ராஜேந்திர பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன்!

politics

முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி ஆவின் உள்ளிட்ட அரசுத் துறைகளில் வேலை வாங்கித் தருவதாக 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் ராஜேந்திர பாலாஜி மீது விருதுநகர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் 2 வழக்குகள் பதிவு செய்தனர்.

இதில் அவருக்கு முன் ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில் ராஜேந்திர பாலாஜி தலைமறைவானார். இதையடுத்து அவரை கடந்த ஜனவரி 5ஆம் தேதி கர்நாடகாவில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்து விருதுநகர் அழைத்து வந்தனர். அவர் 15 நாள் காவலில் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனிடையே ராஜேந்திர பாலாஜி முன்ஜாமீன் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். ஆனால் அவர் கைது செய்யப்பட்டதால் ஜாமீன் கேட்டு ராஜேந்திர பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் துஷ்வந்த் தவே முறையிட்டார்.

ஆனால், தமிழக அரசு சார்பில் ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்ட விவகாரத்தில் அரசியல் காரணங்கள் இல்லை. அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றப்பட்டவர்கள் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் ஆவர். இதுவரை 32 பேர் புகார் கொடுத்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஜனவரி 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இவ்வழக்கு மீண்டும் இன்று(ஜனவரி 12) விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பில், வேலை வாங்கி தருவதாகக் கூறி ஏமாற்றி பணம் வசூலித்த நபர்களுக்கு எந்தவித பாதுகாப்பும் உச்ச நீதிமன்றம் வழங்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டது. முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டவுடன் ராஜேந்திர பாலாஜி ஏன் தலைமறைவாக வேண்டும் என்றும் கேள்வி எழுப்பப்பட்டது.

அப்போது, ‘ராஜேந்திர பாலாஜி கைதுக்குப் பின்னால் இருக்கும் அரசியல் பற்றி கவலை இல்லை. ராஜேந்திர பாலாஜியை கைது செய்கிறோம் என்ற பெயரில் எதற்காக அவர்களது உறவினர்கள் மற்றும் வழக்கறிஞர்களை காவல்துறையினர் துன்புறுத்தினர். இத்தகைய செயல்பாடுகள் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல’ என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

இதையடுத்து அரசு தரப்பில் ராஜேந்திர பாலாஜி விவகாரத்தை ஒருதலைபட்சமாக அணுகக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கு, ஒருதலைபட்சமாக அணுகவில்லை என்று தெரிவித்த உச்ச நீதிமன்றம், ராஜேந்திர பாலாஜிக்கு நான்கு வார காலத்திற்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தது.

ராஜேந்திர பாலாஜி தனது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும், விசாரணை அமைப்புகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். விருதுநகர் மாவட்டத்தை விட்டு வெளியூர்களுக்கு செல்லக் கூடாது என்று நிபந்தனை விதித்தது.

மேலும் இந்த வழக்கு விசாரணையை மூன்று வாரங்களுக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.

**-பிரியா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *