அமேதியில் காங்கிரஸ் கட்சி அலுவலகம் தாக்குதல்: போலீஸ் குவிப்பு!

அரசியல்

உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார்களை மர்ம நபர்கள் அடித்து நொறுக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரும் சன்ஸ்பென்ஸுக்கு பிறகு கடந்த மே 3-ஆம் தேதி அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி அறிவித்திருந்தது.

அதன்படி ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும், அமேதி தொகுதியில் கிஷோரி லால் சர்மாவும் போட்டியிடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து இருவருமே அன்றைய தினம் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்தனர். குறிப்பாக கடந்த தேர்தலை போல இந்த நாடாளுமன்ற தேர்தலிலும் ராகுல் காந்தி அமேதி தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் ரேபரேலியில் களமிறக்கப்பட்டார்.

இந்தநிலையில், அமேதியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை மர்ம நபர்கள் நேற்று இரவு தாக்கினர். குறிப்பாக காங்கிரஸ் கட்சி அலுவலகத்தின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களை அடித்து நொறுக்கியுள்ளனர்.

இந்த சம்பவம் அறிந்து அமேதி காங்கிரஸ் மாவட்ட செயலாளர் பிரதீப் சிங்கால் காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு விரைந்தார். அங்கு ஏராளமான காவல்துறை அதிகாரிகள் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பக்கத்தில், “ஸ்மிருதி ராணியும் அவரது பாஜக ஆதரவாளர்களும் அமேதி தொகுதியில் கடும் அச்சத்தில் உள்ளனர்.

தோல்வி பயத்தால் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார்களை தடி மற்றும் கம்பிகளை கொண்டு சேதப்படுத்தியுள்ளனர். மேலும், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர்.

மேலும், பொதுமக்கள் சிலரின் வாகனங்களையும் தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து விசாரிக்காமல் காவல்துறை வேடிக்கை பார்க்கிறது. அமேதி தொகுதியில் பாஜக தோல்வி அடையும் என்பதற்கு இந்த சம்பவம் சாட்சி” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டக் அவுட்… “தோனி இப்படி செய்திருக்க வேண்டும்”: விமர்சித்த இர்பான் பதான்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *