மின்சாரக் கட்டணத்தை குறைக்க வேண்டுமென முதல்வருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
மின்சாரக் கட்டணம் தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்த மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், “மின்சாரச் சட்ட விதிகளின்படி ஊரடங்கு காலத்தின் போது முந்தைய மின் கட்டணத் தொகையை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே புதிய மின் கட்டணம் கணக்கிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்தது. ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் 18 முதல் 20 மணி நேரம் வீட்டிலேயே இருப்பதால் மின் நுகர்வு அதிகமாகி மின் கட்டணம் உயர்ந்து இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக நேற்று (ஜூலை 8) அறிக்கை வெளியிட்ட திமுக தலைவர் ஸ்டாலின், “முந்தைய மாதத்தில் செலுத்திய கட்டணத்திற்குரிய யூனிட்களை கழிக்காமல், செலுத்திய பணத்தை மட்டும் கழிப்பதால்தான் இந்தக் கட்டண உயர்வுப் பிரச்சினை என்பதை இன்னும் மின்துறை அமைச்சர் தங்கமணியோ அல்லது முதலமைச்சர் பழனிசாமியோ உணராமல் இருப்பது கொரோனா ஊரடங்கை விட மிகக் கொடுமையாக இருக்கிறது” என்று சாடியுள்ளார்.
ஊரடங்கைப் பிறப்பித்தது அரசு, அது பேரிடர் நிர்வாகத்தின் கீழ் கொரோனாவை தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட அரசின் நடவடிக்கை. ஆகவே அந்த காலகட்டத்தில் வேலை இல்லை; சம்பளமும் இல்லை. பல வகையிலும் வருமானம் ஏதுமின்றி – வாழ்வாதாரத்தை இழந்து தவிப்போரிடம் அதிமுக அரசு ஏன் மனமிறங்க மறுக்கிறது. பேரிடரைக் காரணம் காட்டி டெண்டர் விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் கொள்முதல் செய்ய முடிகிற அரசுக்கு, அதையே காரணம் காட்டி கட்டணத்தை ஏன் குறைக்க முடியவில்லை என்று கேள்வி எழுப்பிய ஸ்டாலின்,
“வாழ்வாதாரம் மற்றும் வருமான இழப்பை ஏன் பேரிடரின் ஓர் அங்கமாகக் கருதிட முதலமைச்சர் பழனிசாமி முன்வரவில்லை?. ஊரடங்கால் நுகர்வோர் அதிக மின்சாரத்தைப் பயன்படுத்தி விட்டதாக ஒரு வாதத்தை அமைச்சரும், அதிமுக அரசும் மீண்டும் மீண்டும் கூறி மக்களைக் கேவலப்படுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது. அனைத்து மக்களும் வீட்டிற்குள் முடங்கியதற்கு அரசு பிறப்பித்த ஊரடங்குதான் காரணமே தவிர, பிழைப்புத் தேடி வெளியில் செல்லத் தயாராக இருந்த மக்கள் அல்ல” என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், “அதிமுக அரசு மேற்கோள் காட்டும் மின்சாரச் சட்டம், 2003ன்படியே மின் நுகர்வோருக்கு கொரோனா பேரிடரை ஒரு சிறப்பு நேர்வாகக் கருதி மின் கட்டணத்தைக் குறைக்கலாம். அதில் எவ்விதத் தடையும் இல்லை. மனம்தான் முதலமைச்சருக்கும், அமைச்சருக்கும் தடையாக இருக்கிறது” என்றும், கொரோனா காலத்திற்குரிய அதாவது 31.7.2020 வரையிலான ஊரடங்குக் காலத்திற்குக் கேரள மாநில அரசு அறிவித்துள்ளது போல் வீட்டுப் பயன்பாட்டிற்கான 70 சதவீத மின்கட்டணத்தைச் செலுத்தினால் போதும் என்று அறிவித்திட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார் ஸ்டாலின்.
**எழில்**
�,