நீர்நிலை ஆக்கிரமிப்புகளை தவிர்க்க நீதிமன்றம் யோசனை!

politics

நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது.

தமிழ்நாடு முழுவதும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி 40க்கும் மேற்பட்ட வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் அனைத்தும் ஒன்றுசேர்க்கப்பட்டு மொத்தமாக பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு அமர்வு முன்பு கடந்த டிசம்பர் மாதம் முதல் விசாரிக்கப்பட்டு வருகிறது.

கடந்த டிசம்பர் 1ஆம் தேதி இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, மாநிலம் முழுவதும் உள்ள நீர்நிலைகளின் எண்ணிக்கை, பரப்பு உள்ளிட்ட விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய தலைமைச் செயலாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையடுத்து கடந்த டிசம்பர் 8ஆம் தேதி தலைமைச் செயலாளர் இறையன்பு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அந்த அறிக்கையில் முழு விவரங்கள் இல்லை என்று கூறி தலைமைச் செயலாளரை டிசம்பர் 16 அன்று நேரில் ஆஜராக உத்தரவிட்டனர்.

அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆஜராகி தமிழகத்தில் நீர்நிலைகள் குறித்த விவரங்கள் முழுமையாக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும், டிசம்பர் 16ஆம் தேதி தலைமைச் செயலாளர் ஆஜராக வேண்டும் என்ற உத்தரவுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், தலைமைச் செயலாளர் ஆஜராவதிலிருந்து நீதிபதிகள் விலக்கு அளித்தனர்.

இதற்குப் பிறகு தலைமைச் செயலாளர் தரப்பில் ஆக்கிரமிப்புகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் தமிழ்நாடு முழுவதும் உள்ள நீர்நிலைகளில் 47 ஆயிரத்து 707 ஏக்கர் பரப்பளவு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும், நீர்நிலை ஆக்கிரமிப்புகளை தடுக்கவும், அகற்றவும் வருவாய்த்துறை உள்ளிட்ட பிற துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கும் விதமாக சட்டத்திருத்தம் கொண்டுவர அரசு முடிவு செய்துள்ளது. அதுமட்டுமல்ல ஆக்கிரமிப்பாளர் மீது குற்ற நடவடிக்கை எடுக்கவும் இந்த சட்டத்தில் பிரிவுகள் சேர்க்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற தவறினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் தெரிவிக்க நேரிடும். நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் இல்லாமல் பார்த்துக் கொள்வது அதிகாரிகளின் கடமை. ஒருவேளை அகற்றப்பட்ட நீர்நிலைகளில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் முளைத்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளிவைத்தனர்.

இந்த நிலையில் இன்று(ஜனவரி 27) பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு அமர்வு நீர்நிலை ஆக்கிரமிப்பு தொடர்பான அனைத்து வழக்குகளிலும் தீர்ப்பு வழங்கியுள்ளது.

அதில், “ஆக்கிரமிப்புகளை தவிர்க்க பதிவுத்துறையினர், நீர்நிலை நிலங்களை பதிவு செய்ய கூடாது என உத்தரவிட்ட நீதிபதிகள், நீர்நிலைகளை ஆக்கிரமிக்கவில்லை என விண்ணப்பதாரரிடம் உத்தரவாதம் (Declaration) பெற்ற பிறகே, குறிப்பிட்ட நிலத்துக்கு சொத்துவரி வசூலிக்க வேண்டும்.

ஆக்கிரமிப்பு அல்ல என உத்தரவாதம் பெறாமல் மின் இணைப்போ, குடிநீர் இணைப்போ வழங்க கூடாது. அனுமதி கோரும் கட்டிடம் நீர்நிலைகளில் இல்லை என ஆய்வு மூலம் உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு செய்த நிலங்களுக்கு கட்டிட ஒப்புதலோ, அனுமதியோ வழங்கியிருந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கையுடன், குற்ற நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

**-வினிதா**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *