இந்திய மசாலா பொருட்களில் 10 மடங்கு அதிக பூச்சிக்கொல்லியா?

இந்தியா

ஹாங்காங் மற்றும் சிங்கப்பூர் நாட்டை சேர்ந்த உணவு பாதுகாப்பு மையம் (CFS) உள்ளிட்ட உணவு ஒழுங்குமுறை ஆணையங்கள் சில நாட்களுக்கு முன் ஒரு அதிர்ச்சி ஆய்வு அறிக்கையை வெளியிட்டிருந்தது.

அதில், இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் மசாலா பொருட்களில், புற்றுநோய் பாதிப்பை ஏற்படுத்தும் எத்திலீன் ஆக்சைடு எனப்படும் பூச்சிக்கொல்லியின் அளவு, நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாக இருப்பதாக எச்சரித்தது.

இந்தியாவின் பிரபல மசாலா நிறுவனங்களான எவரெஸ்ட் மற்றும் எம்.டி.எச் நிறுவனங்களின் மசாலா பொருட்களில், இந்த எத்திலீன் ஆக்சைடின் அளவு அதிகமாக இருப்பதாக அந்த ஆய்வில் உணவு பாதுகாப்பு மையம் குறிப்பிட்டிருந்தது.

புற்றுநோய் குறித்து ஆய்வு நடத்தும் சர்வதேச மையம், இந்த எத்திலீன் ஆக்சைடை புற்றுநோய் பாதிப்பை ஏற்படுத்தும் முதல் தர காரணி என வகைப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

உணவு பாதுகாப்பு மையம் (CFS) வெளியிட்ட ஆய்வறிக்கையில், எம்.டி.எச் நிறுவனத்தின் மெட்ராஸ் கறி மசாலா, சாம்பார் மசாலா, கறி மசாலா, மற்றும் எவரெஸ்ட் நிறுவனத்தின் மீன் கறி மசாலா ஆகிய மசாலா பொருட்களில், இந்த எத்திலீன் ஆக்சைடு அளவு நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து, இந்த பொருட்களுக்கு அங்கு தடை விதிக்கப்பட்டது.

முன்னதாக, இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் 527 உணவுப் பொருட்களில், உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் வேதிப்பொருட்கள் இருப்பதாக, அந்த பொருட்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்திருந்தது.

இந்த செய்திகள் அந்த நாடுகளிலும் மட்டுமின்றி, இந்தியாவிலும் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இப்படியான சூழ்நிலையில், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மசாலா மற்றும் மூலிகை பொருட்களில் இருக்கும் பூச்சிக்கொல்லிகளின் நிர்ணயிக்கப்பட்ட அளவை 10 மடங்கு அதிகரித்துவிட்டதாக, ஒரு பெரும் அதிர்ச்சி தகவல் வெளியாகி மக்களை பீதியில் ஆழ்த்தியது.

இந்நிலையில், இந்த தகவல் தவறானது மற்றும் தீங்கிழைக்கக்கூடியது என அதற்கு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது.

“உலகில் உணவுகளுக்கு மிகக் கடுமையான தரநிலைகளை கொண்ட நாடுகளில் ஒன்று, இந்தியா”, என தான் வெளியிட்ட அறிக்கையில் FSSAI தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், இந்தியாவில் தயாரிக்கப்படும் அனைத்து நிறுவனங்களின் மசாலா பொருட்களை விரிவான சோதனைக்கு உட்படத்த FSSAI உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து, அனைத்து மாநில அரசுகளுக்கும் ஒரு சிறப்பு உத்தரவை FSSAI வெளியிட்டுள்ளதாக தெரிகிறது.

மேலும், FSSAI தனது இந்த சோதனையை பால், அது சார்ந்த பொருட்கள் மற்றும் செறிவூட்டப்பட்ட அரிசி ஆகியவற்றின் மீதும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

– மகிழ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

முஸ்லீம்களை எதிரியாக்காமல் இந்து அடையாளத்தை உருவாக்க முடியுமா?

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *