு வரை தொடர்ந்தது.
*சந்திரசேகர் *
38 வது வார்டில் அதிமுக வேட்பாளராக ஷர்மிளா சந்திரசேகர் போட்டியிடுகிறார். இவர்தான் அதிமுகவின் மேயர் வேட்பாளராக சுட்டிக் காட்டப்படுகிறார். அவரை எதிர்த்து போட்டியிடும் திமுக வேட்பாளர் அமிர்தவள்ளியின் கணவர் சண்முகசுந்தரம், கடந்த சட்டமன்றத் தேர்தலில் வடக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு நான்காயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தவர்.
இந்த வார்டில் உள்ள வாக்காளர்களுக்கு ஏற்கனவே திமுகவினர் இரண்டாயிரமும் அதிமுகவினர் மூவாயிரமும் விநியோகம் செய்துவிட்டனர்.
கடைசி நேரத்தில் நேற்று பிப்ரவரி 18ஆம் தேதி இரவு நேரத்தில் திமுகவினர் ஓட்டுக்கு 4 ஆயிரம் ரூபாய் விநியோகம் செய்தனர். இதை அறிந்த அதிமுகவினர் அடுத்த சில நிமிடங்களில் ஓட்டுக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுத்தனர்.
அடுத்த ஒரு மணி நேரத்தில் திமுகவினர் வீட்டுக்கு 15 கிராம் வெள்ளி கொலுசு கொடுத்தனர்.
கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது அப்போதைய போக்குவரத்து அமைச்சர் விஜயபாஸ்கரை எதிர்த்து கரூர் தொகுதியில் போட்டியிட்ட செந்தில் பாலாஜி… வாக்குப்பதிவு தொடங்குவதற்கு சில மணி நேரங்கள் முன்பாக ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு ஜோடி வெள்ளிக் கொலுசை கன கச்சிதமாக கொண்டு சேர்த்தார். கடைசி நேரத்தில் அந்த வெள்ளி கொலுசு தான் செந்தில்பாலாஜியின் வெற்றிக் கொலுசானது.
இப்போதும் கோவையில் செந்தில் பாலாஜி அதேபோல ஏதாவது செய்வார் என எதிர்பார்த்திருந்த அதிமுகவினர் ஒரு படி மேலே ஏறி ஓட்டுக்கு 10 கிராம் வெள்ளி காயின் கொடுத்தனர்.
* சண்முகசுந்தரம்*
அடுத்த ஒரு மணி நேரத்தில் திமுகவினர் வீட்டுக்கு 10 ஆயிரம் வவுச்சர் கொடுத்தனர். அவர்களுக்கு போட்டியாக அதிமுகவினர் 20 ஆயிரத்துக்கு வவுச்சர் வழங்கியுள்ளார்கள்.
இதே நிலைதான் கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளிலும் என்கிறார்கள் கோவை மக்கள்.
இன்று வாக்குப்பதிவு நடைபெற இருக்கும் நிலையில் வாக்குச் சாவடிக்கு வெளியே நின்று திமுகவும் அதிமுகவும் பணம் கொடுக்காதது தான் பாக்கி.
-**வணங்காமுடி**