ராஜன் குறை
அமெரிக்க குடியரசுத் தலைவர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரான ஜோ பைடன் சென்ற வாரம் தன்னுடைய துணை குடியரசுத் தலைவர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் என்பவரை அறிவித்துள்ளார். சென்ற வருடம் கமலா ஹாரிஸ் குடியரசுத் தலைவர் வேட்பாளராகவே போட்டியிட முன்வந்தவர். அப்போது குடியரசுத் தலைவர் வேட்பாளராக முனையும் பத்து பன்னிரண்டு பேரில் அவரும் ஒருவராக இருந்ததால் அவர் குறித்து அதிகம் கவனம் செலுத்தப்படவில்லை. இப்போது நவம்பர் மாதம் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் அவர் ஜனநாயகக் கட்சி துணை குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளதில் வியப்பில்லை. ஜோ பைடன் அணி வெற்றி பெற கணிசமான வாய்ப்புள்ளதாகவே கருத்துக் கணிப்புகள் தெரிவிப்பதால் கமலா ஹாரிஸ் கிட்டத்தட்ட துணை குடியரசுத் தலைவர் ஆகிவிட்டதாகவே கருதலாம்.
இது ஏன் கவனத்திற்குரியதாக ஆகிறது என்றால் இதுவரை பெண்கள் யாரும் அமெரிக்காவில் துணை குடியரசுத் தலைவரானதில்லை. இருவர் போட்டியிட்டுள்ளார்கள்; ஆனால் வென்றதில்லை. கடந்த முறை குடியரசுத் தலைவர் பதவிக்கே ஹிலாரி கிளிண்டன் போட்டியிட்டு ஒரு சதவிகித வாக்கு வித்தியாசத்தில் டொனால்டு ட்ரம்ப்பிடம் தோற்றார். கல்வி கற்றவர் எண்ணிக்கையிலும், உயர் கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கையிலும், பல்துறை ஆய்வுகளிலும் உலகின் முன்னணி நாடாக உள்ள அமெரிக்காவில் பெண்கள் அரசின் மிக உயர்ந்த பதவிகளுக்கு, குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர் பதவிகளுக்கு வரமுடியாது என்ற நிலை அவமானத்திற்குரியதாகவே இருக்கிறது.
இங்கிலாந்தில் பெண்கள் அரசாண்டுள்ளார்கள். பிரதமராகவும் இருந்துள்ளார்கள். பல ஐரோப்பிய நாடுகளில் பெண்கள் உச்ச அதிகாரமுள்ள பதவிகளுக்கு வந்துள்ளார்கள். மூன்றாம் உலக நாடுகளிலும் இது நிகழ்ந்துள்ளது. ஆனால் அமெரிக்காவில் இன்னமும் பெண்கள் இந்த “கண்ணாடிக் கூரையை” உடைக்க முடியவில்லை. கண்ணாடிக் கூரை கண்ணுக்குத் தெரியாது; ஆனால் அதைக்கடந்து மேலே செல்ல முடியாது. கமலா ஹாரிஸ் இதை உடைத்தால் வரலாறு படைத்தவர் ஆவார். அநேகமாக நவம்பர் மாதம் இது நிகழ்ந்தேற வாய்ப்பு உள்ளது.
பெண் என்பதற்கு அடுத்தபடி அவருடைய முக்கிய அடையாளம் அவர் கறுப்பினத்தவர் என்பதுதான். அவரது தந்தை டொனால்டு ஹாரிஸ் ஜமைக்காவிலிருந்து அமெரிக்காவில் கல்வி பயில வந்த ஒரு கறுப்பினத்தவர். பொருளாதாரத்தில் ஆய்வு செய்த அவர் அமெரிக்காவில் பேராசிரியையாக பணியாற்றியவர். எனவே கமலா துணை குடியரசுத் தலைவர் பதவியேற்கும் முதல் பெண் என்பதாக மட்டுமன்றி, முதல் கறுப்பினப் பெண்ணாகவும் இருப்பார்.
இந்த இரு அடையாளங்களைத் தவிர கமலா ஹாரிஸுக்கு மூன்றாவது அடையாளம் ஒன்றும் இருக்கிறது. அது அவரது தாய் சியாமளா கோபாலன் சென்னையிலிருந்து அமெரிக்காவிற்கு ஆய்வுப்படிப்பிற்கு சென்றவர் என்பதுதான் அது. பார்ப்பன குடும்பத்தில் பிறந்த அவர் மார்பக புற்றுநோய் குறித்து ஆராய்ச்சி செய்தார். அறுபதுகளின் பிற்பகுதியில் அமெரிக்காவில் கறுப்பர்கள் சமத்துவத்திற்காக காந்திய வழியில் போராடியபோது சியாமளா அவர்களுக்கு ஆதரவாக இயங்கினார். டொனால்டு ஹாரிஸ் என்ற கறுப்பரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தனர். ஆனால் குழந்தைகள் சிறு வயதில் இருக்கும்போதே தம்பதியர் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இரண்டு பெண் குழந்தைகளையும் சியாமளாவே வளர்த்தார். அவர்களுக்கு கமலா, மாயா என்று இந்திய பெயர்களைச் சூட்டினாலும் கறுப்பின பெண்களாகவே உணரும்படி வளர்த்தார். சட்டக் கல்வி பயின்ற கமலா, டிஸ்டிரிக்ட் அட்டர்னியாக பணியாற்றி, அட்டர்னி ஜெனரலாகி, செனட்டராகி இன்று துணை குடியரசுத் தலைவர் வேட்பாளராக உயர்ந்துள்ளார்.
**பார்ப்பன / தமிழ் / இந்திய சமூகம் கற்க வேண்டியது என்ன?**
தமிழர்கள், இந்தியர்கள், அமெரிக்க ஆசியர்கள் அனைவருமே கமலா ஹாரிஸ் துணை குடியரசுத் தலைவராக ஆவதில் மகிழ்ச்சியடைய உரிமையும், காரணமும் இருக்கிறது. சமூக வலைதளங்களில் பார்ப்பன சமூகத்தை சார்ந்தவர்களும் மகிழ்ச்சியடைவதும், பெருமிதம் கொள்வதும் நிகழ்கிறது. அதிலும் தவறில்லை. ஆனால் பார்ப்பனர்கள் கமலா ஹாரிஸ் முன்மாதிரியிலிருந்து கற்பதற்கு எத்தனையோ அம்சங்கள் உள்ளன.
பார்ப்பன சமூகம் ஆங்கிலத்தில் ஆர்தடாக்சி எனப்படும் சனாதனத்தை காப்பதில் மிகவும் தீவிரமாக இயங்கிய சமூகம். மொத்த சமூகத்துக்குமான சாத்திரங்களை அதாவது விதிகளை இயற்றுபவர்களாகவும் பார்ப்பனர்கள் இருந்ததால் எப்போதுமே சாத்திர சம்பிரதாயங்களை வலியுறுத்துபவர்களாக இருந்தார்கள். காலனீய ஆட்சி நீதிமன்றங்களை, சட்டத் திட்டங்களை உருவாக்கியபோது தங்கள் சாத்திரங்களை இந்துக்களின் தனிப்பட்ட வாழ்க்கை, கலாச்சாரம் தொடர்பான சட்டங்களாக அனுசரிக்க செய்தவர்கள். அவர்கள் கடைப்பிடித்துக்கொண்டிருந்த சாத்திர சம்பிரதாயங்கள் பலவற்றை அறிந்தால் வியப்பாக இருக்கும். அவற்றில் பல வழக்கழிந்து போனாலும் இன்னும் சில இன்றும் நீடிக்கின்றன. கமலா ஹாரிஸை சொந்தம் கொண்டாட வேண்டுமென்றால் இவர்கள் மிகுந்த சுயபரிசீலனை செய்துகொள்ள வேண்டும். நானும் அதே சமூகத்தைச் சேர்ந்தவன் என்பதால் இதை உரிமையுடன் கூற முடியும்.
பார்ப்பனர்கள் முதலில் கப்பல் பயணம் செய்வதே சாத்திர விரோதமானது என்று ஓர் எண்ணம் கொண்டிருந்தார்கள். யாரும் தூர தேசங்களுக்குச் சென்றால் சாதி விலக்கம் செய்துவிடுவார்கள். இதில் தளர்வு ஏற்பட்டு, கல்கத்தாவில் நடக்கும் காங்கிரஸ் மாநாட்டுக்கு கப்பலில் சென்றாலும், அதில் வழங்கப்படும் உணவை உண்ணாமல், வீட்டிலிருந்தே பல நாட்களுக்கான உணவைக் கட்டிக்கொண்டு வந்து அதை தனியே அறையில் வைத்து சாப்பிடுவார்கள் என்பதை எம்.எஸ்.எஸ்.பாண்டியன், Brahmin & Non-Brahmins: Geneologies of Tamil Political Present என்ற நூலில் சுவைபட விவரித்துள்ளார். வெளியூர்களில் உணவருந்தினாலும் பார்ப்பனர்களே சமைத்த உணவைத்தான் சாப்பிடுவார்கள்.
மாமிச உணவை அருவருப்பதுடன், மாமிசம் சாப்பிடுபவர்களையே தாழ்வாகக் கருதுவார்கள். உணவுப்பழக்கங்களில் பன்மையையும், அவரவர் சுவையை மதிப்பது என்பதையும் பார்ப்பனர்கள் பழக வேண்டும். இட்லியை ரசிக்கும் கமலா ஹாரிஸ், மாமிச உணவையும் ரசித்து உண்கிறார். அதுவே இயல்பானது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். பன்றியோ, மாடோ உணவு விலக்கத்தை புனிதப்படுத்துவது தேவையற்றதும், பிற்போக்கானதுமாகும்.
பெண்களைப் பொறுத்தவரை கொடூரமான கட்டுப்பாடுகளை விதித்திருந்தார்கள். அவர்களை கல்வி பயிலவோ, வேலை பார்க்கவோ வீட்டுக்கு வெளியே அனுப்ப மாட்டார்கள். குழந்தைப் பருவத்திலேயே மணம் செய்துவைத்துவிடுவார்கள். அந்தப் பெண்களை மணந்த சிறுவர்கள் இறந்துவிட்டால் பூப்படையும் முன்னரே அப்பெண்கள் விதவைகளாகிவிடுவார்கள். அவர்களுக்கு மறுமணம் செய்விக்க மாட்டார்கள். இது போன்ற பெண் விரோத போக்குகளை எதிர்த்து சட்டம் கொண்டுவந்தால் அதை எதிர்ப்பார்கள். பெண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயதை 14 என நிர்ணயிக்கும் சாரதா சட்டம் கொண்டுவரப்பட்டபோது அதை எதிர்த்துப் போராடினார்கள். சாத்திரம் என்ற பெயராலும், கலாச்சாரம் என்ற பெயராலும் இது போன்ற போக்குகளை நியாயப்படுத்தினார்கள்.
**இன்றும் தொடரும் அகமணமுறை**
நூறாண்டுகளுக்கு முன் நிலவிய பல்வேறு மூடப்பழக்கங்கள் இன்று மாறிவிட்டன. ஆனாலும் இன்னமும் சில மூடப்பழக்கங்கள் தீவிரமாகத் தொடர்கின்றன. அதில் ஒன்றுதான் அகமணமுறை. அதாவது ஒரு சாதியைச் சார்ந்தவர்கள், அந்த சாதியைச் சேர்ந்தவர்களைத்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற நியதி பரவலாக சமூகத்தில் பின்பற்றப் படுகிறது. அபத்தமானதும், பண்பாட்டு முதிர்ச்சியில்லாத காட்டுமிராண்டித்தனமானதுமான இந்த நடைமுறை இன்றளவும் தீவிரமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. பார்ப்பனரல்லாத நிலவுடமை சாதியினர் தங்கள் வீட்டுப் பெண்கள் தலித் இளைஞர்களைக் காதலித்து மணந்தால், அவர்களை ஆணவக்கொலை செய்வது என்ற விபரீத நடைமுறையும் உள்ளது. பார்ப்பனர்கள் ஆணவக்கொலை செய்வதில்லை என்றாலும், அகமணமுறையை தீவிரமாகக் கடைப்பிடித்து வருகிறார்கள். எதற்காக இதைச் செய்ய வேண்டும், பிற சாதியினரை மணந்தால் என்ன தவறு என்பதை சிந்திக்க மறுக்கிறார்கள். தங்கள் சொந்தங்களுக்குள்ளேயே மணம் செய்யாமல், உட்சாதிப்பிரிவுகள் பிரச்சினையில்லை, Sub sect no bar என்று விளம்பரம் செய்வதையே முற்போக்காக நினைக்கிறார்கள்.
பார்ப்பன சாத்திரங்களே சட்டமாக இருந்த காலத்தில் பார்ப்பனர்கள், பார்ப்பனரல்லாதோரை திருமணம் செய்துகொண்டால் அது சட்டப்படி செல்லாது என்று தீர்ப்புகளே வழங்கப்பட்டது. அப்படி 1941ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட ஒரு தீர்ப்பைக் குறித்து அண்ணா ஆரியமாயை நூலில் எழுதியுள்ளார். இன்றைய நிலையில் பார்ப்பனர்களிடம் ஏன் அகமணமுறையை வலியுறுத்துகிறீர்கள் என்றால், எல்லா சாதியினரும் செய்கிறார்களே, ஆணவக்கொலையெல்லாம் செய்கிறார்களே என்று சொல்கிறார்கள். இது தொடர்பாக சாத்திரங்களை எழுதி, அவற்றை சட்டமாகவும் பாவித்தவர்கள் என்பதால் அகமணமுறையை உடைத்தெறிந்து சமூகத்துக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய பொறுப்பு பார்ப்பனர்களுக்கு இருக்கிறது.
சியாமளா கோபாலன் அதைத்தான் செய்துள்ளார். கறுப்பினத்தவரை மணந்தது மட்டுமன்றி பெண்களை கறுப்பினப் பெண்களாக வளர்த்துள்ளார். மனித இனங்களுக்குள் பேதம் பாராட்டாமல் அவற்றின் வித்தியாசங்களை போற்றக் கற்பதே பண்பாட்டு முதிர்ச்சியாகும். கமலா ஹாரிஸின் உயர்வுக்குப் பெருமை கொள்ளும் பார்ப்பனர்கள், தமிழர்கள், இந்தியர்கள் அகமணமுறை என்ற அருவருக்கத்தக்க பழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முன்வர வேண்டும். அகமணமுறையால் சாதிகளாகவும், இனங்களாகவும், மதங்களாகவும், தேசங்களாகவும் பிளவுபட்டிருக்கும் மானுடம் இந்த பேதங்களை ஒழித்து ஒன்றுபடுவதன் அடையாளமாக கமலா ஹாரிஸை போற்ற வேண்டும். குறிப்பாக பார்ப்பனர்கள் அகமணமுறை என்ற தங்கள் சனாதன மனோபாவத்தை விமர்சனத்திற்கு உட்படுத்தி, விட்டொழித்து புதிய மானுடம் உருவாக முன்னுதாரணமாக விளங்க வேண்டும்.
**கட்டுரையாளர் குறிப்பு**
ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com
�,”