உச்ச நீதிமன்றத்தின் முடிவு இதுதான்: பேரறிவாளன் வழக்கறிஞர்!

politics

பேரறிவாளனுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ள நிலையில், இவ்வழக்கில் வாதாடிய வழக்கறிஞர் பிரபு நீதிமன்றத்தில் நடந்தது குறித்து பேட்டியளித்துள்ளார்

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் 32 ஆண்டுகளாகச் சிறையில் உள்ளார். தற்போது பரோலில் உள்ள அவர் ஜாமீன் கேட்டு உச்ச மன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இவ்வழக்கில் நிபந்தனையுடன் உச்ச நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியது.

இதுதொடர்பாக உச்ச நீதிமன்ற வளாகத்தில் பேட்டி அளித்த பேரறிவாளன் தரப்பு வழக்கறிஞர் பாபு, “விடுதலை வழக்கின் இறுதி விசாரணையை எடுத்து வழக்கை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்பது நீதிமன்றத்தின் முடிவாக உள்ளது. ஆளுநர் தன்னுடைய அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தக் கூடாது எனவும் நீதிமன்றம் கருதுகிறது.

இந்தச்சூழலில் வழக்கை இறுதி விசாரணைக்கு எடுக்கும் முன் நடவடிக்கையாக ஜாமீன் கொடுத்துள்ளனர். நீதிமன்றத்தின் மறு உத்தரவு வரும் வரை பேரறிவாளன் ஜாமீனில் இருப்பார்.

இவ்வழக்கில் மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் மூன்று முறை அட்ஜார்மெண்ட் (ஒத்திவைப்பு) வாங்கினார். இவ்வழக்கில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.எம்.நடராஜன், வாதாடி முடித்துவிட்டார். அப்படி இருக்கும் போது மத்திய அரசுக்கு இந்த வழக்கை முடிக்கும் எண்ணம் இல்லை என்று நீதிமன்றத்துக்கு இன்று காலை தெரியவந்தது. அதனால் ஜாமீன் கொடுப்பதாக நீதிமன்றம் தெரிவித்தது.

இறுதி விசாரணையை எடுக்க மத்திய அரசு விரும்பாததால் அவர்களுக்கு செக் வைக்கும் வகையில் தான் ஜாமீன் வழங்கப்பட்டது. கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் இந்த வழக்கில் ஜாமீன் வழங்கக் கூடாது என அனைத்து வாதங்களையும் முன் வைத்தார். அதையும் மீறித்தான் ஜாமீன் வழங்கப்பட்டது. காரணம் என்னவென்றால் அப்போதுதான் இந்த வழக்கு முடிவுக்கு வரும்.

ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை சிறைவாசிக்குக் குடியரசுத் தலைவரால் விடுதலை கொடுக்க முடியாது. தூக்குத் தண்டனையாக இருந்தால், அதை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டுமானால் குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உள்ளது. சாதாரண 302 வழக்கில் குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் இல்லை . மாநில அரசாங்கத்துக்குத்தான் அதிகாரம் இருக்கிறது என நீதிபதிகள் முடிவு செய்துவிட்டனர்.

மத்திய அரசு தொடர்ந்து இந்த வழக்கில் முரண்பாடாகச் செயல்படுகிறது. 7 பேரை விடுதலை செய்யத் தமிழக அமைச்சரவை முடிவெடுத்துவிட்டது. மத்திய அரசாங்கத்தை மீறி இப்படி ஒரு முடிவை எடுத்துச் செயல்படுத்தினால், இது வழக்கமாகிவிடுமோ என்ற பயமும் மத்திய அரசுக்கு உள்ளது. அதனால், மாநில அரசுக்கு உரிமை இல்லை, மத்திய அரசுக்குத்தான் உரிமை இருக்கிறது என அவர்கள் தொடர்ந்து வலியுறுத்துகின்றனர்.

பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ள நிலையில், மற்றவர்களுக்கும் ஜாமீன் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மாநில அரசின் அமைச்சரவை முடிவை ஆளுநர் மதிக்காமல் இப்படி, தன்னிச்சையாகச் செயல்படுவது எந்த விதத்தில் நியாயம் என்று நீதிபதிகள் சொலிசிட்டர் ஜெனரலை பார்த்து கேள்வி எழுப்பினர்.

இதற்கு மாநில அரசுக்கு உரிமை இல்லை மத்திய அரசுக்குதான் உரிமை இருக்கிறது என்று அவர் கூறியவுடன், எங்கு அப்படி சொல்லப்பட்டிருக்கிறது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவரால் நேரடியாகப் பதில் சொல்ல முடியவில்லை. ஒட்டுமொத்தமாக மத்திய அரசு தங்களுக்குத்தான் உரிமை இருக்கிறது என்ற கூற்றை நிராகரித்துதான் இந்த உத்தரவை நீதிபதிகள் பிறப்பித்தனர்” என்றார்.

**-பிரியா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *